சுடச்சுட

    

    நடிகர் சங்கத் தேர்தல்: சந்தா கட்டாததால்  விமல், ரமேஷ்கண்ணா மனுக்கள் நிராகரிப்பு

    By DIN  |   Published on : 14th June 2019 10:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    vimal


    சங்கத்துக்கு சந்தா தொகை கட்டாத காரணத்தால் நடிகர்கள் விமல், ரமேஷ் கண்ணா ஆகியோரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 
    2019 - 2022-ஆம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல், வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன், தேர்தல் அதிகாரியாக இருந்து இதனை நடத்துகிறார்.
    இரு அணிகள் போட்டி: நாசர் தலைமையிலான பாண்டவர் அணியில் பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலும், பொருளாளர் பதவிக்கு கார்த்தியும், துணைத் தலைவர்கள் பதவிக்கு கருணாஸ் மற்றும் பூச்சி முருகன் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.
    பாண்டவர் அணியை எதிர்த்து நிற்கும் சுவாமி சங்கரதாஸ் அணியில் பாக்யராஜ் தலைவராகப் போட்டியிடுகிறார். இந்த அணியின் சார்பில்  செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷும், துணைத் தலைவர் பதவிக்கு குட்டி பத்மினி, உதயா, பொருளாளர் பதவிக்கு பிரசாந்த் ஆகியோரும் களத்தில் உள்ளனர்.
    வேட்புமனுக்கள்: இந்த இரு அணிகளின் சார்பாகவும், தேர்தல் நடத்தும் அதிகாரி பத்மநாபனிடம் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தலைவர், செயலாளர், துணைத் தலைவர்கள், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் என மொத்தம்  29 பதவிகளுக்கு 58 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 
    சந்தா கட்டாத நடிகர்கள்: வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தேர்தல் அதிகாரி பத்மநாபன் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் தகுதி இல்லாத மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 
    குறிப்பாக, சுவாமி சங்கரதாஸ் அணியின் சார்பில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு மனு தாக்கல் செய்திருந்த  நடிகர்கள் விமல், ரமேஷ் கண்ணா ஆகிய இருவரின் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. 
    5 ஆண்டுகள் கட்டவில்லை: தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினராக உள்ள ஒருவர் தொடர்ச்சியாக 7 ஆண்டுகளுக்கு சந்தா தொகை கட்டவேண்டும். அப்போதுதான் அவர்கள் தேர்தலில் போட்டியிட முடியும் என்பது தேர்தல் விதி. ஆனால், நடிகர்கள் விமல், ரமேஷ் கண்ணா இருவரும் தொடர்ச்சியாக 5 ஆண்டுகள் வரை சந்தா கட்டவில்லை எனச் சொல்லப்படுகிறது. இதனாலேயே அவர்களின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. 
    69 பேர் போட்டி: நாசரின் பாண்டவர் அணியின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. 
    இரு அணிகளையும் தவிர்த்து, செயற்குழு உறுப்பினர்களுக்கு சுமார் 10 பேர் வரை சுயேச்சையாகப் போட்டியிடுகின்றனர். அவர்களையும் சேர்த்து மொத்தமாக 69 பேர் களத்தில் உள்ளனர். இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளதால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai