வனத் துறையினர் வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனச் சரகத்துக்கு உள்பட்ட மோத்தேபாளையம் கிராமத்தில் வனத் துறையினர் வைத்த கூண்டில் 2
மோத்தேபாளையம் கிராமத்தில் வனத் துறையினர் வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை. 
மோத்தேபாளையம் கிராமத்தில் வனத் துறையினர் வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை. 


கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனச் சரகத்துக்கு உள்பட்ட மோத்தேபாளையம் கிராமத்தில் வனத் துறையினர் வைத்த கூண்டில் 2 வயதுடைய பெண் சிறுத்தை வியாழக்கிழமை சிக்கியது.
 சிறுமுகை வனச் சரகத்துக்கு உள்பட்ட சென்னா மலைக்கரடு வனப் பகுதியை ஒட்டி மோத்தேபாளையம், அறிவொளி நகர், வீராசாமி நகர் உள்ளிட்ட கிராமங்கள் அமைந்துள்ளன. இந்தக் கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. வனத்திலிருந்து வரும் கரடி, காட்டுப் பன்றி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள், இப்பகுதியில் உள்ள 
குடியிருப்பு, விளைநிலங்களுக்குள் நுழைந்து பொதுமக்களையும், விவசாயிகளையும் அவ்வப்போது அச்சுறுத்தி வருகின்றன. இந்நிலையில், மோத்தேபாளையம் கிராமப் பகுதியில் 2 குட்டிகளுடன் கூடிய சிறுத்தை கடந்த சில நாள்களாக கன்றுக்குட்டி, நாய் போன்ற வளர்ப்புப் பிராணிகளைப் பிடித்துச் செல்வதாக சிறுமுகை வனத் துறையினரிடம் பொதுமக்கள் தெரிவித்தனர். சம்பவ இடத்தை ஆய்வு செய்த வனத் துறையினர் சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்தனர். இதையடுத்து மோத்தேபாளையம் கிராமத்தில் வனத்தை ஒட்டிய விளைநிலப் பகுதியில் சிறுத்தையைப் பிடிக்கும் கூண்டு வைக்கப்பட்டது. 
இந்த கூண்டில் சுமார் இரண்டரை வயதுள்ள பெண் சிறுத்தை ஒன்று வியாழக்கிழமை சிக்கியது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினர், அந்த சிறுத்தை சிக்கிய கூண்டினை தனி வாகனத்தில் ஏற்றி, சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகர் வனப் பகுதியில் உள்ள மங்களப்பட்டிக்கு அனுப்பிவைத்தனர். துப்பாக்கி ஏந்திய வனத் துறையினர் பாதுகாப்புப் பணிக்கு உடன் சென்றனர்.  
சிறுத்தையின் உடல்நலம் நன்றாக இருந்ததால் தெங்குமரஹாடா, மங்களப்பட்டி அடர்ந்த வனப் பகுதியில் கூண்டைத் திறந்து சிறுத்தையை வியாழக்கிழமை மாலையில் விடுவித்தனர்.
இந்நிலையில், மோத்தேபாளையம் பகுதி மக்கள் கூறுகையில், இப்பகுதியில் குட்டியுடன் நடமாடி வந்த சிறுத்தைகளில் ஒன்று மட்டுமே பிடிபட்டுள்ளது. மீதமுள்ள 2 சிறுத்தைகளை வனத் துறையினர் பிடிக்க வேண்டும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com