Enable Javscript for better performance
கூடுதல் மகசூல் பெற திருந்திய நெல் சாகுபடிமுறை அவசியம்- Dinamani

சுடச்சுட

  

  கூடுதல் மகசூல் பெற திருந்திய நெல் சாகுபடிமுறை அவசியம்

  By DIN  |   Published on : 13th June 2019 12:51 AM  |   அ+அ அ-   |  

  nel


  நாமக்கல்:  கூடுதல்  மகசூல் பெறுவதற்கு,  விவசாயிகள் திருந்திய  நெல் சாகுபடி முறையை மேற்கொள்வது அவசியம் என நாமக்கல்  பி.ஜி.பி.  வேளாண்மை கல்லூரி பயிர் இனப் பெருக்கத் துறை  தெரிவித்துள்ளது.
  இதுதொடர்பாக, அக் கல்லூரியின் முதல்வர் என்.ஓ.கோபால்,  உதவிப் பேராசிரியர்கள் ப.சவிதா,  ப. ராதாகிருஷ்ணன் ஆகியோர் வெளியிட்ட  ஆய்வறிக்கை:  ஆசியக் கண்டத்தில் சீனா நெல் சாகுபடியில் முதலிடத்திலும்,  இந்தியா இரண்டாமிடத்திலும் உள்ளது.   தமிழகத்தின் நெற்களஞ்சியம் தஞ்சாவூர்.  காவிரி ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள இம் மாவட்டம்தான் நெல் உற்பத்தியில் முதன்மையாகத் திகழ்கிறது.
  நெல்  உற்பத்தியில்  நாற்றுக்களின் எண்ணிக்கையைக் குறைத்தும்,   இடுபொருள்கள் மற்றும் களைகளின் தாக்குதலைக் குறைத்தும்,   ஒற்றை நாற்று முறை அல்லது  திருந்திய நெல் சாகுபடி முறையானது பின்பற்றப்படுகிறது.
  திருந்திய  நெல் சாகுபடி முறைகள்  
  இதற்கு தரச் சான்று பெற்ற அதிக விளைச்சல் தரக் கூடிய ஒட்டு விதைகள் ஏக்கருக்கு 2 கிலோ தேவைப்படும்.    இதனை விதைநேர்த்தி செய்ய வேண்டும்.   ஓர் ஏக்கருக்கு ஒரு சென்ட் அளவு நாற்றங்காலை அமைக்க வேண்டும்.   பாய்  நாற்றுகள் மூலமாகவும் உற்பத்தி செய்யலாம்.   நாற்றுகளை 14 நாள்களுக்குள் நாற்றங்காலில் நட  வேண்டும்.   அளவுகோல் கருவி எனப்படும்  மார்க்கர் கருவி முறையில் 22.5-க்கு 22.5 செ.மீ. சதுர இடைவெளியில் குத்துக்கு ஒரு நாற்று மட்டுமே நட வேண்டும். இதனால் நாற்றங்காலின் எண்ணிக்கை குறையும்.   கோனோவீடர் எனும் கருவி மூலம் களைகளை எளிதாக அகற்ற முடியும்.  இந்த களை நீக்கும் கோனோவீடர் கருவியானது,  களைகளை  நீக்கி வயலுக்குள் அமுக்கி விடுவதால்,  பயிர்களுக்கு நீர்ப் பாய்ச்சும் அளவு 5 செ.மீ.  குறைந்து விடும்.  நோயிலிருந்து பயிரைத் தடுக்க இலை வண்ண அட்டை மூலம் தழைச்சத்தை அளிக்க வேண்டும்.   பூச்சிகளின் தாக்குதலைக் குறைக்க  ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பைக் கையாள வேண்டும். 
  தரமான  விதைகளை தயார் செய்தல்
  தரமான விதைகளைப் பயன்படுத்தினால்  முளைப்புத் திறன் அதிகமாகவும்,  விதைகள் களைகள் இன்றி தூய்மையாகவும் காணப்படும். இதனால் பூச்சி மற்றும் நோய்களின் தாக்குதல் குறைவாக இருக்கும்.  விளைச்சலும் அதிகமாகக் கிடைக்கும்.   தரமான விதைகள் ஏக்கருக்கு 2  கிலோ போதுமானது.  இதனால்  விதைகளின் செலவு குறையும். 
  விதை நேர்த்தி தொழில்நுட்பம்
  சூடோமோனாஸ்  புளோரசன்ஸ் எனும்   உயிர் பூசனக் கொல்லியை நீரில் கரைத்து ஒரு கிலோ விதைக்கு  10 கிராம் வீதம்  இரவு முழுவதும் விதைகளை ஊற வைக்க வேண்டும்.   மறுநாள் காலையில் விதைகளை வடிகட்டி முளைகட்டி முளைக்க வைக்க வேண்டும்.   இதனை நுண்ணுயிர் உரங்களான அசோஸ் ஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியாவுடன் நன்கு கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். 
  பாய் நாற்றங்கால் நடவு தயார் செய்தல்
  பாய் நாற்றங்கால் என்பது ஒரு மீட்டர் அகலமும்,   4 மீட்டர் நீளமும், 5 செ.மீ.  உயரமுடைய  பாத்திகளைக் கொண்டதாகும்.  இதன்மேல் பழைய பாலித்தீன் உரச் சாக்குகளை விரித்த நிலையில் பரப்ப வேண்டும்.  இவற்றின் மேல் விதைகளைத் தூவி மெதுவாக விரல்களால் அழுத்திவிட  வேண்டும்.  பின்பு அதன்மேல் நீரைத் தெளித்து வைக்கோல் வைத்து மூட  வேண்டும்.  விதைத்த ஒன்பதாம் நாள் 0.5 சதவீதம் யூரியா கரைசலை பூவாளியால் தெளிக்க வேண்டும். 
  நடவு வயல் தயாரிப்பு
  கோடை காலத்தில் 2 - 3 தடவை நிலத்தை உழுது சமப்படுத்தினால்தான்,  கோடை மழையால் நீர்த் தேங்கி,  நிலமானது, நீரைத் தக்க வைத்துக் கொள்ளும். களிமண்ணானது நெல் நடவு செய்ய தகுந்த மண்ணாகும்.  அது நீரைத் தக்க வைத்துக் கொள்ளும்  தன்மை கொண்டது.   பாசன நீரின் அளவும் களைகளின் அளவும் குறையும்.  கோடை உழவு நன்கு உழுவதால்,   பூச்சிகளின் முட்டைகள்  மற்றும் புழுக்கள் அழியும்.  முதல் இரண்டு உழவு சமமாகவும்,   ஆழ் உழவின் கடைசி உழவுக்கு முன்பு ஏக்கருக்கு 4 - 5 டன் தொழு உரமும்  (அ)  2 டன் பசுந்தாள் உரத்திதையும் இட  வேண்டும்.   தூர்களின் எண்ணிக்கை,   வேர்களின் குறித்த இடைவெளியில்  இட வேண்டும்.   நெல் நுண்ணூட்டக் கலவை 5 கிலோ,  15 கிலோ மணலுடன் தூவ வேண்டும்.  இதனுடன் அசோலாவினையும் சேர்த்து இட  வேண்டும்.  அசோஸ் ஸ்பைரில்லம்,  பாஸ்போ பாக்டீரியாவினை 10 கிலோ தொழு உரத்துடன் நன்கு கலந்து இட வேண்டும். 
  இளம் நாற்றங்கால் வயது   
  பாய் நாற்றங்கால் தயார் செய்தவுடன்,  14 நாள்களில் 14 செ.மீ உயரமுள்ள நாற்றுகளின் வேர்கள் அறுபடாமல் ஒன்று சேர்த்து சிறு கற்றைகளாக மாற்ற வேண்டும்.    அளவுகோல் எனப்படும் மார்க்கர் கருவியில் சதுர மீட்டருக்கு 20 குத்துகள் இருக்குமாறு அடையாளமிட்டு, 22.5,  22.5 செ.மீ. இடைவெளியில் சதுர முறையில் ஒரு குத்துக்கு ஒரு நாற்றை மட்டுமே நட வேண்டும். 
  உரமிடுதல்
  உரத்தை  மட்டுமே நெற் பயிருக்கு இட வேண்டும். குறிப்பாக, தழைச்சத்து உரத்தை தேவைக்கு அதிகமாக அளிப்பதால், பூச்சி மற்றும்  பூஞ்சானங்கள் தாக்குகின்றன. குறிப்பாக, தண்டுத் துளைப்பான்,  இடைமடக்குப் புழு மற்றும் குலைநோய்த் தாக்குதல் அதிகமாக  இருக்கும்.    தழைச் சத்து உரத்தை ஜிப்ஸம்    (1)வேப்பம் (4) புண்ணாக்குடன் (1) கலந்து குறித்த கால இடைவெளியில் இட வேண்டும். 
  மேலும்,   தழைச்சத்து இடுவதற்கான வண்ண அடையாள அட்டையைப் பயன்படுத்துவதன் மூலம் அதிகமான தழைச்சத்து அளிப்பதைத் தவிர்க்கலாம்.  மேலும்,  பூச்சிகளும் நோய்களின் தாக்குதலையும் பெருமளவு குறைக்கலாம்.   வண்ண அட்டைகள் எண் 2  (மஞ்சள் கலந்த பச்சை)  முதல் எண் 5 (அடர் பச்சை)  வரையுள்ளன.   தழைச்சத்தை வண்ணஅட்டையின்படி பரிந்துரைக்கப்பட்ட அளவில் இடுவதால்,  பயிர்களுக்குத் தேவையான சத்துகளும்,  அதிக உரமிடும் அளவும் குறைகிறது.   இதை நடவு நட்ட  14 நாள்கள் கழித்தும் நேரடி விதைப்புப் பயிரில் 21 நாள்கள் கழித்தும் முதன்முறை இட  வேண்டும்.   இதை சம்பா,  குறுவை,  தாளடி போன்ற பருவத்துக்கு ஏற்ப தழை உரமிடுதல்   மாறுபடும்.   
  திருந்திய நெல் சாகுபடி முறையை பின்பற்றி விவசாயிகள் கூடுதல் மகசூல் மற்றும் அதிக லாபம் பெறலாம்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai