
சர்வதேச குருதி கொடையாளர் தினத்தையொட்டி, தமிழகத்தில் ரத்த தான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள தன்னார்வலர்களை கெளரவிக்க அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி மாவட்டந்தோறும், அதிக அளவில் ரத்த தானம் செய்தவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழும், நினைவுப் பரிசும் ஆட்சியர்கள் மூலமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதைத் தவிர, தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சிறப்பு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன.
இதுகுறித்து குருதி பாதுகாப்பு மற்றும் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் இணை இயக்குநர் சுபாஷ் கூறியதாவது:
குருதி கொடையாளர் தினம் ஆண்டுதோறும் ஜூன் 14-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. தமிழகத்தைப் பொருத்தவரை ரத்த தானத்தை ஊக்குவிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதேபோன்று பாதுகாப்பான ரத்தம் மட்டுமே பயனாளிகளுக்கு சென்றடைய வேண்டும் என்பதையும் உறுதி செய்து வருகிறோம்.
தற்போது மாநிலத்தில் பல லட்சம் குருதி கொடையாளர்கள் உள்ளனர். கடந்த ஆண்டு மட்டும் 9.17 லட்சம் யூனிட் ரத்தம், தானமாக பெறப்பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் அதிகமாகும். மாநில சுகாதாரத் துறை முன்னெடுத்து வரும் தொடர் நடவடிக்கைகள் காரணமாக ரத்த தானம் செய்வது மேம்பட்டு வருகிறது.
இந்நிலையில், நிகழாண்டு உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் இதற்காக சிறப்பு நிதி வழங்கப்பட்டுள்ளது. அதன் வாயிலாக, ரத்த தானத்தை ஊக்குவிக்கும் வகையில் சிறப்புப் பேரணிகள், நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
அதேபோன்று ஓராண்டில் 4 முறை ரத்த தானம் அளித்த ஆண்களுக்கும், 3 முறை அளித்த பெண்களுக்கும் மாவட்ட ஆட்சியர் மூலமாக பாராட்டுச் சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தானமாக பெறப்பட்ட ரத்தம், சேமிப்பு வங்கிகளில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ரத்த அணுக்களை தனித்தனியாகப் பிரித்து பாதுகாப்பதன் மூலம் அவற்றை 5 ஆண்டுகள் வரை பயன்படுத்த முடியும். அதற்கென சிறப்பு மருத்துவ சாதனங்களும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன என்றார் அவர்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G