சுடச்சுட

    

    ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைப் பேச்சு: முன்ஜாமீன் கோரி இயக்குநர் பா. ரஞ்சித் மனு

    By DIN  |   Published on : 14th June 2019 10:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    pa-ranjith


    தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேரரசர் ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குரிய  வகையில் பேசியது தொடர்பான வழக்கில்,  முன்ஜாமீன் கோரி இயக்குநர் பா. ரஞ்சித் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் புதன்கிழமை மனுதாக்கல் செய்தார்.
    அவர் தாக்கல் செய்துள்ள மனு:
    தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாளில் நீலப்புலிகள் அமைப்பின் சார்பாக, அதன் நிறுவனர் டிஎம் மணி என்ற உமர் பாரூக்கின் நினைவு தினத்தையொட்டி பொதுக்கூட்டம் ஜூன் 5-ஆம் தேதி நடைபெற்றது. அந்த கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்த நான், பேரரசர் ராஜராஜ சோழனின் வரலாற்று உண்மைகள் சிலவற்றைக் குறிப்பிட்டுப் பேசினேன். சாதியத்தை எவ்வாறு நீக்குவது? சாதி இல்லாத சமூகத்தை உருவாக்குவது எப்படி? போன்றவை குறித்தும், நிலமற்ற மக்கள் குறிப்பாக டெல்டா பகுதியில் நிலமற்ற மக்கள் நடத்தப்பட்டது குறித்தும் உமர் பாரூக்கின் செந்தமிழ் நாட்டுச் சேரிகள் எனும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளவைகள் குறித்தும் பேசினேன். நமது வரலாறு, பேரரசர் ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலம் பொற்காலம் எனக் குறிப்பிடுகிறது. ஆனால், பல்வேறு சமூக சீர்திருத்தவாதிகளும் ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலத்தை ஒடுக்கப்பட்ட மக்களின் கற்காலம் எனக் குறிப்பிட்டுள்ளனர். தேவதாசி முறை அவரது ஆட்சிக் காலத்தில் அதிகளவு இருந்துள்ளது. 
    பல்வேறு வரலாற்றுப் புத்தகங்களிலும் ராஜராஜ சோழன் குறித்து குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களையே குறிப்பிட்டேன். இத்தகவலைப் பலரும் பேசி உள்ளனர். ஆனால், என்னுடைய பேச்சு மட்டும் சமூக வலைதளங்களில் தவறாகச் சித்திரிக்கப்பட்டது. நான் உள்நோக்கத்துடன் எந்தக் கருத்தையும் பதிவு செய்யவில்லை. எனது கருத்து எந்த சமூகத்திற்கு எதிராகவும் அமையவில்லை. நில உரிமை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலேயே பேசினேன். இந்நிலையில்,  திருப்பனந்தாளில் சர்ச்சைக்குரிய வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் நான் பேசியதாகப் போலீஸார் என் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனவே, இந்த வழக்கில் எனக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். இம்மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai