முன்னாள் எம்எல்ஏ வேல்துரையின் ஊதியத்தை திரும்பப் பெற இடைக்காலத் தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ வேல்துரை பெற்ற ஊதியத்தை திரும்பப் பெறும் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ வேல்துரை பெற்ற ஊதியத்தை திரும்பப் பெறும் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2006-ஆம் ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவி சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பி.வேல்துரையும், அதிமுக சார்பில் பி.ஹெச்.மனோஜ் பாண்டியனும் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வேல்துரை வெற்றி பெற்றார். 
இந்த வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பி.ஹெச்.மனோஜ் பாண்டியன் வழக்குத் தொடர்ந்தார். அரசு ஒப்பந்ததாரராக இருந்து கொண்டு வேல்துரை சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். எனவே அவரது வெற்றியைச் செல்லாது என அறிவிக்க வேண்டும் என அவர் தாக்கல் செய்த மனுவில் கோரியிருந்தார். 
இந்த வழக்கை  சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து மனோஜ் பாண்டியன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அரசு ஒப்பந்ததாரராக இருந்து கொண்டே தேர்தலில் போட்டியிட்ட வேல்துரையின் வெற்றி செல்லாது என தீர்ப்பளித்தது. ஆனால் உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வருவதற்கு முன்பாகவே வேல்துரை எம்.எல்.ஏ.வாக 5 ஆண்டுகள் பதவி வகித்து முடித்துவிட்டார். இந்த நிலையில் சட்டப்பேரவைச் செயலாளர், உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பின் அடிப்படையில் கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகள் எம்எல்ஏவாக பதவி வகித்த வேல்துரை பெற்ற ஊதியம் மற்றும் 201 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்றதற்காக நாளொன்றுக்கு ரூ.500 அபராதம் உள்பட ரூ.21 லட்சத்து 58 ஆயிரத்தை செலுத்தக் கோரி நோட்டீஸ் பிறப்பித்திருந்தார். தமிழக சட்டப்பேரவைச் செயலாளரின் இந்த நோட்டீûஸ எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வேல்துரை வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி, சட்டப் பேரவை உறுப்பினராக இருந்தபோது வேல்துரை ஊதியமாக பெற்ற ரூ.21 லட்சத்து 58 ஆயிரத்தை 4 வார காலத்துக்குள் சட்டப்பேரவைச் செயலாளரிடம் திரும்பச் செலுத்துமாறு உத்தரவிட்டிருந்தார். 
இதனையடுத்து தனிநீதிபதியின் உத்தரவை எதிர்த்து வேல்துரை சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சி.வி.கார்த்திகேயன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், வேல்துரை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தபோது பெற்ற ஊதியத்தை திரும்ப பெறும் விவகாரத்தில், நீதிமன்றத்தின் அடுத்த உத்தரவு வரும் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 4 வார காலத்துக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com