சுடச்சுட

    

    தமிழக குடிநீர் திட்டங்களுக்கு ரூ.5,328 கோடி நிதி வேண்டும்: மத்திய அமைச்சர்களிடம் தமிழக அமைச்சர்கள் வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 12th June 2019 05:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    amithsha

    தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை செவ்வாய்க்கிழமை சந்தித்த  தமிழக மின்துறை அமைச்சர் பி. தங்கமணி, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி.


    தமிழகத்தின் ஆறு குடிநீர்த் திட்டங்களுக்கு ரூ.5,328 கோடி நிதியை வழங்குமாறு தில்லியில் மத்திய அமைச்சர்களிடம் தமிழக அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, பி.தங்கமணி ஆகியோர் வலியுறுத்தினர்.
    மத்திய புதுப்பிக்கவல்ல எரிசக்தி அமைச்சகத்தின் சார்பில்  மாநில மின்துறை அமைச்சர்களின் கூட்டம் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
    மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே. சிங் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இத்துறையில் சிறப்பாக செயல்படும் தமிழ்நாடு , உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களின் மின்துறை அமைச்சர்கள் பங்கேற்றனர். 
    இக்கூட்டத்தில் தமிழக மின்துறை அமைச்சர் பி.தங்கமணி, எரிசக்தி துறையின் முதன்மை செயலர் முகம்மது நஜுமுதீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தின்போது புதுப்பிக்கவல்ல எரிசக்தியின் கொள்திறனை அதிகரிக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. 
    அதேபோன்று, தில்லியில் மத்திய ஜல் சக்தி (நீர் வளம்) துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தலைமையில் நீர் தொடர்புடைய விவகாரங்கள் குறித்து பல்வேறு மாநிலங்களின் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. 
    இக்கூட்டத்தில் தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநர் கா.பாஸ்கரன், தில்லி தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உள்ளுறை ஆணையர் ஹிதேஷ் எஸ். மக்வானா ஆகியோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் தமிழகத்தில் உள்ளாட்சி, நகராட்சி நிர்வாகம் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர்த் திட்டங்கள் குறித்து விளக்கினார்.
    இக்கூட்டத்தின்போது, நாடு முழுவதும் 2024-ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் தூய்மையான குடிநீரை வழங்குவதற்கான இலக்கை மத்திய அரசு நிர்ணயித்துள்ளதாக அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்தார்.


    மாலையில் மத்திய வேளாண்மை, விவசாயிகள் நலன், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறைகளின் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி ஆகியோரை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சந்தித்து தமிழகத்தின் முக்கியத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யுமாறும், விமான நிலைய விரிவாக்க நடவடிக்கைகளுக்கு உதவிடுமாறும் கோரி மனு அளித்தார்.
    இந்த சந்திப்புக்குப் பிறகு அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, பி.தங்கமணி ஆகியோர் செய்தியாளர்களைக் கூட்டாக சந்தித்தனர். அப்போது, அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறுகையில், மத்திய அரசால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஜல் சக்தி துறை சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று மாநில நீர் ஆதாரங்கள், கிராமப்புற குடிநீர் அமைப்புகள், தூய்மை இந்தியா திட்டப் பணிகள் குறித்து எடுத்துரைத்தோம். தமிழகத்தில் பல்வேறு திட்டங்கள் நடைபெற்று வருகிறது. புதிதாக இருக்கக்கடிய குடிநீர்ப் பிரச்னை , வரலாறு காணாத வறட்சி நிலவுகிறது. இதை உரிய திட்டங்கள் மூலம் சரிசெய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 


    தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் வறட்சி உள்ளது என்பது குறித்தும், அதைப் போக்க தமிழக அரசு மேற்கொண்டு வரும் திட்டங்கள் குறித்தும் மத்திய அமைச்சர்களிடம் எடுத்துரைத்து தேவையான நிதி வழங்க கோரினோம். கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் உள்பட பல்வேறு நீர்த் திட்டங்களுக்கு ரூ. 5,328 கோடி தேவைப்படுகிறது. இதை வழங்குமாறு மத்திய அமைச்சரிடம் கேட்டுள்ளோம். அதேபோன்று, கோவை விமான நிலையம் விரிவாக்கம் தொடர்பாக அத்துறையின் அமைச்சரைச் சந்தித்து கோரிக்கை முன்வைத்தோம். அதை நிறைவேற்றித் தருவதாகக் கூறியுள்ளார். அதேபோன்று, ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயலை திங்கள்கிழமை இரவு சந்தித்து கோவை மாவட்டத்தில் மதுக்கரை ரயில் நிலையப் பகுதியில் மூடப்பட்டுள்ள ரயில்வே இடத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விட ஏற்பாடு செய்யுமாறு வலியுறுத்தினோம்.
    தமிழகத்தில் கிராமங்களில் 99.9 சதம் குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. நகரங்களில் அதுபோன்று நிறைவேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அம்ருத், நவீன நகரம் திட்டங்கள் முடிவுறும்போது நகரங்களிலும் குழாய் மூலம் குடிநீர் வழங்குவது நிறைவுபெறும் என்றார். 
    தமிழகத்துக்கு பாராட்டு: தமிழக மின்துறை அமைச்சர் பி.தங்கமணி கூறுகையில், மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே. சிங் நடத்திய மாநில மின்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்று தமிழகத்தில் புதுப்பிக்கவல்ல எரிசக்தி துறையில் எடுக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தேன். புதுப்பிக்கவல்ல எரிசக்தி துறையில் தமிழக அரசின் சிறப்பான செயல்பாடுக்காக மற்ற மாநிலங்களின் அமைச்சர்கள் முன்னிலையில் மத்திய அமைச்சர் ஆர்.கே. சிங் தமிழகத்தை பாராட்டினார்.
    மரபுசாரா மின்சாரத்தின் கொள்திறனை அதிகரிக்க மாநிலங்களிடம் அமைச்சர் வலியுறுத்தினார்.  அதை மேற்கொள்வதாக தெரிவித்தோம்.
    மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், உள்துறை அமைச்சர் ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். 
    தமிழ்நாட்டின் நலனைப் பாதுகாக்கும் வகையில் தமிழக நலத் திட்டங்களுக்கு நிதியைப் பெரும் வகையில் ஒவ்வொரு முறையும் தில்லி வரும்போது மத்திய அரசு தேவையான உதவியை தமிழகத்திற்கு அளித்து வருகிறது என்றார் அவர். 
    அமித் ஷாவுடன் சந்திப்பு
    மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தில்லியில் செவ்வாய்க்கிழமை தமிழக மின்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை அமைச்சர் பி. தங்கமணி, நகராட்சி நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்தனர். அப்போது, தமிழகத்தில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்களுக்கு மத்திய அரசின் மூலம் வர வேண்டிய நிதி உதவி தொடர்பாக அவரிடம் வலியுறுத்தியாக கூறப்படுகிறது.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai