பொறியியல் கல்விக் கட்டணத்தை உயர்த்துவதில் தொடரும் சிக்கல்!

பல ஆண்டுகளுக்குப் பிறகு பொறியியல் படிப்புகளுக்கான கல்விக் கட்டணத்தை அண்ணா பல்கலைக்கழகம் உயர்த்த முடிவு செய்தபோதும்,
பொறியியல் கல்விக் கட்டணத்தை உயர்த்துவதில் தொடரும் சிக்கல்!


பல ஆண்டுகளுக்குப் பிறகு பொறியியல் படிப்புகளுக்கான கல்விக் கட்டணத்தை அண்ணா பல்கலைக்கழகம் உயர்த்த முடிவு செய்தபோதும், சிக்கல் நீடிப்பதாகப் பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர். உயர்கல்வித் துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி, இந்த விவகாரத்தை மீண்டும் பல்கலைக்கழக ஆட்சிக் குழுவுக்கு எடுத்துச் செல்ல பல்கலைக்கழக அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். 

பொறியியல் படிப்புகளுக்கான கல்விக் கட்டணம் கடந்த 2002-ஆம் ஆண்டு உயர்த்தப்பட்டது. அதன்படி, இப்போது வரை ஒரு பருவத்துக்கு ரூ.8,500 கல்விக் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. 

2002-ஆம் ஆண்டுக்குப் பிறகு கடந்த 17 ஆண்டுகளாக கல்விக் கட்டணம் உயர்த்தப்படவில்லை. இந்தச் சூழலில், செலவு அதிகரிப்பு, பேராசிரியர்களுக்கான ஊதிய உயர்வு, விலைவாசி உயர்வு மற்றும் பொறியியல் கல்லூரி நிர்வாகிகளின் தொடர் கோரிக்கை ஆகியவற்றின் அடிப்படையில், பொறியியல் கல்விக் கட்டணம் ரூ. 8,500 என்பதை ஒரு பருவத்துக்கு ரூ. 20,000-ஆக உயர்த்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்தது.

இதற்கு ஆட்சிக் குழு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து கடந்த மாதம் அரசின் ஒப்புதலுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அரசின் ஒப்புதல் கிடைக்கவில்லை. அதனைத் தொடர்ந்து, அரசின் ஒப்புதலைப் பெறும் வகையில், பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிதிக் குழு கூட்டத்தில் இந்த விவகாரம் மீண்டும் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இக் கூட்டத்தில் பங்கேற்ற உயர்கல்வித் துறை அதிகாரிகள், இந்த விவகாரத்தை மீண்டும் பல்கலைக்கழக ஆட்சிக் குழு ஒப்புதலுக்கு எடுத்துவருமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த இழுபறி காரணமாக, பல்கலைக்கழகம் ஏற்கெனவே அறிவித்தபடி நடப்பு கல்வியாண்டு முதல் கல்விக் கட்டணத்தை உயர்த்துவதில் சிக்கல் எழுந்துள்ளதாகப் பேராசிரியர்கள்  தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து பல்கலைக்கழக உயர் அதிகாரி ஒருவர் கூறியது:
அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எம்.கே.சூரப்பா பதவியேற்றவுடன், பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார்.

பல்கலைக்கழக நிதி நெருக்கடி காரணமாக பேராசிரியர்களுக்கு கடந்த இரண்டு ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையிலான ஊதிய உயர்வு பலன்கள் இதுவரை வழங்கப்படவில்லை. இதுபோன்ற பல்வேறு விஷயங்களைக் கருத்தில் கொண்டே, கடந்த 17 ஆண்டுகளாக உயர்த்தப்படாத கல்விக் கட்டணத்தை, பிற உயர்கல்வி நிறுவனங்களுக்கு இணையாக உயர்த்த பல்கலைக்கழகம் முடிவு செய்தது.

இந்தக் கல்விக் கட்டண உயர்வுக்கு ஏற்கெனவே பல்கலைக்கழக ஆட்சிக் குழு ஒப்புதல் அளித்த நிலையில், இப்போது மீண்டும் ஆட்சிக் குழுவுக்கு எடுத்து வருமாறு உயர்கல்வித் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். எனவே,  பல்கலைக்கழகத்தில் வரும் 19-ஆம் தேதி நடைபெற உள்ள ஆட்சிக் குழு கூட்டத்தில் இந்த விவகாரம் மீண்டும் கொண்டுவரப்பட உள்ளது என்றார் அவர்.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கூறியது:
பொறியியல் கல்விக் கட்டண உயர்வு, நான் துணைவேந்தராக இருந்தபோது மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு, கட்டணம் உயர்த்தப்படவே இல்லை. இதுதொடர்பாக, பல்கலைக்கழக ஆட்சிக் குழு எடுத்துள்ள முடிவே இறுதியானது. 

இருந்தபோதும், கல்விக் கட்டண உயர்வு என்பது மாணவர்கள், பெற்றோரை நேரடியாகப் பாதிக்கும் என்பதால் இதற்கு அரசின் ஒப்புதல் தேவைப்படுகிறது. அதுவும் கட்டாயம் அல்ல. எனவே, இதற்கு உடனடியாக உயர்கல்வித் துறை ஒப்புதல் அளிக்கவேண்டும். அவ்வாறு ஒப்புதல் அளிக்காவிடில்,  நிதிப் பற்றாக்குறையால் பல்கலைக்கழக ஆராய்ச்சித் திட்டங்கள், புதிய கண்டுபிடிப்புகள், கல்வி வளர்ச்சித் திட்டங்கள் ஆகியவை பாதிக்கப்பட்டு, இதன் விளைவாக, மாணவர்கள் தரமற்ற பொறியியல் கல்வியைப் பெறும் நிலை ஏற்படும் என்றார் அவர்.

அண்ணா பல்கலைக்கழகம் கல்விக் கட்டணத்தை உயர்த்த அரசின் ஆமோதிப்பை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. ஏற்கெனவே, பொறியியல் கல்விக்கு வரவேற்புக் குறைந்துவிட்டிருக்கும் நிலையில், கல்விக் கட்டணம் அதிகரிக்கப்படுமானால், பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கை மேலும் கணிசமாகக் குறைந்து, பல இடங்கள் நிரப்பப்படாமல் இருக்கும் நிலைமை ஏற்படக்கூடும் என்று உயர்கல்வித் துறை தயங்குகிறது.

பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை பாதிக்காமல் பல்கலைக்கழகத்தில் நிதி நெருக்கடியை எப்படி சமாளிப்பது என்று தெரியாத குழப்பத்தில் அரசும், பல்கலைக்கழகமும் தடுமாறுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com