கடலோரக் காவல் படை, அஸ்ஸாம் ரைபிள்ஸ் படை இணைந்து கடல்சார் கண்காணிப்பில் ஈடுபடும் திட்டம்: வீரர்களுக்கான பயிற்சி சென்னையில் தொடக்கம்

இந்தியக் கடலோரக் காவல் படை, துணை ராணுவப் படையின் பிரிவான அஸ்ஸாம் ரைபிள்ஸ் ஆகியவை இணைந்து கடல்சார் ரோந்து பணியில் ஈடுபடுவதற்கான பயிற்சி தொடக்க விழா நிகழ்ச்சி சென்னையில்
கூட்டு ரோந்து பணிக்கான பயிற்சி தொடக்க நிகழ்ச்சியில் அஸ்ஸாம் ரைபிள்ஸ்  துணை ராணுவப் படை வீராங்கனைகளோடு உரையாடும் கடலோரக் காவல்படை கூடுதல் இயக்குநர் மூர்த்தி.
கூட்டு ரோந்து பணிக்கான பயிற்சி தொடக்க நிகழ்ச்சியில் அஸ்ஸாம் ரைபிள்ஸ்  துணை ராணுவப் படை வீராங்கனைகளோடு உரையாடும் கடலோரக் காவல்படை கூடுதல் இயக்குநர் மூர்த்தி.


இந்தியக் கடலோரக் காவல் படை, துணை ராணுவப் படையின் பிரிவான அஸ்ஸாம் ரைபிள்ஸ் ஆகியவை இணைந்து கடல்சார் ரோந்து பணியில் ஈடுபடுவதற்கான பயிற்சி தொடக்க விழா நிகழ்ச்சி சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்தியக் கடலோரக் காவல் படை சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளின் கடலோரக் காவல் படையினருடன் இணைந்து நல்லெண்ண அடிப்படையில் கூட்டுப் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் உள்நாட்டில் உள்ள பல்வேறு துணை ராணுவப் படையினரோடும் கடலோரக் காவல் படை இணைந்து செயல்படுவது என கொள்கை அளவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. 
இதன் அடிப்படையில் முதல் கட்டமாக அஸ்ஸாம் ரைபிள்ஸ் துணை ராணுவப் படையினருடன் இணைந்து செயலாற்றுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி கடந்த மே 22-ஆம் தேதி ஷில்லாங்கில் நடைபெற்றது. 
இதில் இந்தியக் கடலோரக் காவல்படை தலைமை இயக்குநர் ராஜேந்திர சிங், அஸ்ஸாம் ரைபிள்ஸ் துணை ராணுவப் படை தலைவர் சுக்தீப் சங்வான் ஆகிய இருவரும் கலந்து கொண்டு ஒப்பந்தத்தைப் பரிமாறிக் கொண்டனர். இந்நிலையில், இதற்கான இணைப்பு மற்றும் பயிற்சி தொடக்க விழா நிகழ்ச்சி கடலோரக் காவல்படை சார்பில் சென்னைத் துறைமுகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கடலோரக் காவல்படை கூடுதல் இயக்குநர்  வி.எஸ்.ஆர் மூர்த்தி, அஸ்ஸாம் ரைபிள்ஸ் துணை ராணுவப் படையின் தலைவர் சுக்தீப் சங்வான்,  கடலோரக் காவல்படை கிழக்கு பிராந்திய தளபதி எஸ்.பரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  இந்த ஒப்பந்தத்தை நினைவுகூரும் வகையில் சிறப்பு தபால் உறை வெளியிடப்பட்டது. இதனை சென்னை மாநகர தபால் துறை தலைவர் ஆர். ஆனந்த் வெளியிட, கடலோரக் காவல்படை கூடுதல் இயக்குநர் மூர்த்தி பெற்றுக்கொண்டார். 
கடலோரக் காவல்படை கூடுதல் இயக்குநர் மூர்த்தி, அஸ்ஸாம் ரைபிள்ஸ் படையின் தலைவர் சுக்தீப் சங்வான்  செய்தியாளர்களிடம் பேசுகையில், மத்திய ரிசர்வ் படையினரும், எல்லைப் பாதுகாப்பு படையினரும் இணைந்து செயல்பட விரைவில் ஒப்பந்தம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு வருகிறது என்றனர். 
சென்னை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கடலோரக் காவல் படை கப்பலான ஐ.சி.ஜி.எஸ் சவுரியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இரண்டு படை பிரிவுகளின் முக்கிய அதிகாரிகள், நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.


சென்னை துறைமுகத்தில் செவ்வாய்க்கிழமை கடலோரக் காவல் படை, அஸ்ஸாம் ரைபிள்ஸ் ஆகியவை இணைந்து ஈடுபட உள்ள ரோந்து பணிக்கான கப்பல்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com