உலகின் மிக உயரமான முருகன் திருவுருவச் சிலை:வாழப்பாடி அருகே அமைகிறது

சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த புத்திரகவுண்டன்பாளையத்தில் உலகிலேயே மிக உயரமான முருகன் திருவுருவச்சிலை அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு கும்பாபிஷேகம்
146 அடி உயரத்தில்  அமைக்கப்படும் முருகன் சிலையின் மாதிரி உருவம்.
146 அடி உயரத்தில் அமைக்கப்படும் முருகன் சிலையின் மாதிரி உருவம்.


சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த புத்திரகவுண்டன்பாளையத்தில் உலகிலேயே மிக உயரமான முருகன் திருவுருவச்சிலை அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்துவதற்கு கோயில் நிர்வாகிகள் ஏற்பாடு செய்து வருவதால், முருக பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மலேசிய தலைநகர் கோலாலம்பூர் அருகே பத்துமலை குகைக் கோயிலின் நுழைவு வாயிலில் உலகிலேயே மிக உயரமான முருகன் சுவாமியின் திருவுருவச் சிலை அமைக்கப்பட்டது. 140 அடி உயரத்தில் (42.7 மீட்டர்) மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ள இந்த முருகன் சுவாமி சிலை சர்வதேச அளவில் ஹிந்துக்களின் புனித திருத்தலங்களில் ஒன்றாக மாறிவிட்டது. பல்வேறு நாடுகளில் இருந்து தினந்தோறும் ஏராளமான பக்தர்கள்  மலேசிய நாட்டின் பத்துமலை முருகனை தரிசிக்கச் செல்கின்றனர். 
இந்நிலையில், முருகன் சிலையை மலேசியாவில் வடிவமைத்த தமிழகத்தைச் சேர்ந்த திருவாரூர் தியாகராஜன் ஸ்தபதியாரின் குழுவினர், சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகிலுள்ள புத்திரகவுண்டன்பாளையத்தில், அச் சிலையை விட 6 அடி உயரமான முருகன் சிலையை வடிவமைத்து வருகின்றனர். இதனால், சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையிலுள்ள இந்தக் கிராமம் பிரபலமாகி வருகிறது.
சேலம் மாவட்டம், ஆத்தூரைச் சேர்ந்த தொழிலதிபர் முத்து நடராஜன் குடும்பத்தினர் சார்பில் புத்திரகவுண்டன்பாளையத்தில் தரைத்தளத்தில் இருந்து 146 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தச் சிலையே, இனி உலகிலேயே மிக உயரமான முருகன் சுவாமி சிலையாக விளங்கவுள்ளது.
 தேசிய நெடுஞ்சாலை அருகே மலைக்குன்று அடிவாரத்தில் அமைக்கப்பட்டு வரும் இந்த பிரம்மாண்டமான முருகன் திருவுருவச்சிலை  கட்டமைப்பு பணி முடிவடைந்த நிலையில் முக அமைப்பு, மேல்பூச்சு மற்றும் ஆடை ஆபரணங்கள் அமைக்கும் நுண்ணிய வேலைப்பாடுகளில் ஸ்தபதிகள் ஈடுபட்டுள்ளனர். இறுதிக்கட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
 2020-இல் பங்குனி உத்திரத்துக்கு முன் முருகன் திருவுருவச் சிலை வண்ணம் தீட்டும் பணிகளையும் முழுமையாக நிறைவு செய்து, கும்பாபிஷேகம் நடத்துவதற்கு கோயில் நிர்வாகிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
இதுகுறித்து முருகன் சிலையை அமைக்கும் திருப்பணியை மேற்கொண்டு வரும் ஆத்தூர் தொழிலதிபர் ஸ்ரீதர் நமது நிருபரிடம் கூறியது: முருகப் பெருமானை குலதெய்வமாக கருதி வணங்கும் எனது தந்தை முத்து நடராஜன் மற்றும்  குடும்பத்தினர் விருப்பத்துக்கேற்ப,  மலேசியா பத்துமலை முருகன் சுவாமி சிலையைப் போன்று புத்திரகவுண்டன்பாளையத்திலுள்ள எங்களது நிலத்தில் பிரம்மாண்டமான முருகன் சிலை வடிவமைக்கும் பணியை இரு ஆண்டுகளுக்கு முன் தொடங்கினோம்.
மலேசியாவில் மிக நேர்த்தியாக முருகன் சுவாமி சிலையை வடிவமைத்த திருவாரூர் தியாகராஜன் ஸ்தபதியின் குழுவினரைக் கொண்டு, புத்திரகவுண்டன்பாளையத்திலும் முருகன் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. மலேசிய முருகன் சிலையைவிட 6 அடி கூடுதலாக 146 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளதால்,  உலகில் மிக உயரமான முருகன் சுவாமி சிலை என்ற பெருமையை இச் சிலை பெறும்.  வரும் ஆண்டு பங்குனி உத்திரத்துக்கு முன், சிலைக்கு கும்பாபிஷேகம் நடத்திட திட்டமிட்டுள்ளோம். 
தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களில் மற்றும் பல்வேறு நாடுகளிலுள்ள முருகப் பக்தர்கள் பங்கேற்கும் வகையில், கும்பாபிஷேக விழா பிரம்மாண்டமாக அமையும். மண்டபம் அமைத்து தினந்தோறும் ஏழை எளியோருக்கு அன்னதானம் வழங்கவும் திட்டமிட்டுள்ளோம் என்றார்.

வாழப்பாடியை அடுத்த புத்திரகவுண்டன்பாளையத்தில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே மிக உயரமான முருகன் சுவாமி திருவுருவச் சிலை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com