இரட்டை இலையும் இரட்டைத் தலைமையும்!

மிகப்பெரிய சோதனையான காலகட்டத்தில் இரட்டைத் தலைமையின் கீழ், இரட்டை இலையின் செல்வாக்கில் நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக 9 இடங்களைக் கைப்பற்றி தனது
இரட்டை இலையும் இரட்டைத் தலைமையும்!

மிகப்பெரிய சோதனையான காலகட்டத்தில் இரட்டைத் தலைமையின் கீழ், இரட்டை இலையின் செல்வாக்கில் நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக 9 இடங்களைக் கைப்பற்றி தனது ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.
 இடைத்தேர்தல் நடந்த 13 பேரவைத் தொகுதிகளில் தொடக்கத்தில் முன்னணியில் இருந்த ஆளும் அதிமுக, மிகக் குறைவான வித்தியாசத்தில்தான் 4 தொகுதிகளை திமுகவிடம் இழந்து, 9 தொகுதிகளில் வெற்றி பெற்று தனது ஆட்சியை காப்பாற்றிக்கொண்டிருக்கிறது.
 அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கிய 1972 முதல் ஜானகி ராமச்சந்திரன், ஜெயலலிதா, அதைத் தொடர்ந்து எடப்பாடி கே.பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகிக்கும் இன்றைய காலகட்டம் வரை, அதிமுக தனது தொண்டர்களையும், வாக்காளர்களையும் தக்க வைத்துக் கொண்டிருப்பதற்கு இரட்டை இலைச் சின்னம்தான் மிக முக்கியமான காரணம் என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
 அந்தக் கட்சியின் எழுச்சிக்கு அடிநாதமாக இருப்பது இரட்டை இலை. கட்சிக்குள் எத்தனை கோஷ்டி பூசல்கள் இருந்தாலும் தேர்தலைச் சந்திக்கும்போது ஒருங்கிணைந்து, எம்ஜிஆரின் சின்னமான இரட்டை இலை தோற்றுவிடக்கூடாது என்கிற வெறித்தனமான ஈடுபாட்டுடன் களப்பணியாற்றி, வெற்றியை வசப்படுத்தும் மாபெரும் தொண்டர்கள் கூட்டம்தான் அதிமுகவின் மிகப்பெரிய பலம்.
 6 மாதங்களில் மாபெரும் வெற்றி: கட்சி தொடங்கிய 6 மாதங்களிலேயே திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றியை ஈட்டியது. எம்ஜிஆர் என்ற ஒற்றைத் தலைமையில் 1977, 1980, 1985 ஆகிய மூன்று தேர்தல்களில் அதிமுக தொடர்ந்து ஆட்சி அமைத்தது. திமுக தலைவர் கருணாநிதியால்கூட அசைக்க முடியாத ஆளுமையாக எம்ஜிஆர் இருந்த நிலையிலும், அவரது தலைமைக்கு எதிராக எஸ்.டி.சோமசுந்தரம் உள்பட சிலர் அவ்வப்போது போர்க்கொடி தூக்கினர். ஆனால், தனது அரசியல் சாதுர்யத்தால் அவர்களை எல்லாம் எளிதாக எதிர்கொண்டார் எம்ஜிஆர். அந்த வெற்றிகள் கட்சியின் சின்னமான இரட்டை இலையைத் தொண்டர்கள் மத்தியில் மேலும் அழுத்தமாகப் பதிவு செய்தன.
 ஜெ.-ஜா. அணி: 1987-இல் எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு, அதிமுகவில் எம்ஜிஆரின் மனைவி ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் ஓர் அணியும், ஜெயலலிதா தலைமையில் மற்றோர் அணியும் உருவாகி இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டது. இரட்டை இலைச் சின்னம் இல்லாத நிலையில், 1989 பேரவைத் தேர்தலில் இரட்டை புறா சின்னத்தில் போட்டியிட்ட ஜானகி தலைமையிலான அணிக்கு மாநிலம் முழுவதும் 9 .19 சதவீத வாக்குகளே கிடைத்தன. ஆனால், சேவல் சின்னத்தில் போட்டியிட்ட ஜெயலலிதா தலைமையிலான அணிக்கு 22.37 சதவீத வாக்குகள் கிடைத்தன.
 மீண்டும் ஒற்றைத் தலைமை: இதைத் தொடர்ந்து, தனக்கான செல்வாக்கு குறைவாக இருக்கிறது என்பதை உணர்ந்துகொண்டு அரசியலில் இருந்து ஜானகி விலகியதால், ஜெயலலிதா எனும் ஒற்றைத் தலைமையின் கீழ் மீண்டும் அதிமுக செயலாற்றத் தொடங்கியது. இதையடுத்து நடந்த மருங்காபுரி, மதுரை கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்களில் இரட்டை இலை மீண்டும் வெற்றிச் சின்னமாக மாறியது.
 தொடர்ந்து, ஜெயலலிதா தலைமையின் கீழ் அதிமுக 1991-இல் 59.79 சதவீத வாக்குகளுடன் ஆட்சியைப் பிடித்தாலும், 1996 பேரவைத் தேர்தலில் 26.10 சதவீதமாக வாக்கு வங்கி சரிந்ததால் ஆட்சியை இழந்தது. அப்போதும், ஜெயலலிதாவுக்கு எதிராக சு.திருநாவுக்கரசர் போன்றவர்கள் போர்க்கொடி தூக்கினர். ஆனால், ஜெயலலிதாவின் வசீகரத் தலைமைக்கு முன்னால் போர்க்கொடி தூக்கியவர்களால் எதிர்த்து நிற்க முடியவில்லை. ஜெயலலிதாவுக்கும் இரட்டை இலை மிகப்பெரிய பலமாக இருந்தது.
 வரலாற்றுச் சாதனை: இதையடுத்து, 2001-இல் 50.09 சதவீத வாக்கு வங்கியுடன் மீண்டும் முதல்வரானார் ஜெயலலிதா. 2006-இல் ஜெயலலிதாவால் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள முடியாவிட்டாலும், 39.91 சதவீத வாக்குகளை அதிமுக பெற்றதால், திமுகவால் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் சிறுபான்மை பலத்துடன் கூடிய ஆட்சியையே அமைக்க முடிந்தது. ஆனால், 2011-இல் 51.93 சதவீத வாக்குகளுடனும், 2016-இல் 41 சதவீத வாக்குகளுடனும் அதிமுக ஆட்சியைத் தொடர்ந்து இரண்டு முறை பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்தது.
 ஜெயலலிதா தலைமையிலான ஒற்றைத் தலைமைக்கு கடைசியாக கிடைத்த வாக்கு விகிதம் 41%. இப்போது எடப்பாடி பழனிசாமி-பன்னீர் செல்வம் தலைமையிலான இரட்டைத் தலைமையின் கீழ் இயங்கும் அதிமுகவுக்கு, அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 38.2% வாக்குகள் கிடைத்திருக்கின்றன என்பதிலிருந்து, அதிமுக மிகப்பெரிய செல்வாக்குச் சரிவை அடைந்துவிடவில்லை என்பது தெரிகிறது.
 மவுசு குறையாத இரட்டை இலை: எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் இதுவரை இரண்டாம் கட்டத் தலைவர்களாக இருந்ததால், மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்த அனுபவம் குறைவுதான். ஆனால், கட்சித் தலைமைக்கு வந்த ஓராண்டுக்குள் சந்தித்த தேர்தலில், 38.2% வாக்குகளைத் தக்கவைப்பது என்பது குறிப்பிடத்தக்க சாதனை. தலைமுறைகள் தாண்டினாலும் எம்ஜிஆரின் இரட்டை இலைச் சின்னத்துக்கு இன்னமும் மக்கள் மத்தியில் ஆதரவு குறையவில்லை என்பதையே இது காட்டுகிறது.
 அதேவேளையில், மக்களவைத் தேர்தலில் அதிமுகவின் வாக்கு வங்கி 18 சதவீதமாக குறைந்துள்ளதே என்ற விமர்சனம் எழாமல் இல்லை. ஆனால், தமிழகத்தைப் பொருத்தவரை மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்களில் மக்கள் வாக்களிக்கும் முறையில் மிகப்பெரிய வேறுபாடு எப்போதும் இருப்பதைக் காண முடியும். நடந்து முடிந்த பேரவை இடைத்தேர்தல் முடிவுகளும் இதைத்தான் உணர்த்துகின்றன.
 வாக்குகள் சொல்லும் செய்தி: பேரவைத் தொகுதி இடைத்தேர்தல், மக்களவைத் தேர்தலில் (அடைப்புக்குறிக்குள்) அதிமுக பெற்ற வாக்குகள் விவரம்: சோளிங்கர்-1,03,545 (87,274), பாப்பிரெட்டிப்பட்டி-1,03,981 (94,029), அரூர்-88,632 (65,072), நிலக்கோட்டை-90,982 (62,701), மானாமதுரை-85,228 (60,059), சாத்தூர்-76,820 (63,411), விளாத்திக்குளம்-70,139 (56,312), பரமக்குடி-82,438 (81,676), சூலூர்-1,00,782 (74,883). (இந்த 9 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது).
 திருப்போரூர்-82,335 (76,540), ஒட்டப்பிடாரம்-53,584 (27,373), திருப்பரங்குன்றம்-83,038 (59,538), அரவக்குறிச்சி-59,843 (37,518), தஞ்சாவூர்-54,000 (35,787), பெரம்பூர் -38,371 (26,759) ஆகிய 6 தொகுதிகளில் மக்களவைத் தேர்தலில் பெற்ற வாக்குகளைக் காட்டிலும் சட்டப் பேரவை தொகுதிகளில் அதிக வாக்குகளை அதிமுக பெற்றுள்ளது.
 பேரவை இடைத்தேர்தலில் திமுக கூட்டணி பெற்ற 45.1%-விட, 7% குறைவாக அதிமுக 38.2 சதவீதத்தைப் பெற்றுள்ளது. அதே நேரத்தில், ஜெயலலிதா தலைமைக்கு கிடைத்த 41% வாக்கு வங்கியில் இருந்து 3% மட்டுமே குறைந்துள்ளது. அமமுகவால் பிரிந்த 5.5% வாக்கு வங்கிச் சரிவையும் ஈடுகட்டி, திமுகவுக்குப் போட்டியாகக் களத்தில் நின்று 9 பேரவைத் தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றதே மிகப்பெரிய சாதனைதான்.
 நம்பிக்கை தரும் இரட்டைத் தலைமை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவை 3-ஆவது இடத்துக்கு தள்ளி, இரண்டாம் இடத்தைப் பிடித்ததும், நடந்து முடிந்த இடைத்தேர்தலில் அதிமுக தலைமைக்குப் போட்டியாக கருதப்பட்ட தினகரனின் வாக்குகளை 5%-ஆகக் குறைத்ததுடன் அதிமுக தனது ஆட்சியைத் தக்கவைக்க உதவியதும் எம்ஜிஆரின் இரட்டை இலைச் சின்னம்தான்.
 ஒற்றைத் தலைமையோ, இரட்டைத் தலைமையோ, அதிமுகவின் பலம் "இரட்டை இலை' சின்னம்தான். அமமுகவின் தோல்வி "இரட்டை இலை' சின்னத்தை மேலும் வலுப்படுத்தக் கூடும், யார் கண்டது?
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com