சமூக ஊடகங்கள் மூலம் கஞ்சா விற்பனை: 5 ஆண்டுகளில் 10 டன் பறிமுதல்: 1,712 வழக்குகள், 2,350 பேர் கைது

  தமிழகத்தில் சமூக ஊடகங்கள் மூலம் கஞ்சா விற்பனை வேகமாக அதிகரித்து வருவது காவல் துறையினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக ஊடகங்கள் மூலம் கஞ்சா விற்பனை: 5 ஆண்டுகளில் 10 டன் பறிமுதல்: 1,712 வழக்குகள், 2,350 பேர் கைது


தமிழகத்தில் சமூக ஊடகங்கள் மூலம் கஞ்சா விற்பனை வேகமாக அதிகரித்து வருவது காவல் துறையினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் பெருநகர காவல்துறை, மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு, மாநில போதைப் பொருள் தடுப்புப் பிரிவு ஆகியவற்றின் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 10 ஆயிரம் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 1,712 வழக்குகள் பதியப்பட்டு, 2,350 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ச்சியாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த 124 பேர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கஞ்சா உற்பத்தி செய்யும் கேந்திரமாக தேனி மாவட்டம் கம்பம் மலைப் பகுதி இருந்தது. ஆனால் மாநில காவல்துறை எடுத்த கடுமையான நடவடிக்கையின் காரணமாக, அங்கு கஞ்சா உற்பத்தி முற்றிலுமாக இல்லாமல் போய்விட்டது.

இதன் பின்னர், ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு கஞ்சா கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. ஆந்திர மாநிலத்தில் கிழக்கு கோதாவரி மாவட்டம், பாடகிரி மலை உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கஞ்சா விளைவிக்கப்பட்டு, தமிழகத்துக்கு சாலை மார்க்கமாகவும், ரயில் மூலமாகவும் கடத்தப்படுகிறது.

ஆந்திரத்தில் ஒரு கிலோ கஞ்சா ஆயிரம் ரூபாய்க்கு வாங்கப்பட்டு, சென்னையில் உள்ள மொத்த வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரத்துக்கு விற்கின்றனர். மொத்த வியாபாரிகள் இங்குள்ள சில்லறை வியாபாரிகளுக்கு ஒரு கிலோ கஞ்சாவை ரூ.20 ஆயிரம் வரை விற்கின்றனர். இவர்களே, சென்னை முழுவதும் கஞ்சாவை சிறு பொட்டலங்களாக விற்கின்றனர். ஒரு காலத்தில் குறிப்பிட்ட தரப்பினர் மட்டும் பயன்படுத்தி வந்த கஞ்சா, இன்று கல்லூரி மாணவர்கள், மென்பொருள் பொறியாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் கிடைக்கும் வகையில் அனைத்து இடங்களில் எளிதாக விற்கப்படுகிறது.

இதேபோல, நட்சத்திர ஹோட்டல்களில் நடைபெறும் விருந்து நிகழ்ச்சிகள், இரவு கேளிக்கை நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. கஞ்சாவை வியாபாரிகள் மூலமாக நேரடியாக மட்டுமன்றி சமூக ஊடகங்கள், விரைவு அஞ்சல் சேவை, கொரியர் சேவை ஆகியவற்றின் மூலமாகவும் விற்பனை செய்கின்றனர். இவ்வாறு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கடந்த ஒரு ஆண்டில் 30க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டு 40-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருப்பதாக, மாநில போதைப் பொருள் பிரிவு கூறுகிறது.


மாவோயிஸ்ட் ஆதரவு

இதுகுறித்து மாநில போதைப் பொருள் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த உயர் அதிகாரி கூறியது:

ஆந்திரம், ஒடிஸா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு கஞ்சா கடத்தப்படுகிறது. சென்னைக்கு கடத்தப்படும் கஞ்சாவில் 90 சதவீதம், ஆந்திரத்தில் இருந்து கொண்டு வரப்படுவதாகும். 

ஓராண்டில் மொத்தம் பறிமுதல் செய்யப்படும் போதைப் பொருள்களில் 90 சதவீதம் கஞ்சாவாகவே பறிமுதல் செய்யப்படுகிறது. ஆந்திர மாநிலத்தில் மாவோயிஸ்ட் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளிலேயே கஞ்சா விளைவிக்கப்பட்டு, கடத்தப்படுகிறது. கஞ்சா வியாபாரத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும் அவர்கள் ஈடுபடுகின்றனர். இதன் மூலம் கிடைக்கும் நிதியை தங்களது இயக்க வளர்ச்சிக்கும், பிற தேவைகளுக்கும் அந்த இயக்கத்தினர் பயன்படுத்துவதாக அம் மாநில காவல்துறை தெரிவிக்கிறது. மாவோயிஸ்ட் இயக்கத்தின் ஆதரவோடு நடைபெறும் இந்த வியாபாரத்தை ஆந்திர காவல்துறையால் தடுக்க முடியாமல் உள்ளது.

சமூக ஊடகங்கள் மூலம் விற்பனை

தமிழகத்தில் கஞ்சாவுக்கு எதிரான நடவடிக்கை அண்மைக் காலமாக தீவிரமானதால், முகநூல் (ஃபேஸ்புக்), கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்), சுட்டுரை (ட்விட்டர்) ஆகியவற்றின் மூலம் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த வகையிலான விற்பனையில் கஞ்சா வியாபாரிகளிடம், பெரும்பாலும் கல்லூரி மாணவர்கள், சமூக ஊடகங்களை அதிகம் பயன்படுத்தும் இளைஞர்கள், இளம் பெண்கள் சிக்குகின்றனர். சமூக ஊடகங்களின் மூலம் தங்களது வாடிக்கையாளர்களைப் பிடிக்கும் கஞ்சா வியாபாரிகள், பின்னர் பொருளை விரைவு அஞ்சல் சேவை, கொரியர் ஆகியவற்றின் மூலம் அனுப்புகின்றனர். சில இடங்களில் வீடு தேடிச் சென்று கஞ்சாவை வழங்குகின்றனர். 

இப்படிப்பட்ட விற்பனையில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து கைது செய்வது மிகவும் கடினமான பணியாக உள்ளது. அதேபோல தமிழகம் வழியாக கேரளத்துக்கு கஞ்சா கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து அரபு நாடுகளுக்கு கடத்தப்படுகிறது. கஞ்சா உற்பத்தியையும், கடத்தலையும் தடுக்க காவல்துறையின் அனைத்துப் பிரிவுகளும் இணைந்து செயல்படுவதோடு மட்டுமன்றி, அரசின் சில துறைகளும் ஒத்துழைப்பு கிடைத்தால் மட்டுமே முற்றிலுமாக தடுக்க முடியும் என்றார் அவர்.

இப் பிரச்னையில் காவல்துறை, ரயில்வே, வனத்துறை, கடலோர காவல்படை, கடலோர பாதுகாப்பு குழுமம் ஆகியவை இணைந்து செயல்பட்டாமல் மட்டுமே கஞ்சாவின்  பிடியில் இருந்து மக்களை மீட்டெடுக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதன் பின்னராவது, கஞ்சாவுக்கு எதிரான நடவடிக்கையில் அரசு அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாகவும் உள்ளது.

காவல் துறை நடவடிக்கை மட்டும் போதாது

கஞ்சா உற்பத்தியையும், கடத்தலையும் தடுப்பதற்கு காவல்துறையின் நடவடிக்கை மட்டும் போதாது என்று மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு தென் மண்டல இயக்குநர் ஏ.புரூனோ கூறினார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியது: 

சாத்விகா, இண்டிகா, ருத்ரிகா என கஞ்சாவில் 3 வகைகள் உள்ளன. இவற்றில் சாத்விகா வகை கஞ்சா முதல் தரமாக கருதப்படுகிறது. இந்த வகை கஞ்சா, ஆந்திரத்தில் இருந்து தமிழகம் வழியாக ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்ட கடற்கரைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கிருந்து அதிநவீன படகுகளின் மூலம் இலங்கைக்கு கடத்தப்படுகிறது. இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக ஐரோப்பிய நாடுகளுக்கு கப்பலில் கஞ்சா கடத்தப்படுகிறது.
கஞ்சா இயற்கையிலேயே விளைவித்து கிடைக்கும் போதைப் பொருள் என்பதால் வளர்ந்த நாடுகளில், அதற்கு வரவேற்பு அதிகமாக உள்ளது. இங்கிருந்து கடத்தப்படும் கஞ்சா, ஐரோப்பிய நாடுகளுக்கு சேரும்போது அதன் விலை 400 சதவீதம் உயருகிறது. கஞ்சா உற்பத்தியையும், கடத்தலையும் தடுப்பதற்கு காவல்துறையின் நடவடிக்கை மட்டும் போதாது என்றார் ஏ.புரூனோ.

கடத்தலுக்காக மாற்றி கட்டமைக்கப்படும் படகுகள்

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கஞ்சாவை கடத்துவதற்காக கடத்தலில் ஈடுபடுகிறவர்கள் படகுகளில் பல்வேறு மாற்றங்களை செய்து காவல்துறையையும், கடலோர காவல் படையையும் ஏமாற்றுவதாக போலீஸார் கூறுகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம், தூத்துக்குடி மாவட்ட சில கடற்கரை பகுதிகளிலிருந்து இலங்கையின் கடல் பகுதிக்கும், கடற்கரைக்கும் செல்வதற்கு 40 நிமிடங்களே தேவைப்படுகிறது. இந்த பயண நேரத்தை அதிநவீன மோட்டார்கள் பொருத்திய படகுகள் மூலம் கடத்தல்காரர்கள் எளிதில் கடந்துவிடுவதாக தமிழக காவல்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஏனெனில் இதற்காக மீன்பிடி படகுகளை வாங்கி, மீன்பிடித் துறை விதித்துள்ள விதிமுறைகளை மீறி பல்வேறு மாற்றங்களை செய்கின்றனர். இதனால் போலீஸார் அவ்வபோது சோதனை செய்தாலும், கஞ்சா சிக்குவதில்லை. அந்தளவுக்கு படகில் மறைவிடங்களை உருவாக்குகின்றனர். மேலும், படகுக்கு நிர்ணயித்த வேகத்தைவிட அதிக வேகத்தில் செல்வதற்கும் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. இதனால் கடலில் ரோந்து பணியில் ஈடுபடும் இந்திய கடலோர காவல் படையினருக்கும், தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்தினரிடமும் இந்த வகை படகுகளை எளிதில் சிக்குவதில்லை என அவர்கள் கூறுகின்றனர்.

ஆதிக்கம் செலுத்தும் பெண் வியாபாரிகள்

சென்னையில் கஞ்சா விற்பனையில் அண்மைக் காலமாக பெண் வியாபாரிகளும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை குறிப்பிட்ட சிலரை மையமாக வைத்தே கஞ்சா விற்பனை இருந்தது. ஆனால் இப்போது பெண்களும் இத் தொழிலில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். சில இடங்களில் பெண்கள் தங்களது கணவர், சகோதரர் ஆகியோருடன் இத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கீழ்ப்பாக்கம், டி.பி.சத்திரம், வண்ணாரப்பேட்டை, புளியந்தோப்பு, வியாசர்பாடி ஆகியப் பகுதிகளில் சில பெண்கள் தனியாகவே கஞ்சா வியாபாரத்தில் கோலோச்சி வருகின்றனர்.

இவர்களை அவ்வபோது போலீஸார் கைது செய்தும் வருகின்றனர். இதில் கஞ்சா விற்பனையில் தொடர்ச்சியாக ஈடுபடும் பெண்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழும் சிறையில் அடைக்கப்படுகின்றனர். 

இவ்வாறு 7 முறைக்கு மேல் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறைக்குச் சென்ற பெண்களும் சென்னையில் உண்டு. அதேபோல, 3 தலைமுறைகளாக கஞ்சா விற்பனையில் ஈடுபடும் கஞ்சா வியாபாரி குடும்பத்தினரும் சென்னையில் இருப்பதாக காவல்துறையினர்  தெரிவிக்கின்றனர். இவர்கள் மீது போலீஸார் தொடர்ச்சியாக கடுமையான நடவடிக்கை எடுக்காததன் விளைவே, இத் தொழிலில் அவர்கள் ஆதிக்கம் செலுத்துவதற்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com