
சென்னை: தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டிருப்பதைப் போன்ற மாயையை ஏற்படுத்த வேண்டாம் என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை மெரினா கடற்கரையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை ஆய்வு செய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்தார் முதல்வர் பழனிசாமி.
அப்போது அவர் கூறியதாவது, பருவ மழை பொய்த்ததாலும், நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததாலும், தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இப்போதைய சூழ்நிலையில் கிருஷ்ணா நீரையும் பெற முடியாத சூழ்நிலை உள்ளது.
எனவே, நிலத்தடி நீரைக் கொண்டுதான் மக்களின் குடிநீர் தேவையை அரசு பூர்த்தி செய்து வருகிறது. மக்களுக்குத் தேவையான அளவுக்குக் குடிநீர் கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்ள பொதுமக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும்.
அக்டோபர், நவம்பர் வரை தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க வேண்டிய நிலை உள்ளது என்று பழனிசாமி கூறினார்.
மேலும், தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டிருப்பதைப் போன்ற மாயையை ஏற்படுத்த வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.