ஊடகங்கள், பத்திரிகைகளில் அதிமுகவினர் கருத்து தெரிவிக்க வேண்டாம்: கட்சித் தலைமை

அடுத்த அறிவிப்பு வரும் வரை எந்த ஊடகத்துக்கும், பத்திரிகையிலும் அதிமுகவினர் கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று அதிமுக தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 
ஊடகங்கள், பத்திரிகைகளில் அதிமுகவினர் கருத்து தெரிவிக்க வேண்டாம்: கட்சித் தலைமை

அடுத்த அறிவிப்பு வரும் வரை எந்த ஊடகத்துக்கும், பத்திரிகையிலும் அதிமுகவினர் கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று அதிமுக தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

மக்களவைத் தேர்தலில் அதிமுக அணி ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. இதேபோன்று, சட்டப் பேரவை இடைத்தேர்தலில் போட்டியிட்ட அதிமுக, 13 தொகுதிகளை இழந்து 9 தொகுதிகளில் மட்டுமே வென்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது. இந்த நிலையில், அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இரட்டைத் தலைமைக்குப் பதிலாக ஒற்றைத் தலைமையை உருவாக்க வேண்டுமென்ற கோரிக்கையை எம்.எல்.ஏ., ராஜன்செல்லப்பா முன்வைத்தார். 

இந்தக் கோரிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு அளித்த நிலையில், கட்சி தொடர்பான விஷயங்களை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டாமென அதிமுக தலைமை அறிவுறுத்தியது. இந்நிலையில் அதிமுகவுக்குள் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலில் அந்தக் கட்சி நிர்வாகிகள் கூட்டம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி தலைமையில் கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்றனர். 

காலை 10.30 மணிக்கு துவங்கிய இந்த கூட்டம் சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்தது. ஆனால் சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பிய எம்எல்ஏக்களான ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. குன்னம் எம்எல்ஏ ராமச்சந்திரன், கிணத்துக்கடவு எம்எல்ஏ சண்முகம் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. 113 எம்எல்ஏ.,க்கள் மட்டுமே இதில் கலந்துகொண்டனர். கூட்டத்தில் 5 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக அதிமுகவில் இருந்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில், அதிமுக செய்தி தொடர்பாளர்கள் எந்த ஒரு விவகாரத்திலும் கழகத்தின் நிலைப்பாடு என்ன என்பதை, கழக நிர்வாகிகள் ஒப்புதலை பெற்ற கருத்துகளை மட்டுமே தெரிவிப்பதற்கு உரிமை பெற்றவர்கள். நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்து அடுத்த கட்ட அரசியல் பணிகள் தொடங்கியுள்ள வேளையில், செய்தி தொடர்பாளர்கள் தலைமைக் கழகத்தில் இருந்து அடுத்த அறிவிப்பு வரும்வரை எந்த ஊடகத்திலும் பத்திரிகையிலும் சமூகத் தொடர்பு சாதனங்களிலும் எந்த கருத்தையும் தெரிவிக்க வேண்டாம்.

மற்றவர்கள் யாரும் தங்கள் கருத்துக்களை கழகத்தின் கருத்துக்களாக, பத்திரிகை, ஊடகங்களில் தெரிவிக்கக் கூடாது. அத்தகைய நடவடிக்கை யில் ஈடுபடுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கழகத்தின் சார்பிலோ அல்லது கழக ஆதரவாளர்கள் என்ற பெயரிலோ தனி நபர்களை அழைத்து அதிமுக பிரதிநிதிகள் போல சித்தரித்து, அவர்கள் கழகத்தின் சார்பில் கருத்துக்களை வெளியிடுவதை ஊடக மற்றும் பத்திரிகை நிறுவனங்கள் அனுமதிக்க வேண்டாம்''. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com