குறுவை சாகுபடி:  மேட்டூர் அணையிலிருந்து தாமதமாகும் தண்ணீர் திறப்பு

நிகழ் நீர்ப்பாசன ஆண்டிலும் மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு தள்ளிப்போகிறது.
வறண்டு குட்டைபோல காணப்படும் மேட்டூர் அணை.
வறண்டு குட்டைபோல காணப்படும் மேட்டூர் அணை.


நிகழ் நீர்ப்பாசன ஆண்டிலும் மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு தள்ளிப்போகிறது.
மேட்டூர் அணை பாசனம் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சை, கரூர், நாகப்பட்டினம் உள்பட 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி முதல் ஜனவரி 28-ஆம் தேதி வரை 230 நாள்களுக்கு தண்ணீர் திறக்கப்படும்.  குறுவை, சம்பா, தாளடி பயிர்களுக்கு 330 டிஎம்சி தண்ணீர் தேவைப்படும்.  பாசனப் பகுதிகளில் பெய்யும் மழையைப் பொருத்து பாசனத் தேவை குறையும்.
அணையின் நீர்மட்டம் 90 அடியாக இருந்தால் பருவமழையை எதிர்நோக்கி, ஜூன் 12-இல் குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும். மேட்டூர் அணையின் வரலாற்றில் 15 ஆண்டுகள் மட்டுமே குறிப்பிட்ட நாளான ஜூன் 12-இல் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
அணையின் நீர் இருப்பும் வரத்தும் திருப்திகரமாக இருந்ததால்,  விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று ஜூன் 12-க்கு முன்பாக 11 ஆண்டுகள் பாசனத்துக்குத் திறக்கப்பட்டது.  மற்ற ஆண்டுகள் நீர் இருப்பும் வரத்தும் திருப்திகரமாக இல்லாத காரணத்தால் தாமதமாகவே  திறக்கப்பட்டது.
மேட்டூர் அணையின் வரலாற்றில்  86-ஆவது ஆண்டாக  புதன்கிழமை (ஜூன் 12) குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட  வேண்டும். ஆனால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை காலை 45.59 அடியாகவும், நீர் இருப்பு 15.14 டி.எம்.சி.யாகவும் உள்ளது.  
அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 861 கன அடியாகவும், நீர் திறப்பு 1,000 கன அடியாகவும் உள்ளது. நீர் வரத்தும் இருப்பும் திருப்திகரமாக இல்லாத காரணத்தால், நிகழ் ஆண்டில் குறுவை சாகுபடிக்கு புதன்கிழமை தண்ணீர் திறப்பு இல்லை என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்து விட்டனர்.
நிகழ் நீர் பாசன ஆண்டில் 60-ஆவது ஆண்டாக நீர் திறப்பு தள்ளிப்போவதால், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மேலும்,  முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு குறுவை சாகுபடி பாதிக்கும் அபாயம் உள்ளது.
கடந்த ஆண்டு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 40 அடியாக சரிந்திருந்தது. ஜூன் இறுதியில் பருவமழை கைகொடுத்ததால் கர்நாடக அணைகள் நிரம்பி மேட்டூர் அணைக்கு உபரிநீர் திறக்கப்பட்டது. இதனால் 40 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஜூலை 17-ஆம் தேதி 100 அடியாக உயர்ந்தது. 
 ஜூலை 19-ஆம் தேதி காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
ஜூலை 27 -ஆம் தேதி மேட்டூர் அணை நிரம்பியது. நிகழ் ஆண்டிலும் ஜூலை இறுதிக்குள் காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும் வாய்ப்பு உள்ளது என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com