சுடச்சுட

  

  மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை: ஜப்பானிய நிதிக் குழு ஆய்வு  

  By DIN  |   Published on : 11th June 2019 01:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  aims

  மதுரை தோப்பூரை அடுத்த ஆஸ்டின்பட்டி அருகே எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் ஜப்பானிய நிதிக் குழுவினர் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
   மதுரை அருகே ஆஸ்டின்பட்டியை அடுத்த கோ. புதுப்பட்டி யில் 224.24 ஏக்கர் பரப்பளவில் 750 படுக்கை வசதி, 16 அறுவை சிகிச்சை கூடங்கள், 100 இடங்கள் கொண்ட மருத்துவக் கல்லூரி, 60 இடங்கள் கொண்ட செவிலியர் கல்லூரி உள்ளிட்ட வசதிகளுடன் எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் அமைய உள்ளது.
   இந்நிலையில், பி.எம்.எஸ்.எஸ்.ஒய். (பிரதம மந்திரி ஸ்வராஜ் சுரக்ஷா) இயக்குநர் சஞ்சய் ராய் தலைமையில், ஜப்பானிய நிதிக் குழு இந்திய பிரிவு தலைமை ஒருங்கிணைப்பாளர் அதிதி பூரா தலைமையில் 10-க்கும் மேற்பட்டோர் திங்கள்கிழமை எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் ஆய்வு குறித்து மருத்துவக் கல்வி இயக்கக துணை இயக்குநர் சபிதா கூறியது:
   ஜப்பான் கடனுதவியுடன் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக ஜப்பானிய நிதிக் குழுவினர் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் ஆய்வு செய்ய வந்துள்ளனர்.
   ஜப்பானிய நிதிக் குழுவினர் மருத்துவமனை அமைய தேவையான நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதா, மருத்துவமனை அமைக்க தேவையான வசதிகள் உள்ளனவா என ஆய்வு செய்தனர்.
   ஏற்கெனவே சுகாதாரத்துறை வசம் இருந்த 224. 24 ஏக்கர் நிலம் மாவட்ட ஆட்சியரிடம் முழுமையாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதனால் நிலத்தை பொருத்தவரை பிரச்னை இல்லை.
   ஆய்வுக்கு பின்னர் ஜப்பானிய நிதிக் குழுவினர் ஆலோசனை செய்து நமக்கு தேவையான நிதி குறித்து ஆலோசித்து முடிவு செய்வர்.
   தற்போது முதல் கட்டமாக மருத்துவமனையைச் சுற்றி சுற்றுச் சுவர் கட்ட மத்திய அரசு ரூ. 15 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. அந்தப் பணிகள் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கி, 3 மாதங்களில் நிறைவுபெறும்.
   மருத்துவமனை கட்டுமானப் பணிகள் படிப்படியாக தொடங்கி நடைபெறும். கட்டடப் பணிகள் நடைபெறும்போது மருத்துவமனைக்கு தேவையான குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட பணிகளும் நடைபெறும்.
   ஜப்பானிய நிதிக் குழுவினர் ஏற்கெனவே தமிழகத்திற்கு கடன் வழங்கியுள்ளனர். தமிழக அரசு மீது அவர்களுக்கு நல்ல நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதனால் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட கடனுதவி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
   ஆய்வின்போது, மதுரை அரசு மருத்துவமனை டீன் வனிதா, வட்டாட்சியர் நாகராஜன், வருவாய் ஆய்வாளர் தங்கபாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai