Enable Javscript for better performance
கீழடியில் ஐந்தாம் கட்ட அகழாய்வு பணியை தொடங்கி வைத்தார் மாஃபா பாண்டியராஜன்- Dinamani

சுடச்சுட

  

  கீழடியில் ஐந்தாம் கட்ட அகழாய்வு பணியை தொடங்கி வைத்தார் மாஃபா பாண்டியராஜன்

  By DIN  |   Published on : 13th June 2019 04:25 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  keladi

  கீழடி பள்ளி சந்தை திடலில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வு

   

  சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணிகளை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இன்று தொடங்கி வைத்தார்.

  கீழடியில் ஐந்தாம் கட்ட அகழாய்வு பணிக்கான பூமி பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய மாஃபா பாண்டியராஜன், கீழடியில் மேற்கொள்ளப்பட உள்ள 5ம் கட்ட ஆகழாய்வுப் பணிக்கு தமிழக அரசு ரூ.1 கோடி ஒதுக்கியுள்ளது. தமிழக தொல்லியல் துறை மேற்கொண்ட ஆய்வில் இதுவரை 5,820 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

  வரும் ஆண்டில் தேனி, திருவண்ணாமலை, கீழடி, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட 6 இடங்களில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றும், 6 மாதங்களில் கீழடியில் அருங்காட்சியகம் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றும் கூறினார்.

  மேலும் அவர் பேசுகையில், 5ம் கட்ட அகழாய்வு பணிகள் அடுத்த 4 மாதங்களில் முடிவடையும் என்றும் தெரிவித்தார்.

  வைகை ஆற்றங்கரையின் நகர, நாகரிகத்தை ஆய்வு செய்வதற்காக பெங்களூருவில் உள்ள இந்திய தொல் பொருள் அகழாய்வுத் துறைக்கு கடந்த 2014-ஆம் ஆண்டு மத்திய அரசு அனுமதி வழங்கியது. 
  இதையடுத்து, பெங்களூரு தொல்பொருள் அகழாய்வுத் துறையின் அப்போதைய கண்காணிப்பாளர் கே. அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் தொல்லியலாளர்கள் மூல வைகையாற்றின் பகுதியான வருசநாடு தொடங்கி, ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் வரை வைகை ஆற்றின் இரு கரைகளிலும் உள்ள 293 கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

  இதில், 100-க்கும் மேற்பட்ட இடங்களில் பழங்கால மக்கள் வாழ்ந்ததற்கான பானை ஓடுகள் கிடைத்தன. மேலும் பாண்டிய மன்னர்களின் கல்வெட்டுகள்,  புராதன கற்கோயில்கள் கண்டறியப்பட்டன.

  தொடர்ந்து கடந்த 2015 மார்ச் 2-இல் கீழடி பள்ளிச் சந்தை திடலில் முதல் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கின. கண்காணிப்பாளர் கே. அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் முதல் இரண்டு கட்டங்களாக (2015 மற்றும் 2016) நடைபெற்ற அகழாய்வில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் வாழ்ந்ததற்கான செங்கல் கட்டுமான வீடுகள், மண்பாண்ட ஓடுகள், மண்ணால் சுடப்பட்ட மணிகள், மண் அடுக்குகள், முத்து மணிகள், கல் மணிகள், பானைக் குறியீடுகள், கண்ணாடி மணிகள், இரும்பு மற்றும் உலோகத்தால் ஆன ஆயுதங்கள், தந்ததால் ஆன தாயக்கட்டை, கண்ணாடி மணிகள், சதுரங்க காய்கள், கலை நயமிக்க பானைகள், உறை கிணறுகள், நீர் வழிப் பாதை தடங்கள் உள்ளிட்ட ஏராளமான பழங்கால பொருள்கள் கிடைத்தன. மேலும் தமிழ்ப் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட ஓடுகளும் கிடைத்தன.

  இதையடுத்து கண்காணிப்பாளர் கே. அமர்நாத் ராமகிருஷ்ணன் பணியிட மாற்றத்துக்குப் பின், கடந்த 2017 மே 27-ஆம் தேதி தொல்லியல் கண்காணிப்பாளர் எஸ். ஸ்ரீராமன் தலைமையிலான தொல்லியலாளர்கள் மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகளை தொடங்கினர்.  

  இதில், கண்ணாடி, பச்சைக்கல், சூதுபவளம், மண்ணால் செய்யப்பட்ட மணிகள், காதணிகள், தந்தத்தில் செய்த சீப்பின் ஒரு பகுதி, செப்பு, எழும்பு முனைகள், இரும்பு உளிகள் உள்ளிட்ட சுமார் 1,800-க்கும் மேற்பட்ட தொல்பொருள்கள் கிடைத்தன.  இதற்கிடையே, மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணியுடன் நிறைவு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மக்கள் மத்தியில் பேசப்பட்டது. 

  இருப்பினும் தமிழக அரசியல் கட்சித் தலைவர்களும், தமிழ் ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தியதன் விளைவாக நான்காம் கட்ட அகழாய்வுப் பணியை தமிழக தொல்லியல் துறை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதியளித்தது. கடந்த 2018 ஏப்ரல் மாதம் 18-ஆம் தேதி  நான்காம் கட்ட அகழாய்வுப் பணியில் துணை இயக்குநர் தலைமையில் 2 தொல்லியலாளர்கள், 4 அகழ்வாய்வாளர்கள் உள்ளிட்ட ஏராளமான களப் பணியாளர்கள் ஈடுபட்டனர். 

  5 மாதம் நடைபெற்ற அகழாய்வுப்பணி கடந்த 2018 செப்டம்பர் 30-ஆம் தேதி நிறைவடைந்தது. இதில், 34 குழிகள் தோண்டப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. ஆய்வில் 5,820 தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.  

  இதையடுத்து, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் மற்றும் தொல்லியல் துறை ஆணையர் உதயச்சந்திரன் ஆகியோர் கீழடியில் அகழாய்வு செய்த இடத்தையும், அங்கு கிடைத்த தொல் பொருள்களையும் பார்வையிட்டு விரைவில் நவீன முறையிலான தொழில்நுட்பங்களை பயன்படுத்தி 5-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கப்படும் என்றும், கீழடியில் அகழ்வைப்பகம் அமைக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தனர்.

  5-ஆம் கட்ட ஆய்வு 
  இதைத் தொடர்ந்து, 5-ஆம் கட்ட அகழாய்வுப் பணிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கிய நிலையில், மக்களவை மற்றும் சட்டப்பேரவைக்கான இடைத்தேர்தல் முடிந்து, தற்போது 5ம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai