
கேரளத்தைத் தொடர்ந்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ராகுல் காந்தியை தமிழகத்துக்கும் அழைக்க தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முடிவு செய்துள்ளது.
நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தமிழகமும், கேரளமும் மட்டுமே காங்கிரஸுக்குக் கை கொடுத்தன.
தமிழகத்தைப் பொருத்தவரை பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்னிறுத்தியே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தலைச் சந்தித்தார். அதை ஏற்கும் வகையில்தான் தேர்தல் முடிவுகள் வந்தன. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற 39 தொகுதிகளில் திமுக கூட்டணி மொத்தம் 38 தொகுதிகளைக் கைப்பற்றியது. போட்டியிட்ட 10 தொகுதிகளில் காங்கிரஸ் 9 தொகுதிகளில் வெற்றிபெற்றது.
தமிழகத்தில் மட்டும் ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்று சுமார் 52 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் வாக்களித்துள்ளனர். அதேபோல, கேரளமும் காங்கிரஸுக்கு கைகொடுத்தது. அங்கு உள்ள 20 மக்களவைத் தொகுதிகளில் 15 தொகுதிகளைக் காங்கிரஸ் கைப்பற்றியது. கேரளத்தில் காங்கிரஸுக்கு 37.27 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.
நேரு குடும்பத்தின் பாரம்பரிய தொகுதியான அமேதி தொகுதி கைகொடுக்காத நிலையில், கேரளத்தின் வயநாடு தொகுதியே ராகுல் காந்திக்கு கைகொடுத்தது. அங்கு ராகுல் அபார வெற்றிபெற்றார். அதைத் தொடர்ந்து கேரளத்தின் வயநாடு பகுதி மக்களைச் சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில், ராகுல் தமிழகத்துக்கு வருவாரா என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியிடம் கேட்டபோது, ""ராகுல் காந்தியைத் தமிழகத்துக்கு அழைக்க முடிவு செய்துள்ளோம்'' என்றார்.
மேலும், ""நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியே மீண்டும் போட்டியிடுமா'' என்று கேட்டதற்கு, இது குறித்து ""கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசித்து முடிவு செய்வோம்'' என்றார் .
""முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்காக மாநிலங்களவை உறுப்பினர் பதவியை திமுகவிடம் காங்கிரஸ் கேட்கிறதா?'' என்று கேட்டபோது, ""அது குறித்து எதுவும் தெரியாது. இது பத்திரிகைகளில் வரும் தகவல்தான்'' என்றார் கே.எஸ்.அழகிரி.