மாநகராட்சியானது ஆவடி: அவசரச் சட்டம் பிறப்பிப்பு

திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்பட்ட ஆவடி சிறப்பு நிலை நகராட்சியானது, மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது. அவசரச் சட்டம் மூலம் இதற்கான ஒப்புதலை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வழங்கியுள்ளார். 
மாநகராட்சியானது ஆவடி: அவசரச் சட்டம் பிறப்பிப்பு


திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்பட்ட ஆவடி சிறப்பு நிலை நகராட்சியானது, மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது. அவசரச் சட்டம் மூலம் இதற்கான ஒப்புதலை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வழங்கியுள்ளார். 
சென்னையை அடுத்த ஆவடி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பின்படி, ஆவடி சிறப்பு நிலை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 
ஆவடி சிறப்பு நிலை நகராட்சி அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக உரிய பரிந்துரைகள் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இவற்றை ஆய்வு செய்த தமிழக அரசு இதற்கான அவசர சட்ட மசோதாவை வடிவமைத்தது. 
இந்த மசோதா தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனை ஆய்வு செய்த ஆளுநர், தனது ஒப்புதலை திங்கள்கிழமை வழங்கினார். இதைத் தொடர்ந்து, அவசர சட்ட நகலை தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.
அதன் விவரம்:  கோயம்புத்தூர் மாநகராட்சி சட்டம் 1981-ஆம் ஆண்டு 25-வது பிரிவின் அடிப்படையிலும், அதில் குறிப்பிடப்பட்ட ஷரத்துகளின் வழியாகவும் ஆவடி பெருநகராட்சியானது, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுகிறது. ஒரு மேயர், கவுன்சிலர்கள், நிலைக் குழு, வார்டுகள் குழு, ஆணையாளர் என்ற அடிப்படையில் மாநகராட்சி அமைக்கப்படும். மற்ற உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது போன்றே, ஆவடி மாநகராட்சியிலும் பெண்களுக்கு 50 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.
ஆவடி மாநகராட்சியை நிர்வகிக்க புதிதாக தனி அதிகாரி நியமனம் செய்யப்படுவார். அதுவரை, ஏற்கெனவே உள்ள நகராட்சி ஆணையர் தனி அதிகாரியாகச் செயல்படுவார். உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் அறிவிக்கப்படும் வரை, மாநகராட்சிப் பணிகளை தனி அதிகாரி தொடர்ந்து மேற்கொள்வார்.
வார்டுகள்-மக்கள் தொகை: ஆவடி சிறப்பு நிலை நகராட்சியில் மொத்தம் 48 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகள் அனைத்தும் அப்படியே மாநகராட்சி வார்டுகளாக மாற்றப்படும். குறிப்பாக, ஆவடி, பட்டாபிராம், திருமுல்லைவாயல், கோவில்பதாகை, மிட்டனமல்லி உள்ளிட்டவை  இந்த மாநகராட்சிப் பகுதிக்குள் வரும். ஆவடி நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் 5.2 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். 
பாரம்பரியமிக்க, பழைமையான சென்னை மாநகராட்சிக்கு அருகிலேயே புதிதாக ஆவடி மாநகராட்சி உருவாக்கப்பட்டுள்ளது. 
ஏன் மாநகராட்சி ஆனது?:  ஆவடி சிறப்பு நிலை நகராட்சிப் பகுதியில் மக்கள்தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால்,  அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியது அவசியமாகிறது. 
மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், அவர்களுக்கு போதிய வசதிகளை அளிக்கவும் ஆவடியை மாநகராட்சியாக தரம் உயர்த்துவது அவசியமாகிறது.
இதைக் கருத்தில் கொண்டு கோவை மாநகராட்சி சட்டம் 1981 உள்பிரிவு 25-ன் கீழ் ஆவடி நகராட்சியானது, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுவதாக தமிழக அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 14
சென்னை
கோயம்புத்தூர்
மதுரை
திருச்சி
சேலம்
நெல்லை
தூத்துக்குடி
திருப்பூர்
ஈரோடு
வேலூர்
தஞ்சாவூர்
திண்டுக்கல்
ஓசூர்
நாகர்கோவில்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com