கடும் வீழ்ச்சியில் தென்னை நார் கயிறு தயாரிப்பு: மீண்டெழ அரசு உதவிக்கரம் நீட்டுமா?

நிரந்தர இட வசதியின்மை, குறைந்த வருவாய் உள்ளிட்ட காரணங்களால் காட்பாடி பகுதியில் சரிவில் வீழ்ந்த குடிசைத் தொழிலாக தென்னை நாரில்
காட்பாடியை அடுத்த கிளிதான்பட்டறை பகுதியில் தென்னை  நார் கயிறு தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.
காட்பாடியை அடுத்த கிளிதான்பட்டறை பகுதியில் தென்னை  நார் கயிறு தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.

நிரந்தர இட வசதியின்மை, குறைந்த வருவாய் உள்ளிட்ட காரணங்களால் காட்பாடி பகுதியில் சரிவில் வீழ்ந்த குடிசைத் தொழிலாக தென்னை நாரில் இருந்து கயிறு தயாரிக்கும் தொழில் நடைபெற்று வருகிறது. நெருக்கடியில் இருந்து இத்தொழிலையும், தொழிலாளர்களையும் மீட்க அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
பாலாற்றில் நீராதாரம் குறைந்து போனதாலும், ஆண்டுக்காண்டு குறைந்து வரும் மழை வளம் உள்ளிட்ட காரணங்களாலும் வேலூர் மாவட்டத்தின் பெரும்பகுதி விளை நிலங்கள் தற்போது வானம் பார்த்த பூமியாகி வருகின்றன. இது விவசாயத்தை மட்டுமின்றி, அதனுடன் இணைந்த பல துணைத் தொழில்களிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதை கண்கூடாக காண முடிகிறது. 
இதனால் அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மை, வருவாய் பாதிப்பு உள்ளிட்டவற்றால் பல குடும்பங்கள் இன்னும் வறுமை நிலையிலிருந்து மீளமுடியாமல் தவித்துக் கொண்டுள்ளன. இந்தக் குடும்பத்தினர் தங்களது வாழ்வதாரத்துக்காக குடிசைத் தொழில்களையே பெரிதும் நம்பியுள்ளனர். இத்தொழிலில் தாங்கள் மட்டுமின்றி தங்கள் குழந்தைகளையும் ஈடுபடுத்தி வருமானம் ஈட்டினாலும் அவர்களுக்கு போதிய வருமானம் கிடைக்காத நிலையில்தான் குடும்பத்தை நடத்த வேண்டிய நிலையில் உள்ளனர். 
காட்பாடியை அடுத்த கிளிதான்பட்டறை என்ற பகுதியில் தென்னை நாரில் இருந்து கயிறு தயாரிக்கும் தொழிலில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஈடுபட்டு வருகின்றன. நான்கு தலைமுறைகளாக இந்தத் தொழிலில் ஈடுபட்டபோதிலும் அவர்களின் வாழ்க்கைத்தரம் மட்டும் இன்னும் மேம்படவில்லை. 
சாலையோரத்தில் எந்தவொரு ஆவணமும் இல்லாத இருப்பிடங்களுக்கு இவர்கள் முறையாக வரி செலுத்தி வருகின்றனர். எனினும், நிரந்தரமான மாற்று இடம் ஒதுக்கி, வீடுகள் கட்டித்தர அரசு சார்பில் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 
தற்போதைய காலகட்டத்தில் தென்னை நாரில் இருந்து கயிறு தயாரிக்கும் தொழிலில் இயந்திரங்கள் பலவற்றைப் பயன்படுத்தி பெரிய நிறுவனங்கள் நல்ல லாபம் சம்பாதிக்கின்றன. ஆனால், குடிசைத் தொழிலாக இதைச் செய்து வரும் குடும்பங்களால் இன்னும் அத்தகைய முன்னேற்றத்தை எட்ட இயலவில்லை. இயந்திரங்களை அமைத்து தங்களது தொழிலை விரிவுபடுத்திக் கொள்ள நினைக்கும் இவர்கள் அதற்காக அரசின் மானிய உதவிகளை எதிர்பார்த்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த சுமதி என்பவர் கூறியது:
தென்னை நாரில் இருந்து கயிறு தயாரிக்கும் தொழிலை மட்டுமே நம்பி நான்கு தலைமுறைகளாக வேலை செய்து வருகிறோம். குடியாத்தம் பகுதியிலுள்ள நார் தொழிற்சாலையில் இருந்து 35 கிலோ கொண்ட ஒரு பண்டல் நார் ரூ.1,000 என்ற விலைக்கு வாங்கி வந்து, அதனை கயிறாகத் திரித்து பல மாவட்டங்களுக்கும், ஆந்திரத்துக்கும் விற்பனைக்காக அனுப்புகிறோம். 2 பேர் சேர்ந்து நாள்முழுவதும் பணியாற்றினால் இருவரும் சேர்த்து ரூ.500 முதல் ரூ.700 வரை வருவாய் ஈட்ட முடியும். 
மழைக்காலம் என்றால் தேங்காய் நார் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படுவதுடன், திரிக்கப்பட்ட கயிறின் விற்பனையும் மந்தமடைந்து விடும். அத்தகைய சில மாதங்களில் வருவாய் பாதிப்பு ஏற்படுவதுண்டு. இத்தகைய நெருக்கடியான நிலையில் தொழில் செய்து வரும் எங்களது குடும்பங்களுக்கு நிரந்தரமான வீடோ, நிலமோ இல்லை. 
தற்போது நாங்கள் வசிக்கும் வீடுகள் சாலையோரத்தில் அமைந்துள்ளதால் மழைக்காலங்களில் வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்து விடும் அபாயம் உள்ளது. இதுதொடர்பாக, அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும் நிரந்தரமான வீட்டுமனை ஒதுக்கித் தரப்படவில்லை. மேலும், கைகளால் தேங்காய் நார் கயிறு தயாரிப்பதால் எங்களால் அதிக அளவில் வருவாய் ஈட்ட முடிவதில்லை. இயந்திரங்களைப் பயன்படுத்தி தொழில் செய்வதற்கு அரசு மானியம் அளித்து உதவி செய்ய வேண்டும் என்றார் அவர்.
வறட்சியால்  நாளுக்கு நாள் விவசாயம் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் குடிசைத் தொழில்களை நம்பி தங்களது வாழ்க்கையை நடத்தி வரும் இத்தகைய குடும்பங்கள் அரசிடம் எதிர்பார்த்திருப்பது சிறிய உதவிகளை மட்டுமே. அந்த உதவிகள் கிடைத்தாலே அவர்களின் வாழ்வதாரம் பல மடங்கு மேம்பட முடியும். எனவே, நெருக்கடி நிலையில் உள்ள குடிசைத் தொழில்களுக்கு அரசு முன்னுரிமை அளித்து உதவி செய்ய வேண்டும் என்பதே தொழிலாளர்கள், சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com