சுடச்சுட

    

    கோவையில் 6 வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை: இலங்கை குண்டுவெடிப்பில் தொடர்பு இருப்பதாக சந்தேகம்

    By DIN  |   Published on : 13th June 2019 05:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    coimbatore

    கோவை, உக்கடம் பகுதியில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்திய வீடுகளுக்கு வெளியே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார்.


    இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என்ற தகவலின் அடிப்படையில் கோவையைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்கள் ஆறு பேரின் வீடு மற்றும் அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் புதன்கிழமை சோதனை நடத்தினர்.
     கேரள மாநிலம், கொச்சியில் இருந்து வந்திருந்த என்ஐஏ அதிகாரிகள் கோவையில் உக்கடம், போத்தனூர், குனியமுத்தூர் பகுதிகளைச் சேர்ந்த முகமது அசாருதீன், ஷாகின் ஷா என்ற இப்ராஹிம், ஷேக் இதாயத்துல்லா, அபுபக்கர், சதாம் உசேன், அக்ரம் ஜிந்தா ஆகிய ஆறு பேருக்குச் சொந்தமான வீடுகள், அலுவலகங்கள் என 7 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனைக்குப் பின்னர் 6 பேரையும் ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள என்ஐஏ அலுவலகத்துக்கு அழைத்துச் சென்ற அதிகாரிகள் அங்கு வைத்து சுமார் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக அவர்களிடம் விசாரணை நடத்தினர். 
    இதுகுறித்து என்ஐஏ தரப்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
     தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கமான ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்துகள் பதிவிட்டதாகவும், அவர்களுடன் தொடர்பில் இருந்ததாகவும் கூறி கோவை, உக்கடம் பகுதியைச் சேர்ந்த முகமது அசாருதீன் (32),  போத்தனூர் திருமறை நகரைச் சேர்ந்த அக்ரம் ஜிந்தா (26), தெற்கு உக்கடம் பகுதியைச் சேர்ந்த ஒய்.ஷேக் இதாயத்துல்லா (38), குனியமுத்தூரைச் சேர்ந்த அபுபக்கர்(29), போத்தனூர் உம்மர் நகரைச் சேர்ந்த ஏ.சதாம் உசேன் (26), தெற்கு உக்கடத்தைச் சேர்ந்த இப்ராஹிம் என்ற ஷாகின் ஷா(28) ஆகியோர் மீது என்ஐஏ தரப்பில் கடந்த மே 30 -ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
    இவர்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இளைஞர்களைச் சேர்க்க மூளைச் சலவை செய்து தமிழகம் மற்றும் கேரளத்தில் சில தாக்குதல்களை மேற்கொள்ள முடிவு செய்திருந்தனர். இதில் முக்கியக் குற்றவாளியான முகமது அசாருதீன் இவர்களுக்குத் தலைவர் போல செயல்பட்டுள்ளார். முகநூலில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவான கருத்துகளைப் பதிவிட்டு வந்துள்ளார்.
    மேலும், இவர் இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தின் முக்கியக் குற்றவாளியான மனிதவெடிகுண்டாகச் செயல்பட்ட ஜஹ்ரன் ஹஷிம் என்பவருடன் சமூகவலைதளங்கள் மூலமாகத் தொடர்பில் இருந்துள்ளார்.  இதேபோல ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக, கேரளத்தில் தீவிரவாதத் தாக்குதலுக்குத் திட்டமிட்ட கேரள மாநிலம், காசர்கோடு பகுதியைச் சேர்ந்த ரியாஸ் அபுபக்கர் 2016 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டிருந்தார். இவருடன் கோவை தெற்கு உக்கடத்தைச் சேர்ந்த இப்ராஹிம் என்ற ஷாகின் ஷா தொடர்பில் இருந்துள்ளார்.
     இதன் அடிப்படையில் மேற்கூறியவர்கள் வீடுகளில் நடத்தப்பட்டச் சோதனையில் 14 செல்லிடப்பேசிகள், 29 சிம்கார்டுகள், 10 பென் டிரைவ்கள், 3 மடிக்கணினிகள், 6 மெமரி கார்டுகள், 4 கணினி ஹார்டு டிஸ்குகள், 1 இணைய சேவை கருவி, 13 குறுந்தகடுகள், ஒரு கத்தி, ஒரு எலக்ட்ரிக் பேடன், 300 ஏர் கன் (துப்பாக்கி) குண்டுகள், துண்டுப் பிரசுரங்கள், பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட நபர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இளைஞர் கைது: கோவையில் தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர்(என்ஐஏ) நடத்திய சோதனை,  விசாரணையை அடுத்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாக சமூகவலைதளங்களில் கருத்துகள் பதிவிட்டதாக, அவர்களுடன் தொடர்பில் இருந்ததாக முகமது அசாருதீனை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai