குடிமராமத்துத் திட்டம்:  ரூ.499.68 கோடி ஒதுக்கீடு:  தமிழக அரசு உத்தரவு

குடிமராமத்துத் திட்டப் பணிகளுக்காக நடப்பு நிதியாண்டில் ரூ.499.68 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர்  பிறப்பித்துள்ளார்.
குடிமராமத்துத் திட்டம்:  ரூ.499.68 கோடி ஒதுக்கீடு:  தமிழக அரசு உத்தரவு

குடிமராமத்துத் திட்டப் பணிகளுக்காக நடப்பு நிதியாண்டில் ரூ.499.68 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர்  பிறப்பித்துள்ளார். அதன் விவரம்:
குளங்கள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளைத் தூர்வாரி நீரைச் சேமிக்க வசதியாக குடிமராமத்துத் திட்டம் கடந்த 2017-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தை சோதனை அடிப்படையில் செய்து பார்க்க முதல்கட்டமாக ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 2017-18-ஆம் நிதியாண்டில் 2 ஆயிரத்து 65 பணிகளுக்கு ரூ.331.68 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அவற்றில் எடுத்துக் கொள்ளப்பட்ட 1,511 பணிகளில் 979 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. அவற்றுக்காக செலவிடப்பட்ட தொகையின் மதிப்பு ரூ.185.42 கோடியாகும்.
நிகழ் நிதியாண்டுக்கு நிதி: நிகழ் நிதியாண்டிலும் (2019-20) குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் புதிய பணிகளை அடையாளம் கண்டு பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர்கள் அரசுக்குப் பரிந்துரை அனுப்பியுள்ளனர். அதன்படி, 29 மாவட்டங்களில் ஆயிரத்து 829 குடிமராமத்துப் பணிகளுக்காக ரூ.499.68 கோடி நிதி ஒதுக்கவும் கேட்டுக் கொண்டனர். இந்தப் பரிந்துரைகளை தீவிரமாக ஆய்வு செய்த தமிழக அரசு, 1,829 பணிகளுக்குத் தேவையான ரூ.499.68 கோடிக்கான நிர்வாக ஒப்புதலை அளித்துள்ளது.
எந்தெந்த பகுதிகள்: தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளதன் அடிப்படையில், சென்னை மண்டலத்தில் ரூ.93 கோடியில் 277 பணிகளும், திருச்சி மண்டலத்தில் ரூ.109 கோடியே 88 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் 543 பணிகளும், மதுரை மண்டலத்தில் ரூ.230 கோடியில் 681 பணிகளும், கோவை மண்டலத்தில் ரூ.66 கோடியே 80 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் 328 பணிகளும் எடுத்துக் கொள்ளப்படும் என்று தனது உத்தரவில் எஸ்.கே.பிரபாகர் தெரிவித்துள்ளார்.
சென்னை, நீலகிரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களைத் தவிர 29 மாவட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் நிர்வாக ரீதியாக அமைக்கப்பட்ட  பிறகு அந்த மாவட்டத்துக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com