சுடச்சுட

  

  தமிழைப் பயன்படுத்தத் தடை இல்லை: முந்தைய உத்தரவை திரும்பப் பெற்றது ரயில்வே

  By DIN  |   Published on : 15th June 2019 11:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  indian-railway

  கட்டுப்பாட்டு அறைக்கும்,  நிலைய அதிகாரிகளுக்கும் இடையே உள்ள தகவல் பரிமாற்றம் ஆங்கிலம் அல்லது ஹிந்தி மொழியில் மட்டுமே இருக்க வேண்டும் என்ற உத்தரவை ரயில்வே நிர்வாகம் திரும்பப் பெற்றது.  பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, இந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது.

  மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே ஒரே தண்டவாளத்தில் இரு ரயில்கள் எதிர் எதிரே வந்தன. அப்போது, ஓட்டுநரின் சாமர்த்தியத்தால், அதிர்ஷ்டவசமாக விபத்து தவிர்க்கப்பட்டது.  இந்த தவறுக்கு மொழிப் பிரச்னையால், தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட குளறுபடியே காரணம் என்பது தெரியவந்தது. 

  இதையடுத்து, தகவல் பரிமாற்றத்தில் பிரச்னையை தவிர்க்கும் விதமாக, பல்வேறு நடவடிக்கைகளில் ரயில்வே நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. 

  இதன் தொடர்ச்சியாக, சென்னை கோட்டத்தை சேர்ந்த முதுநிலை கோட்ட இயக்க மேலாளர் சிவா, அனைத்து ரயில்வே கட்டுப்பாட்டு அலுவலர்கள் மற்றும் நிலைய அதிகாரிகளுக்கு அவசர சுற்றறிக்கை ஒன்றை கடந்த 12-ஆம் தேதி அனுப்பினார். அதில், "ரயில்வே கட்டுப்பாட்டு அலுவலர்கள் மற்றும் நிலைய அதிகாரிகள் ரயில்வே தொடர்பான பணிகள், ரயில் இயக்கம், ரயில் வந்து செல்லும் அறிவிப்பு ஆகியவற்றை ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் செய்ய வேண்டும்.

  குறிப்பாக கட்டுப்பாட்டு அறைக்கும், நிலைய அதிகாரிகளுக்கும் இடையே உள்ள தகவல் பரிமாற்றம் ஆங்கிலம் அல்லது ஹிந்தி மொழியில் மட்டுமே இருக்க வேண்டும்.  தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

  இந்த சுற்றறிக்கைக்கு தமிழக அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். 

  பொது மேலாளரிடம் மனு: இந்நிலையில், இந்த சுற்றறிக்கையைக் கண்டித்தும், தமிழ் மொழியில் தகவல் பரிமாற்றம் தொடர வேண்டும் என்று கோரியும்  தெற்கு ரயில்வே பொது மேலாளர் ராகுல் ஜெயினை,  மக்களவை உறுப்பினர்  தயாநிதி மாறன் வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து  மனு கொடுத்தார். அப்போது அவருடன் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.எல்.ஏ.க்கள் சேகர்பாபு, ரவிச்சந்திரன் மற்றும் 300-க்கும் மேற்பட்ட தொண்டர்களும் வந்தனர். 
  தெற்கு ரயில் பொது மேலாளர் அலுவலகத்தில் திமுக தொண்டர்கள் ஹிந்தி திணிப்புக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். 

  இதையடுத்து,  சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ள உத்தரவு உடனே ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் ராகுல் ஜெயின் உறுதியளித்தார். இதையடுத்து, அந்த சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai