பி.இ. படிப்பு: விண்ணப்பித்தவர்களுக்கான  தரவரிசைப் பட்டியல் 20-இல் வெளியீடு

பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 20-ஆம் தேதி வெளியிடப்படும் என மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்
பி.இ. படிப்பு: விண்ணப்பித்தவர்களுக்கான  தரவரிசைப் பட்டியல் 20-இல் வெளியீடு

பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 20-ஆம் தேதி வெளியிடப்படும் என மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்  தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

 தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகம் சார்பில் நடத்தப்படும் 2019-20 கல்வியாண்டுக்கான பொறியியல் ஆன்லைன் கலந்தாய்வுக்கு 1.33 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான  அசல் சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 7-இல் தொடங்கி 13-ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. இதில் 1 லட்சத்து 4 ஆயிரம் பேர்  மட்டுமே பங்கேற்றனர். 29 ஆயிரம் பேர் வரை பங்கேற்கவில்லை.

இந்த சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில்  திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

முன்னர் அறிவிக்கப்பட்ட அட்டவணைப்படி ஜூன் 6-ஆம் தேதி தொடங்கப்பட இருந்த சான்றிதழ் சரிபார்ப்பு ஒரு நாள் தள்ளி ஜூன் 7-ஆம் தேதி தொடங்கப்பட்டதோடு,  கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் கோரிக்கையை ஏற்று சான்றிதழ் சரிபார்ப்புக்கான கால அவகாசம் ஒரு நாள் கூடுதலாக ஜூன் 13-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. மேலும், 46 கலந்தாய்வு உதவி மையங்களில் இருந்து அனைத்து சரிபார்ப்பு சான்று விவரங்களும் சென்னை அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்டு சரிபார்ப்புப் பணி மேற்கொள்ள வேண்டியுள்ளதால் திங்கள்கிழமை நடைபெறுவதாக இருந்த தரவரிசைப் பட்டியல் வெளியீடு, ஜூன் 20-ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இந்த தரவரிசைப் பட்டியல் மாணவர்களின் பார்வைக்கு 4 நாள்கள் வைக்கப்படும். இதை மாணவர்கள் பார்வையிட்டு குறைபாடுகள் அல்லது புகார்கள் இருந்தால் 044 - 22351014, 22351015 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. 

பொதுப் பிரிவு கலந்தாய்வு தேதியில் மாற்றமிருக்காது: தரவரிசைப் பட்டியல் வெளியீடு தள்ளிப்போவதால், சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு தேதியும் மாற்றப்பட உள்ளது.

இதுகுறித்து தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் விவேகானந்தன் கூறியது:

தரவரிசைப் பட்டியல் வெளியீடு ஜூன் 20-ஆம் தேதிக்கு தள்ளிப் போவதால், அன்றைய தினம் தொடங்கப்பட இருந்த சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு தேதியிலும் மாற்றம் இருக்கும். இருந்தபோதும், பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு தேதியில் மாற்றம் இருக்காது. ஏற்கெனவே அறிவித்தபடி ஜூலை 3-ஆம் தேதி தொடங்கி 28-ஆம் தேதி வரை பொதுப் பிரிவினருக்கான ஆன்-லைன் கலந்தாய்வு நடைபெறும்  என்றார். 

சிறப்புப் பிரிவு கலந்தாய்வு ஜூன் 24-இல் தொடக்கம்?: வரும் 20-ஆம் தேதி வெளியிடப்படும் தரவரிசைப் பட்டியல் மாணவர்களின் பார்வைக்காக 4 நாள்கள் வைக்கப்பட உள்ளது. 

பட்டியல் வெளியிட்ட நாளிலிருந்து 4 நாள்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்பதால் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூன் 24-ஆம் தேதியே தொடங்க வாய்ப்பு உள்ளது.

ஜூன் 24-இல் மாற்றுத்திறனாளிகளுக்கும்,  25-இல் முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கும்,  26-இல் விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கும் சென்னையில் கலந்தாய்வு நடத்தப்பட வாய்ப்பு உள்ளது. 

அதுபோல, பிளஸ்-2 தொழில் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூன் 28 முதல் 30-ஆம் தேதி வரை நடத்த வாய்ப்புள்ளது எனவும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரக அலுவலர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com