அரசுப் பேருந்துகளின் இருக்கைகளில் முதியோ​​ரு‌க்​கான‌ ஒது‌க்​கீடு முறைப்​ப​டு‌த்​த‌ப்​ப​டுமா?

அரசுப் பேருந்துகளின் இருக்கைகளில் முதியோ​​ரு‌க்​கான‌ ஒது‌க்​கீடு முறைப்​ப​டு‌த்​த‌ப்​ப​டுமா?

அரசுப் பேருந்துகளில் முதியோருக்காக ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் அவர்கள் அமர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அரசுப் பேருந்துகளில் முதியோருக்காக ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் அவர்கள் அமர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால்,  நின்றுகொண்டும், படிக்கட்டுகளில் ஆபத்தான நிலையில் பயணிக்கும் நிலையையும் காணமுடிகிறது.  

தமிழகம் முழுவதும் எட்டு கோட்டங்களுக்கு உள்பட்டு 23 ஆயிரம் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவை தவிர, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகளும் உள்ளன. நாள் ஒன்றுக்கு சுமார் 4 கோடி பேர் வரை பேருந்துகளில் பயணிக்கின்றனர். 

பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள், முதியோர், கர்ப்பிணிகள் போன்றோருக்கு இருக்கை இட ஒதுக்கீடு வழங்கி போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவுப் பிறப்பித்துள்ளது. அதன்படி, முன்படிக்கட்டை ஒட்டிய பகுதிகளில் நான்கு முதல் ஆறு இருக்கைகள் வரை ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த இருக்கைப் பகுதியில் அதற்கான தகவலும் ஒட்டப்பட்டுள்ளன. 

ஆனால், இந்த ஒதுக்கீட்டு முறை எந்தப் பேருந்திலும் பின்பற்றப்படுவதில்லை. இளைஞர்கள் அமர்ந்து கொண்டால், அவர்களை அந்த இடத்தில் இருந்து எழுப்புவது மிகவும் கடினம். இதனால் நடத்துநருக்கும், அவர்களுக்கும் இடையே மோதல் தான் ஏற்படும். இந்தப் பிரச்னையால் நடத்துநர்களும் இதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. மாற்றுத்திறனாளிகளும், பெண்களும், முதியோரும் கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்கும் நிலை காணப்படுகிறது. அண்மையில், சேலத்தில் இருந்து நாமக்கல் வந்த அரசுப் பேருந்தில் முதியோருக்கான இருக்கையை இளைஞர்கள் பிடித்துக் கொள்ள, நிற்க முடியாமல் அவதிப்பட்ட முதியர், பேருந்தின் முன்பகுதி படிக்கட்டில் அமர்ந்தபடி பயணம் செய்தார். அந்த பேருந்திற்கு மூடும் கதவு இருந்தபோதும், அதை திறந்தபடியே வைத்திருந்தனர்.

இந்த நிகழ்வினை நடத்துநர், ஓட்டுநர் பார்த்தபோதும், முதியவரை அவருக்குரிய ஒதுக்கீட்டில் இருக்கையில் அமர வைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை. படிக்கட்டு கதவை மூடவும் இல்லை. படிக்கட்டு கம்பியை பிடித்தவாறு அந்த முதியவர் ஒரு மணி நேரம் அச்சத்துடன் நாமக்கல்லுக்கு  வந்து சேர்ந்தார். அசம்பாவிதம் ஏதும் ஏற்பட்டால் யார் பொறுப்பு? என்ற கேள்வி தான் பேருந்தில் பயணித்த பலரிடமும் இருந்தது. முதியோருக்கு இருக்கை இட ஒதுக்கீடு இல்லையெனில், அது பற்றிய அறிவிப்பை பேருந்தில் வெளியிடாமல் இருக்கலாமே என்பது தான் பயணிகள் பலரின் ஆதங்கமாக இருந்தது. தமிழக அரசின் போக்குவரத்துத் துறை ஆணையை, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களும், நடத்துநர்களும் பின்பற்ற வேண்டிய அவசியத்தை,  உயர் அதிகாரிகள் கட்டாயமாக்கி உத்தரவு வெளியிட்டால், முதியோர்கள் படிக்கட்டில் அமர்ந்து பயணிக்கும் அபாய நிலை இருக்காது. தமிழகம் முழுவதும் இந்த நடைமுறை அமலுக்கு வரவேண்டும் என்பது தான் தன்னார்வலர்கள் பலரின் குரலாக உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com