சுடச்சுட

  

  ஆக்கிரமிப்புகளால் 265 ஏக்கரில் இருந்து 50 ஏக்கராக சுருங்கிய வேளச்சேரி ஏரி

  By  ம. பாவேந்தன்  |   Published on : 11th June 2019 10:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  VELC1

  "ஒரு காலத்தில் வேளச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு நீர்பிடிப்புப் பகுதியாகவும், மீனவர்களுக்கு முக்கிய வாழ்வாதாரமாகவும் விளங்கிய இந்த ஏரியில் தற்போது, சுற்றுப்புற குடியிருப்புகளின் கழிவுநீரும், குப்பைகள் மட்டுமே நிறைந்து மாசடைந்து காணப்படுகிறது."

  தொடர் ஆக்கிரமிப்புகள் காரணமாக 265 ஏக்கர் பரப்பளவில் இருந்த வேளச்சேரி ஏரி 50 ஏக்கராக சுருங்கி விட்டது. ஆக்கிரமிப்புக்குள்ளான ஏரி நிலங்களை அரசு மீட்டெடுத்து, தூர்வார வேண்டும் என்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.
   பெருநகர சென்னை மாநகராட்சியின் அடையாறு மண்டலத்துக்கு உள்பட்ட பகுதியில் அமைந்துள்ளது வேளச்சேரி ஏரி. வேளச்சேரியில் இருந்து ஆதம்பாக்கம் செல்லும் சாலையில் 265 ஏக்கர் பரப்பளவில் இந்த ஏரி பரந்து விரிந்திருந்தது. மக்கள்தொகைப் பெருக்கம், நகர்ப்புற வளர்ச்சி காரணமாகவும் ஏரியின் 53 ஏக்கர் நிலத்தை தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்துக்கும், 34 ஏக்கர் நிலத்தை குடிசை மாற்று வாரியத்துக்கும் தமிழக அரசு வழங்கியது. மேலும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் இந்த ஏரி இரண்டாகப் பிரிக்கப்பட்டு 100 அடி சாலையும் அமைக்கப்பட்டது.
   இந்த ஏரி பகுதியில் போதிய கண்காணிப்பு மேற்கொள்ளாத காரணத்தினால் திரௌபதி அம்மன் கோயில் தெரு, ஜகனாதபுரம், ராஜலட்சுமி நகர், வேளச்சேரி 100 அடி சாலை, அஷ்டலட்சுமி நகர், காமராஜர்புரம், அம்பேத்கர் நகர் ஆகிய பகுதிகளில் ஏரியை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டன. இதன் விளைவாக, 265 ஏக்கராக பரந்து விரிந்து காணப்பட்ட வேளச்சேரி ஏரி, ஆக்கிரமிப்புகளால் தற்போது 50 ஏக்கராக சுருங்கி உள்ளது.
   ஒரு காலத்தில் வேளச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு நீர்பிடிப்புப் பகுதியாகவும், மீனவர்களுக்கு முக்கிய வாழ்வாதாரமாகவும் விளங்கிய இந்த ஏரியில் தற்போது, சுற்றுப்புற குடியிருப்புகளின் கழிவுநீரும், குப்பைகள் மட்டுமே நிறைந்து மாசடைந்து காணப்படுகிறது.
   ஆக்கிரமிப்பை மீட்டெடுக்க வேண்டும்: இதுகுறித்து கிரீன்வாய்ஸ் அமைப்பின் நிறுவனர் ராகவன் கூறியதாவது: இந்த ஏரியைச் சீரமைக்க கடந்த 2010-இல் ரூ. 7 கோடி செலவில் ஏரியைச் சுற்றி படகுக் குழாம், நடைப்பயிற்சிப் பாதை, இருக்கைகள் அமைக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்தது. ஆனால், 2016-இல் வேளச்சேரி 100 அடி சாலையில் உள்ள ஏரிப் பகுதியில் சிமெண்ட் தரை மட்டும் அமைக்கப்பட்டது. அதன் பின் எந்தப் பணியும் நடைபெறவில்லை. இதைத் தொடர்ந்து, 2017-இல் ரூ. 25 கோடி செலவில் படகுக் குழாம், பூங்கா, கட்டண வாகன நிறுத்தும் இடம் ஆகியவை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுநாள் வரை எந்தத் திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. இந்த ஏரி ஆக்கிரமிப்பு காரணமாக மழை காலங்களில் நீர் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தை மீட்டெடுப்பதுடன், இந்த ஏரியைத் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நடவடிக்கை எடுக்க காலதாமம் செய்தால் இதுதொடர்பாக நீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தொடர முடிவு செய்துள்ளோம் என்றார்.
   இதுகுறித்து வேளச்சேரி ஏரியைத் தூய்மைப்படுத்தும் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை நிர்வாகி வெண்ணிலா கூறுகையில், "குப்பை, கழிவுநீரால் இந்த ஏரி மிகவும் பாழடைந்துள்ளது. தற்போது நடைபெற்ற தூய்மைப் பணியில் ஏரியில் இருந்த குப்பைகள் அகற்றப்பட்டன. ஏரியைச் சுற்றி மரக்கன்றுகள் நடப்பட்டதுடன், 2 இடங்களில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன' என்றார்.


   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai