ஒற்றைத் தலைமை சர்ச்சைக்கு இடையே அதிமுக கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 5 தீர்மானங்கள்!

கட்சிக்கு ஒற்றைத் தலைமை என்ற சர்ச்சைக்கு இடையே அதிமுக நிர்வாகிகள் கூட்டம் இன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஒற்றைத் தலைமை சர்ச்சைக்கு இடையே அதிமுக கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 5 தீர்மானங்கள்!

கட்சிக்கு ஒற்றைத் தலைமை என்ற சர்ச்சைக்கு இடையே அதிமுக நிர்வாகிகள் கூட்டம் இன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம்; இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான பழனிசாமி ஆகியோர் தலைமையில், தலைமைக் கழகத்தில், இன்று காலை தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக செய்தித் தொடர்பாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், பின்வரும் தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன:

தீர்மானம் - 1

அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலிலும், 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலிலும், அதிமுக வேட்பாளர்களுக்கும், கழகத்தின் தலைமையில் அமைந்த கூட்டணியின் வேட்பாளர்களுக்கும் வாக்களித்த தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை இந்தக் கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் - 2

நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலில் கழகத்தின் சார்பிலும், கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிக்காகவும், சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் போட்டியிட்ட கழக வேட்பாளர்களின் வெற்றிக்காகவும் அரும்பணியாற்றிய கழக நிர்வாகிகளுக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும்; தேர்தல் பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு உழைத்த கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும்; தோழமைக் கட்சிகளின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் மற்றும் நல்லாதரவு வழங்கிய அமைப்புகள் அனைத்திற்கும் இந்தக் கூட்டம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் - 3

நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்று மீண்டும் ஆட்சியை அமைத்திருக்கும் பாரதிய ஜனதா கட்சி, இந்திய தேசத்தின் பிரதமரை வழிமொழியும் வாய்ப்பினை அதிமுகவுக்கு அளித்தமைக்கு இந்தக் கூட்டம் தனது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் - 4

தமிழ் நாட்டில் விரைவில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் சிறப்புடன் பணியாற்றி, மகத்தான வெற்றியைப் பெற்றிட இந்தக் கூட்டம் உறுதி ஏற்கிறது. உள்ளாட்சி மன்றத் தேர்தல் பணிகளை உடனடியாகத் தொடங்கி மக்கள் மனங்களை வென்றெடுக்க இந்தக் கூட்டம் சூளுரைக்கிறது.

தீர்மானம் - 5

தமிழ் நாட்டின் தன்னிகரில்லா மக்கள் இயக்கமான அதிமுக, ஏழை, எளியோருக்கும், தாய்க்குலத்திற்கும் தொண்டாற்றும் தூய அரசியல் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளவும், மக்கள் நலப் பணிகளை மேற்கொண்டு, தமிழக மக்கள் எல்லோரும் எல்லாமும் பெற்று இன்புற்று வாழ்ந்திடும் வண்ணம் செயல்படவும் இந்தக் கூட்டம் உறுதி ஏற்கிறது என்று 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com