திமுகவின் எதிர்ப்பால்தான் மும்மொழிக் கொள்கை நிறுத்தம்:  மு.க.ஸ்டாலின் பேச்சு

திமுகவின் எதிர்ப்பால்தான் மும்மொழிக் கொள்கை திட்டம் நிறுத்தப்பட்டது என்றார்  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். 
கோவையில் புதன்கிழமை நடைபெற்ற முன்னாள் எம்.பி.க்கள் மு.ராமநாதன், கா.ரா.சுப்பையன் படத் திறப்பு விழாவில் பேசுகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
கோவையில் புதன்கிழமை நடைபெற்ற முன்னாள் எம்.பி.க்கள் மு.ராமநாதன், கா.ரா.சுப்பையன் படத் திறப்பு விழாவில் பேசுகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.


திமுகவின் எதிர்ப்பால்தான் மும்மொழிக் கொள்கை திட்டம் நிறுத்தப்பட்டது என்றார்  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். 
கோவையில் அண்மையில் காலமான முன்னாள் மக்களவை உறுப்பினர்கள் மு.ராமநாதன், கா.ரா.சுப்பையன் ஆகியோர் படத் திறப்பு விழா கோவையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மு.ராமநாதன், கா.ரா.சுப்பையன்  ஆகியோர் படங்களைத் திறந்துவைத்துப் பேசியதாவது: 
திராவிடர் இயக்கம், சமூகநீதி, மொழிப் பிரச்னை என அனைத்தையும் அறிந்து பல்கலைக்கழகமாக விளங்கியவர் மு.ராமநாதன். கட்சிக்காக 27 முறை சிறைக்குச் சென்றவர். கோவை - பெங்களூரு இண்டர்சிட்டி ரயிலைக் கொண்டு வந்தவர். கோவையில் நேரு விளையாட்டு மைதானம் அமையக் காரணமாக இருந்தவர். 
அதேபோல், கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லாமல் இருந்தபோதும், என்னை அழைத்துக் கூட்டம் நடத்தியவர் கா.ரா.சுப்பையன். அவர் மக்களவை உறுப்பினராக இருந்தபோது, அவருக்கு ஒதுக்கப்பட்ட மேம்பாட்டு நிதியை முழுமையாக மக்களுக்காகப் பயன்படுத்தியவர். ஹிந்தியை எதிர்த்துப் போராடியதில் இருவருக்கும் முக்கியப் பங்கு உண்டு. பிரதமர் மோடி இரண்டாவது முறையாகப் பதவியேற்றதும் புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் மும்மொழித் திட்டம் கொண்டு வர முயற்சிக்கிறார்.  கடந்த கால தமிழக வரலாற்றையும், மாணவர்கள் நடத்திய போராட்டத்தையும் அவர்கள் உணரத் தவறி விட்டனர். மும்மொழித் திட்டம் அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் தமிழக இளைஞர்கள் பொங்கி எழுந்ததைப் பார்த்தோம். மும்மொழித் திட்டத்தை திணிக்க மத்திய அரசு முயன்று வருகிறது. திமுகவின் எதிர்ப்பால்தான் மும்மொழிக் கொள்கை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்றார். 
இதில், மக்களவை உறுப்பினர்கள் ஆ.ராசா, பி.ஆர்.நடராஜன், முன்னாள் மக்களவை உறுப்பினர் விடுதலை விரும்பி, மாவட்டப் பொறுப்பாளர் நா.கார்த்திக், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, திமுக துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் கண்ணப்பன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com