கமலுக்கு ஆதரவாகப் பேச்சு: திருமாவளவன் மீது போலீஸ் வழக்குப் பதிவு 

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலுக்கு ஆதரவாகப் பேசிய விவகாரத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 கமலுக்கு ஆதரவாகப் பேச்சு: திருமாவளவன் மீது போலீஸ் வழக்குப் பதிவு 

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலுக்கு ஆதரவாகப் பேசிய விவகாரத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் கோட்சே” என்று பேசியது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கமல் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. அவர் முன்ஜாமீன் பெற்றுள்ளார்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலுக்கு ஆதரவாகப் பேசிய விவகாரத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 18-ந்தேதி சென்னை அசோக்நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில், இலங்கை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடை பெற்றது. அப்போது பேசிய  திருமாவளவன் கமலுக்கு ஆதரவாக சில கருத்துக்களை தெரிவித்தார்.

இது தொடர்பாக இந்து மக்கள் முன்னணி என்ற அமைப்பின் நிறுவனர் நாராயணன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார்.  அந்தப் புகாரில் மதுரை ஐகோர்ட்டில் கமல் முன்ஜாமீன் கோரிய போது, இது தொடர்பாக தலைவர்கள் பேசக்கூடாது என்று நீதிமன்றம்  உத்தரவிட்டிருந்தது. அதனை மீறி தொடர்ந்து இந்து மதத்தை மட்டும் விமர்சிக்கும் வகையில் பேசிய  திருமாவளவன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

இது பற்றி விசாரணை நடத்துமாறு பிறப்பிப்பட்ட உத்தரவின் கீழ் அசோக்நகர் போலீசார் திருமாவளவன் மீது கலகம் ஏற்படுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படும்  பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்திய தண்டனை சட்டப் பிரிவுகள் 153 மற்றும் 505 ஆகிய 2 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com