நீர் மேலாண்மை: தமிழக அரசுக்கு  உயர்நீதிமன்றம் கண்டனம்

தமிழகத்தில் நீர் மேலாண்மை தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. 
நீர் மேலாண்மை: தமிழக அரசுக்கு  உயர்நீதிமன்றம் கண்டனம்


தமிழகத்தில் நீர் மேலாண்மை தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. 
சென்னை உயர்நீதிமன்றத்தில், வேலூர் மாவட்டம், வாணியம்பாடி இயற்கை மற்றும் நீர்வளப் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்த மனுவில், பாலாற்றில் இருந்து உதயேந்திரம் ஏரிக்கு வரும் தண்ணீர் வரத்து கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மேலும் இந்தக் கால்வாயின் வழியாக தண்ணீர் எளிதாகச் செல்ல வழிவகை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், சென்னையில் நிலவும் கடுமையான தண்ணீர் பஞ்சத்தைப் போக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணியம்பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, சென்னை பெருநகர குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தின் தலைமைப் பொறியாளர் எஸ்.ஆறுமுகம் சார்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, ஏரிகளில் நீர் இல்லை என இப்போது கூறும் அதிகாரிகளுக்கு நாள்தோறும் நீரின் அளவு குறைந்து வருவது தெரியாதா, இந்த விவகாரத்தில் அரசு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை, தமிழக அரசிடம் நீர் மேலாண்மை தொடர்பாக எந்தத் திட்டங்களும் இல்லை, நீர்நிலைகளைத் தூர்வார வேண்டும் என உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டே உத்தரவிட்டது, அதுதொடர்பான விவரங்கள் இந்த அறிக்கையில் இல்லை.
தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னைக்குத் தீர்வு காண மாநில அரசு எடுத்த நடவடிக்கை என்ன, ஏரி-குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வார எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன, மழைநீர் வீணாகக் கடலில் கலப்பதை தடுக்க மேற்கொண்ட நடவடிக்கை என்ன, சென்னைக்கு குடிநீர் வழங்கும் செங்குன்றம் மற்றும் சோழவரம் ஏரிகள் வறண்டு வந்த நிலையில் அதற்காக இதுவரை மாற்று ஏற்பாடுகளை செய்யாதது ஏன், முன்னெச்சரிக்கையாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பல்வேறு கேள்விகளை எழுப்பினர். 
 அப்போது அரசுத் தரப்பில் இதுதொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், இறுதி நேரத்தில் இவ்வாறு விழிப்புணர்வு செய்வதால் என்ன பயன் என கேள்வி எழுப்பினர்.
அப்போது அரசுத் தரப்பில், பருவமழை பொய்த்ததால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் நாளொன்றுக்கு 270 மில்லியன் லிட்டர் தண்ணீர் விநியோகிக்கும் வகையில் 270 சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கடல்நீரை குடிநீராக்கும் மூன்றாவது அலகு செயல்படத் தொடங்கி விட்டால் சென்னை நகர மக்களின் குடிநீர் தேவைப் பூர்த்தி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றம், தூர்வார மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் அறிக்கை அளிக்கும்படி சுற்றறிக்கை அனுப்ப பொதுப்பணித் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 


சென்னைக்கு 900 லாரிகளில் தண்ணீர்
சென்னை பெருநகர குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில்மனுவில் கூறியிருப்பதாவது: 
கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் பருவமழை பொய்த்ததால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் அனைத்தும் வறண்டு விட்டன. சென்னை மாநகருக்கு நாளொன்றுக்கு 830 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவை. கடந்த ஜூன் 1-ஆம் தேதி முதல் இந்த அளவு 525 மில்லியன் லிட்டராக குறைக்கப்பட்டுள்ளது. மீஞ்சூர், நெம்மேலியில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்கள் மூலம் தற்போது நாளொன்றுக்கு 180 மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது. 3,231 மில்லியன் கன அடி நீர் கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் தற்போது 26 மில்லியன் கனஅடி நீர் மட்டுமே இருப்பு உள்ளது. இதேபோன்று சோழவரம், செங்குன்றம் ஏரிகளில் சுத்தமாக தண்ணீர் இல்லை.
3,645 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது ஒரு கனஅடி தண்ணீர் மட்டுமே உள்ளது. 
1,465 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட வீராணம் ஏரியில் தற்போது 569 மில்லியன் கனஅடி நீர் மட்டுமே இருப்பு உள்ளது. இதிலிருந்து நாளொன்றுக்கு 180 மில்லியன் லிட்டர் நீர் சென்னைக்கு வழங்கப்படுகிறது. 
சென்னையில் 900 தண்ணீர் லாரிகளை வாடகைக்கு எடுத்து நாளொன்றுக்கு 9,400 நடைகள் மூலம் பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. குறுகிய சாலைகளில் செல்ல வசதியாக 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட சிறிய லாரிகள் மூலமாகவும் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
புதிதாக கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களை அமைப்பது தொடர்பான ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க புதிய ஆழ்துளை கிணறுகள் அமைப்பது உள்ளிட்ட பணிகளுக்காக ரூ.212 கோடி ஒதுக்கப்பட்டு, பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com