மரணத்திலும் மறக்க முடியாத டிக்-டாக் மோகம்: விஷம் குடிப்பதை விடியோவாக பதிவிட்டு பெண் தற்கொலை

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகே செல்லிடப்பேசியை அதிக நேரம் பயன்படுத்துவதையும், டிக் டாக்கில் விடியோ பதிவேற்றுவதையும் கணவர் கண்டித்ததால் மனமுடைந்த மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். 
மரணத்திலும் மறக்க முடியாத டிக்-டாக் மோகம்: விஷம் குடிப்பதை விடியோவாக பதிவிட்டு பெண் தற்கொலை

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகே செல்லிடப்பேசியை அதிக நேரம் பயன்படுத்துவதையும், டிக் டாக்கில் விடியோ பதிவேற்றுவதையும் கணவர் கண்டித்ததால் மனமுடைந்த மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். 

தற்கொலைக்கு முன் விஷம் குடிப்பதை பதிவு செய்து அவர் வெளியிட்ட விடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள வங்காரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகள் அனிதா (24). பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், சீராநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிவேல் (29). இவர்களுக்கு  திருமணமாகி 5 ஆண்டான நிலையில்  மோனிஷா (4), அனீஷ் (2) ஆகிய இரு குழந்தைகள் உள்ளன.  கடந்த சில ஆண்டுகளாக சிங்கப்பூரில் பழனிவேல் பணிபுரிவதால்  அனிதா தனது கணவர் ஊரான சீராநத்தத்தில் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.  

இந்நிலையில், தனது செல்லிடப்பேசியில் டிக்- டாக் செயலியை பதிவிறக்கம் செய்த அனிதா,  அதைப் பயன்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டி வந்தார்.  அந்தச் செயலி மூலம் இதுவரை 200-க்கும் மேற்பட்ட விடியோக்களை பதிவு செய்து வெளியிட்டுள்ளார். இதனால் குழந்தைகளை முறையாகப் பராமரிக்காமல் இருந்தாராம்.

இதையறிந்த பழனிவேலின் பெற்றோர் அனிதாவைக் கண்டித்தும் பலனில்லை.  இதுகுறித்து வெளிநாட்டில் இருக்கும் அவரது கணவரிடம் உறவினர்கள் புகார் கூறியதை தொடர்ந்து, தனது மனைவியை செல்லிடப்பேசியில் தொடர்புகொண்ட பழனிவேல் அவரைக் கடுமையாகக் கண்டித்தாராம்.  இதனிடையே, கடந்த திங்கள்கிழமை வீட்டின் எதிரே விளையாடிக்கொண்டிருந்த மகள் மோனிஷா கீழே விழுந்து காயமடைந்தும், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் அனிதா அலட்சியப்படுத்தினாராம்.  இதையறிந்த பழனிவேல் செல்லிடப்பேசி மூலம் திட்டியதால் மனமுடைந்த அனிதா, வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். 

அதை டிக் டாக் செயலி மூலம் விடியோவாக எடுத்து பதிவேற்றிவிட்டு மயங்கி விழுந்தார்.
 
இதையடுத்து அரியலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனிதா திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார். 

இதுகுறித்து அனிதாவின் தாய் தங்கமணி செவ்வாய்க்கிழமை அளித்த புகாரின்பேரில், குன்னம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்கின்றனர். இந்நிலையில், அனிதா தற்கொலை செய்வதற்காக டிக்- டாக் செயலியில் பதிவேற்றிய விடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com