குரூப்-1 தேர்வு: உத்தேச விடைப் பட்டியலில் தவறு : டிஎன்பிஎஸ்சி தகவல்

குரூப்-1 முதல்நிலைத் தேர்வின் உத்தேச விடைப்பட்டியலில் 24 விடைகளில் தவறு உள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 
குரூப்-1 தேர்வு: உத்தேச விடைப் பட்டியலில் தவறு : டிஎன்பிஎஸ்சி தகவல்


குரூப்-1 முதல்நிலைத் தேர்வின் உத்தேச விடைப்பட்டியலில் 24 விடைகளில் தவறு உள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 
சென்னை உயர்நீதிமன்றத்தில் மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த எஸ்.விக்னேஷ் தாக்கல் செய்த மனுவில், கடந்த மார்ச் மாதம் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் குரூப்-1 முதல்நிலைத் தேர்வை நடத்தியது. இந்தத் தேர்வை தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 68 ஆயிரம் பேர் எழுதினர். 
தனியார் நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டு அதிகாரியாக பணிபுரியும் நானும் இந்தத் தேர்வை எழுதினேன். தேர்வின் உத்தேச விடைப்பட்டியல் தேர்வு முடிந்த சில நாள்களில் வெளியிடப்பட்டது. அதில் கேட்கப்பட்டிருந்த 200 கேள்விகளில் 18 கேள்விகளுக்கான பதில்கள் தவறாக இருந்தன. நான் உள்பட பலரும் அந்தத் தவறுகளைச் சுட்டிக்காட்டி திருத்தப்பட்ட விடைப் பட்டியலை வெளியிடக் கோரிக்கை வைத்தோம். எங்களது கோரிக்கையை கண்டுகொள்ளாத தேர்வாணையம் குரூப்-1 முதல்நிலைத் தேர்வுக்கான முடிவுகளை கடந்த ஏப்ரல் 3-ஆம் தேதி வெளியிட்டது. மேலும், வரும் ஜூலை மாதம் குரூப்-1 பிரதான தேர்வை நடத்தவுள்ளது. 
எங்களது கோரிக்கையை ஏற்று திருத்தப்பட்ட விடைப் பட்டியலை வெளியிட்டிருந்தால், 175.5 மதிப்பெண்கள் பெற்ற எனக்கு 195 மதிப்பெண்கள் கிடைத்திருக்கும். 
எனவே, முதல்நிலைத் தேர்வுக்கான திருத்தப்பட்ட விடைப் பட்டியலை வெளியிட உத்தரவிட வேண்டும். அதுவரை குரூப்-1 பிரதானத் தேர்வை நடத்த தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். 
இந்த மனு நீதிபதி வி.பார்த்திபன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. 
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் எஸ்.எஸ்.மாதவன், குரூப்-1 முதல்நிலைத் தேர்வு விடைப் பட்டியலில் 18 கேள்விகளுக்கான பதில்களில் தவறு இருப்பதை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டியிருந்தோம். 
தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டால் உடனடியாக நிபுணர்கள் குழுவை அமைத்து, சரியான பதில்களை கண்டறிந்து திருத்தப்பட்ட விடைப் பட்டியலை வெளியிட வேண்டும். ஆனால், தேர்வாணையம் மனுதாரரின் கோரிக்கையைக் கண்டுகொள்ளாமல் முதல்நிலைத் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டன என்று தெரிவித்தார். 
அப்போது தேர்வாணையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஆர்.தியாகராஜன், தேர்வில் கேட்கப்பட்ட 200 கேள்விகளில் 24 கேள்விகளுக்கான விடைகளில் தவறு உள்ளது. எனவே, அதுதொடர்பாக பதிலளிக்க கால அவகாசம் தேவை எனத் தெரிவித்தார். 
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, குரூப்-1 முதல்நிலைத் தேர்வில் ஐஏஎஸ் தேர்வுக்கு இணையாக கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. 
இந்தத் தேர்வு இளைஞர்கள் பலரின் கனவாக உள்ளது. இதுபோன்ற முக்கியமானத் தேர்வுகளில் குளறுபடிகள் நடப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. தவறுகளை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டப்பட்ட பின்னரும் எதன் அடிப்படையில் அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் முடிவுகளை வெளியிட்டது? என கண்டனம் தெரிவித்தார்.
மேலும் இந்த மனு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com