ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததை இப்போது  பேச வேண்டிய அவசியம் என்ன?இயக்குநர் ரஞ்சித்துக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விஷயத்தை இப்போது பேச வேண்டிய அவசியம் என்ன என்று இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததை இப்போது  பேச வேண்டிய அவசியம் என்ன?இயக்குநர் ரஞ்சித்துக்கு உயர்நீதிமன்றம் கேள்வி


ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விஷயத்தை இப்போது பேச வேண்டிய அவசியம் என்ன என்று இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
 தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாளில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித், பேரரசர் ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குரிய சில கருத்துக்களைக் கூறியிருந்தார். இதையடுத்து திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. 
இந்நிலையில், தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இயக்குநர் ரஞ்சித் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ராஜராஜ சோழன் குறித்து பல வரலாற்று புத்தகங்களில் கூறியுள்ள தகவல்களைத் தான் நான் தெரிவித்தேன். என்னுடைய பேச்சு  சமூக வலைதளங்களில் தவறாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டிருந்தார்.   இந்த மனு நீதிபதி பி.ராஜமாணிக்கம் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது இயக்குநர் ரஞ்சித்துக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என்று மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த வழக்குரைஞர் எஸ்.முத்துக்குமார் தரப்பில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. அவரது தரப்பு வழக்குரைஞர்கள் வாதிடுகையில், ராஜராஜ சோழன் ஆட்சியின்போது மக்கள் எந்த பாகுபாடுகளுக்கும் ஆளாகவில்லை என்பதற்கு பல நூல்கள் ஆதாரங்களாக உள்ளன.
 டெல்டா பகுதியில் தரிசு நிலங்களையும் விவசாய நிலங்களாக மாற்றியவர் ராஜராஜ சோழன். கிழக்கு ஆசியாவின் பெரும்பாலான பகுதிகளில் தனது ஆட்சியை கோலோச்சியவர். அதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் இயக்குநர் ரஞ்சித் பேசியுள்ளார். அதனால் அவருக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என்றனர்.
இயக்குநர் ரஞ்சித் தரப்பு வழக்குரைஞர் வாதிடுகையில், பல்வேறு புத்தகங்களில்  கூறப்பட்டிருந்ததையும்,  தான் அறிந்த வரலாற்று விஷயங்களைத் தான் மனுதாரர் பேசியுள்ளார். அவரது பேச்சு தவறான நோக்கத்தில் சித்திரிக்கப்பட்டுள்ளது. ஆகவே,  மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்க உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார்.
இதைத் தொடர்ந்து நீதிபதி, இன்றைய காலகட்டத்திலும் தேவைப்படும்பட்சத்தில் பொதுமக்களின் நிலங்களை அரசு கையகப்படுத்தி, அதற்கு உரிய இழப்பீட்டை வழங்குகிறது. தேவதாசி முறை பல ஆண்டுகளுக்கு முன்பே ஒழிக்கப்பட்டுவிட்டது. ஆயிரம் ஆண்டுகள் கழித்து இவ்விஷயத்தைப் பேச வேண்டிய அவசியம் என்ன? மக்கள் கொண்டாடும் அரசரை இவ்வாறு பேசியது ஏன்? எனக் கேள்வி எழுப்பினார்.
இதனைத்தொடர்ந்து  முன்ஜாமீன் வழங்குவதற்கு அரசுத் தரப்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட மனுதாரரின் வழக்குரைஞர், இந்த வழக்கில் மனுதாரரை  கைது செய்யக்கூடாது என்று உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். அதற்கு காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், மனுதாரரை தற்போதைய நிலையில் கைது செய்ய மாட்டோம் என்று தெரிவித்தார்.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த வழக்கு குறித்து காவல் துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com