கட்டுப்பாடு இல்லாத தனியார் பொழுதுபோக்கு பூங்காக்கள்!

தொடர் விபத்துகள், குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் மற்றம் விதிமீறலில் ஈடுபட்டு வரும் தனியார் பொழுதுபோக்கு பூங்காக்களைக் கட்டுப்படுத்த தனிச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்கிற கோரிக்கை சமூக
கட்டுப்பாடு இல்லாத தனியார் பொழுதுபோக்கு பூங்காக்கள்!

தொடர் விபத்துகள், குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் மற்றம் விதிமீறலில் ஈடுபட்டு வரும் தனியார் பொழுதுபோக்கு பூங்காக்களைக் கட்டுப்படுத்த தனிச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்கிற கோரிக்கை சமூக ஆர்வலர்களால் எழுப்பப்படுகிறது.
மேலும், இந்தப் பூங்காக்களைக் கண்காணிக்க பொதுப்பணித் துறை, உள்ளாட்சித்துறை, வருவாய்த் துறை, காவல்துறை, தீயணைப்புத் துறை அடங்கிய கூட்டு நடவடிக்கை குழுவை உருவாக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
கோடை காலம் நிறைவடைய உள்ள நிலையில்,  தனியார் பொழுதுபோக்குப் பூங்காக்களில் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஒரு காலத்தில் சென்னை, கோயம்புத்தூர் நகரங்களைச் சுற்றி அமைக்கப்பட்ட தனியார் பூங்காக்கள் இப்போது சேலம், மதுரை உள்ளிட்ட நகரங்களையும் மையமாகக் கொண்டு இயங்குகின்றன. தற்போது தமிழகம் முழுவதும் 10 தனியார் பொழுதுபோக்குப் பூங்காக்கள் உள்ளன.
நாட்டில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் துறையாக, தனியார் பொழுதுபோக்குப் பூங்காக்கள் உள்ளன. இந்தத் துறையில் ஆண்டுக்கு ரூ.1,700 கோடி வருவாய் ஈட்டப்படுவதாக அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஆண்டுக்கு 10 சதவீத வளர்ச்சியைக் கண்டு வரும் இத்துறை அடுத்த ஒரு சில ஆண்டுகளில் ரூ.4 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
அதுபோல, இந்தப் பூங்காக்களுக்கு இப்போது ஆண்டுக்கு 3 கோடி பேர் வந்து செல்லும் நிலையில், அடுத்த சில ஆண்டுகளில் அது 4 கோடியாக உயரும் எனவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 
பழைய ராட்டினங்கள்: குழந்தைகள், இளைஞர்கள் மட்டுமின்றி அனைத்து வயதினரையும் கவர்ந்திழுக்கும் இந்தப் பூங்காக்களின் பாதுகாப்பு அண்மைக் காலமாக கேள்விக்குறியாக மாறியுள்ளது. 
சில பூங்காக்களில் உள்ள ராட்டினங்கள், தண்ணீர் விளையாட்டுகள் உள்ளிட்டவற்றில் போதுமான பாதுகாப்புடன் இல்லை எனவும், சில பூங்காக்களில் விபத்து ஏற்பட்டு, உயிர் இழப்புகள் ஏற்பட்ட பின்னரும் அந்த நிலையே நீடிப்பதாகவும் புகார் தெரிவிக்கின்றனர்.
இந்தப் பொழுதுபோக்கு பூங்காக்கள் மிக அதிக வருவாயை ஈட்டுகின்றபோதும், ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட பழைய ராட்டினங்களை வெளிநாடுகளில் இருந்து குறைந்த விலையில் இறக்குமதி செய்கின்றனர். புது ராட்டினங்களுக்கு தொடர் பராமரிப்புத் தேவையிருக்காது. ஆனால், இதுபோன்ற பயன்படுத்தப்பட்ட பழைய ராட்டினங்களை குறைந்தபட்சம் ஆண்டுக்கு இருமுறையாவது சீசன் இல்லாத நேரங்களில் பராமரிப்புச் செய்ய வேண்டும்.
ஆனால், இங்குள்ள பொழுதுபோக்குப் பூங்காக்கள் அவ்வாறு தொடர் பராமரிப்புச் செய்வதில்லை. இந்த ஆபத்தை உணராமல், ஆசையுடன் துள்ளிக் குதித்து இவற்றில் ஏறும் குழந்தைகளும், பெற்றோரும் விபத்துகளையும், உயிரிழப்புகளையும் சந்திக்கும் சூழல் ஏற்படுகிறது. 
சில பூங்காக்களில், மிக அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதையும் யாரும் கேள்வி கேட்பதில்லை. இந்த முறைகேடுகள் அனைத்துக்கும், இதுபோன்ற பொழுதுபோக்குப் பூங்காக்களைக் கட்டுப்படுத்த பிரத்யேக சட்டங்களோ, அரசின் விதிமுறைகளோ இல்லாமல் இருப்பதே முக்கியக் காரணம். மேலும், இவர்கள் மீது நேரடியாக நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கும் அதிகாரமில்லை என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
வருவாய்த் துறைக்கு மட்டும் அதிகாரம்:  இதுகுறித்து தமிழக காவல்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் கூறியது:
தனியார் பொழுதுபோக்குப் பூங்காக்களுக்கு அனுமதி வழங்குவது, அதைக் கண்காணிப்பது உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களும் வருவாய்த் துறைக்கு மட்டுமே உள்ளது. பிற துறைகளுக்கு எந்தப் பொறுப்பும் வழங்கப்படவில்லை. ஆனால் வருவாய்த் துறையில் பணிச்சுமை காரணமாக, இத்தகைய பூங்காக்கள் மீது கவனம் செலுத்துவது கிடையாது. ஏதேனும் அசம்பாவிதச் சம்பவங்கள் நடைபெற்றால் மட்டுமே வருவாய்த் துறையினர் இந்த பூங்காக்களுக்குச் செல்கின்றனர்.
இதேபோல பூங்காக்களை கட்டுப்படுத்துவதற்கு என தனியாகச் சட்டம் எதுவும் கிடையாது. இதன் காரணமாக ஏதேனும் விபத்து ஏற்பட்டால் கூட சாதாரண சட்டங்களின் கீழ் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 
எனவே, இவற்றைக் கட்டுப்படுத்த வளர்ந்த நாடுகளில் உள்ளது போல தனிச் சட்டம் கொண்டு வரவேண்டும் என்பதோடு,  பூங்காக்களை கண்காணிக்க பொதுப்பணித் துறை, உள்ளாட்சித் துறை, வருவாய்த் துறை, காவல்துறை, தீயணைப்புத் துறை ஆகியவை அடங்கிய கூட்டு நடவடிக்கைக் குழுவை உருவாக்க வேண்டும். அங்குள்ள ராட்டினங்கள், விளையாட்டுக் கருவிகள் ஆகியவற்றை பயன்படுத்த இத் துறைகளில் அனுமதியை பெறுவது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றார் அவர்.

அதிக கட்டணம் வசூல்

தனியார் பொழுதுபோக்கு பூங்காக்களில் எவ்வித கட்டுப்பாடும் இன்றி அதிகளவில் கட்டணம் வசூலிக்கப்படுவது பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் இப்போது 130 பெரிய தனியார் பொழுதுபோக்குப் பூங்காக்கள், 45 குடும்பப் பூங்காக்கள் உள்ளன. இதைத் தவிர்த்து வணிக மையங்கள், திரையரங்கு வளாகங்கள் உள்ளிட்டவற்றில் தற்போது குழந்தைகளுக்கான பூங்காக்கள் திறக்கப்படுகின்றன.
ஆனால் இவை எவ்வித கட்டண வரைமுறையும் இல்லாமல் உள்ளன. மேலும், அங்கு விற்கப்படும் நொறுக்கு தீனிகள், குடிநீர் பாட்டில்கள், குளிர்பானங்கள் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையைக் காட்டிலும் கூடுதல் விலைக்கு விற்கப்படுகின்றன. இதையும் அரசு ஒழுங்குப்படுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com