சுடச்சுட

  

  பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்ய வேண்டும்: ஆளுநருக்கு ராமதாஸ் கடிதம்

  By DIN  |   Published on : 14th June 2019 02:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வியாழக்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.
  அவர் எழுதியுள்ள கடிதத்தின் விவரம்: இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேருக்கு தொடக்கத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் பல்வேறு காலகட்டங்களில் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் 1991-ஆம் ஆண்டு முதல் சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
  பொதுவாக வாழ்நாள் சிறை தண்டனை என்பது நடைமுறையில் 14 ஆண்டுகள் என்றே கணக்கிடப்பட்டு, தண்டனைக் காலத்தை கழித்தவர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர். 
   ஆனால், 28 ஆண்டுகள் முழுமையாக சிறை தண்டனையை அனுபவித்து முடித்த பிறகும் சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கவில்லை. 
  7 தமிழர்கள் விடுதலை தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த ஆண்டு செப்டம்பர் 6 -ஆம் தேதி அளித்த தீர்ப்பில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்ய மாநில ஆளுநருக்கு அதிகாரம் உண்டு என்று ஆணையிட்டது. அதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு செப்டம்பர் 9-ஆம் தேதி கூடிய தமிழக அமைச்சரவை, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 161-ஆவது பிரிவின்படி அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி 7 தமிழர்களையும்  விடுதலை செய்யும்படி தங்களுக்கு (ஆளுநருக்கு) பரிந்துரை செய்தது.  ஆனால், அந்தப் பரிந்துரை தங்களுக்கு அனுப்பப்பட்டு இன்றுடன் 276 நாள்கள் ஆகிவிட்ட நிலையில், இன்று வரை அதன்மீது எந்த முடிவையும் தாங்கள் எடுக்காதது வருத்தமளிக்கிறது.
  எனவே, இனியும் தாமதிக்காமல் தமிழக அமைச்சரவைத் தீர்மானத்தின் அடிப்படையில் 7 தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய உரிய ஆணைகளைப் பிறப்பிக்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் ராமதாஸ் கூறியுள்ளார். ஆளுநருக்கு அனுப்பிய கடிதத்தின் நகலை முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் ராமதாஸ் அனுப்பியுள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai