மக்கள் கொண்டாடும் மன்னனைப் பற்றி இப்படிப் பேசலாமா?: இயக்குநர் ரஞ்சித்திற்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கண்டனம் 

மக்கள் கொண்டாடும் ஒரு மன்னனைப் பற்றி பொதுவெளியில் இப்படிப் பேசலாமா? என்று ராஜராஜன் சோழன் விவகாரத்தில் இயக்குநர் ரஞ்சித்திற்கு உயர் நீதிமன்றக் கிளை கண்டனம் தெரிவித்துள்ளது.
மக்கள் கொண்டாடும் மன்னனைப் பற்றி இப்படிப் பேசலாமா?: இயக்குநர் ரஞ்சித்திற்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கண்டனம் 

மதுரை: மக்கள் கொண்டாடும் ஒரு மன்னனைப் பற்றி பொதுவெளியில் இப்படிப் பேசலாமா? என்று ராஜராஜன் சோழன் விவகாரத்தில் இயக்குநர் ரஞ்சித்திற்கு உயர் நீதிமன்றக் கிளை கண்டனம் தெரிவித்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள திருப்பனந்தாளில் நீலப்புலிகள் இயக்க நிறுவனர் உமர் பாரூக் நினைவுநாள் பொதுக்கூட்டம் கடந்த ஜூன் 5-ஆம் தேதி நடைபெற்றது. இதில் பங்கேற்ற திரைப்பட இயக்குநர் பா. இரஞ்சித், ராஜராஜ சோழனைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் சில கருத்துகளைத் தெரிவித்தார். இது சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இதையடுத்து ரஞ்சித்தின் பேச்சு இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், ஜாதிகளுக்கு இடையே பிரிவினை மற்றும் பிளவை ஏற்படுத்தும் விதத்திலும், இளைஞர்கள் மனதில் தீய எண்ணத்தை விதைக்கும் வகையிலும் உள்ளது.  எனவே, இரஞ்சித்தைத் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என திருவிடைமருதூர் காவல் துணைக் கண்காணிப்பாளரிடம் இந்து மக்கள் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலர் பாலா திங்கள்கிழமை புகார் அளித்தார்.

இதையடுத்து இரஞ்சித் மீது  இந்திய தண்டனைச் சட்டம் 153 (கலவரத்தைத் தூண்டும் நோக்கில் பேசியது), 153(ஏ), (1) (எ) (பல்வேறு பிரிவினரிடையே விரோதத்தை உருவாக்கி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

அதன் தொடர்ச்சியாக வரலாற்றுத் தகவல் அடிப்படையிலேயே அவ்வாறு பேசியதாக இயக்குநர் பா. இரஞ்சித், முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அவர் தனது மனுவில் உள்நோக்கத்துடன் நான் கருத்து தெரிவிக்கவில்லை, பல்வேறு வரலாற்றுப் புத்தகங்களில் உள்ள குறிப்புகளையே நானும் பேசினேன். என்னுடைய பேச்சு சமூகவலைத்தளங்களில் தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மக்கள் கொண்டாடும் ஒரு மன்னனைப் பற்றி பொதுவெளியில் இப்படிப் பேசலாமா? என்று ராஜராஜன் சோழன் விவகாரத்தில் இயக்குநர் ரஞ்சித்திற்கு உயர் நீதிமன்றக் கிளை கண்டனம் தெரிவித்துள்ளது.

இயக்குநர் ரஞ்சித்தின் முன் ஜாமீன் மனு வியாழனன்று விசாரணைக்கு வந்தது.அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி கூறியதாவது:

பேசுவதற்கு எத்தனையோ விஷயங்களிருக்க மக்கள் கொண்டாடும் ஒரு மன்னனைப் பற்றி பொதுவெளியில் இப்படிப் பேசலாமா?

தேவதாசி முறை எப்போதோ ஒழிக்கப்பட்டு விட்ட நிலையில் இப்போது அதைப் பற்றி மீண்டும் பேச வேண்டிய அவசியம் என்ன?

இப்போது அரசு தனது தேவைக்காக, திட்டங்களுக்காக நிலங்களை கையகப்படுத்துவது போலத்தான்,அப்போது அரசர்கள் நிலங்களை கையாண்டார்கள்.

இவ்வாறு நீதிபதி தெரிவித்த  சூழ்நிலையில் இயக்குநர் பா.ரஞ்சித்திற்கு ஜாமீன் வழங்குவதற்கு தமிழக அரசுத் தரப்பு கடும் எதிர்ப்பு  தெரிவித்தது.பின்னர் வரும் புதனகிழமை வரை ரஞ்சித்தைக்  கைது செய்யய மாட்டோம் என்று நீதிமன்றத்தில் தமிழக அரசு உத்தரவாதம் அளித்தது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com