தமிழ் மொழி ஆய்வறிஞர் சி.சீனிவாசன் காலமானார்

பெங்களூரைச் சேர்ந்த தமிழ் மொழி ஆய்வறிஞர் சி.சீனிவாசன் உடல் நலக் குறைவால் காலமானார்.
தமிழ் மொழி ஆய்வறிஞர் சி.சீனிவாசன் காலமானார்


பெங்களூரைச் சேர்ந்த தமிழ் மொழி ஆய்வறிஞர் சி.சீனிவாசன் உடல் நலக் குறைவால் காலமானார்.
பெங்களூரு, லிங்கராஜ்புரத்தில் வாழ்ந்து வந்த மொழி ஆய்வறிஞர் சி.சீனிவாசன் (83), கடந்த சில வாரங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை காலை 11.50 மணிக்கு காலமானார். இவருக்கு மனைவி ஆர்.டி.தேவி, மகன்கள் சுரேஷ்குமார், நந்தகுமார் ஆகியோர் உள்ளனர். அவரது இல்லத்தில் திங்கள்கிழமை பொதுமக்கள் பார்வைக்காக உடல் வைக்கப்பட்டிருந்தது.
பெங்களூரு தமிழ்ச் சங்க முன்னாள் தலைவர் தி.கோ.தாமோதரன், முன்னாள் துணைச் செயலர் அமுதபாண்டியன், உலகத் தமிழ்க்கழக தண்டுக்கிளை தலைவர் கி.சி.தென்னவன், துணைத் தலைவர் தனம் வேளாங்கன்னி, செயலர் மதலைமணி, தமிழர் முழக்கம் இதழாசிரியர் வேத.குமார், புலவர்கள் சரவணன், கார்த்தியாயினி, கவிஞர் மலர்மன்னன், பேராசிரியர்கள் பொ.க.சுப்பிரமணியன், சி.கோவிந்தராசன், அன்புமணி உள்ளிட்ட ஏராளமானோர் சி.சீனிவாசனின் உடலுக்கு மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தினர். பெங்களூரு, பையப்பனஹள்ளியில் உள்ள கல்பள்ளி மின் மயானத்தில் அவரது உடல் திங்கள்கிழமை தகனம் செய்யப்பட்டது.
ரயில்வே சீனிவாசன் என்று பரவலாக அழைக்கப்படும் இவர், இந்திய ரயில்வே ஆட்சிப்பணி (ஐஆர்ஏஎஸ்) படித்துவிட்டு, பெங்களூரு, எலஹங்காவில் உள்ள மத்திய அரசின் வீல் அண்ட் ஆக்சில் நிறுவனத்தில் உயரதிகாரியாக பணியாற்றியவர்.
பெங்களூரிலேயே பிறந்து வளர்ந்திருந்தாலும், தமிழ் மொழி மீது ஆழ்ந்த பற்று கொண்ட காரணத்தால், தமிழ் மொழி, கர்நாடகத் தமிழர்களின் சிறப்புகள் குறித்து 100-க்கும் மேற்பட்ட ஆய்வறிக்கைகளை இயற்றியுள்ளார்.  பெங்களூரு, அல்சூர் ஏரி அருகே திருவள்ளுவருக்கு சிலை வைக்க எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், கெத்தலஹள்ளியில் சொந்தமாக நிலம் வாங்கி அங்கு 1991-ஆம் ஆண்டு ஜன. 15-ஆம் தேதி திருவள்ளுவர் சிலையை தமிழறிஞர் கி.ஆ.பெ.விசுவநாதம் தலைமையில் திறந்தவர் சீனிவாசன்.  பல்வேறு தமிழ் அமைப்புகள் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com