அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.210 கோடியில் அதி நவீன புற்றுநோய் சிகிச்சை சாதனங்கள்: அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

அதி நவீன புற்றுநோய் கதிரியக்க சிகிச்சைக்கான உயர் தொழில்நுட்ப சாதனங்கள் ரூ.210 கோடி செலவில் 10 அரசு மருத்துவமனைகளில் நிறுவப்பட உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.


அதி நவீன புற்றுநோய் கதிரியக்க சிகிச்சைக்கான உயர் தொழில்நுட்ப சாதனங்கள் ரூ.210 கோடி செலவில் 10 அரசு மருத்துவமனைகளில் நிறுவப்பட உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
 இறுதிக்கட்டத்தில் உள்ள புற்றுநோயாளிகளுக்கான வலி நிவாரண மையம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரூ.15 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. அதனை அமைச்சர் விஜயபாஸ்கர் புதன்கிழமை திறந்து வைத்து செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
புற்றுநோய் சிகிச்சைக்கும், அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்கும் தமிழக அரசு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக,  ரூ.15 லட்சத்தில் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 8 படுக்கை வசதிகளுடன் வலி நிவாரணம் மற்றும் ஆதரவு மையம் புற்று நோயாளிகளுக்காக பிரத்யேகமாக தொடங்கப்பட்டுள்ளது. இறுதிக்கட்டத்தை எட்டிய புற்றுநோயாளிகள் வலியின்றி தங்களது வாழ்வைக் கழிக்க இந்த மையங்கள் உதவிகரமாக இருக்கும்.
இதன் தொடர்ச்சியாக, வலி நிவாரண சிகிச்சைகளுக்கான சமூக நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதாவது, ஒன்றியங்கள் தோறும் புற்றுநோயாளிகளின் வீடுகளுக்கே சென்று அவர்களுக்கு வலி நிவாரண சிகிச்சைகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 385 செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதே எண்ணிக்கையில் இயன்முறை மருத்துவர்களும் விரைவில் நியமிக்கப்படுவார்கள்.
இதைத் தவிர, புற்றுநோய் கதிரியக்க சிகிச்சையின்போது, உடல் உறுப்புகளை பாதிக்காத வகையில் மிகத் துல்லியமாக கட்டிகளை அகற்றும் லீனியர் ஆக்ஸிலரேட்டர் சாதனங்கள் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
ரூ.210 கோடி மதிப்பிலான அந்தச் சாதனங்கள் காஞ்சிபுரம் அரசு புற்றுநோய் மருத்துவமனை, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, ராயப்பேட்டை மருத்துவமனை, ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை,  மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, கோயம்புத்தூர், தஞ்சாவூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் என 10 இடங்களில் விரைவில் நிறுவப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளன.
தமிழகத்தில் உள்ள மருத்துவனைகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய சூழலில், சென்னை உள்பட எந்த மாவட்டத்திலும் மருத்துவமனைகளில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லை. ஆழ்துளை கிணறுகள் மூலமாகவும், வேறு நீராதாரங்கள் மூலமாகவும் தண்ணீர் பெறப்பட்டு வருகிறது என்றார் அவர்.
இந்த நிகழ்ச்சியில், சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ், தேசிய நல்வாழ்வு குழும திட்ட இயக்குநர் டாக்டர் தாரேஸ் அகமது, மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எட்வின் ஜோ, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் வசந்தாமணி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் மணி, நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் ஆனந்த் பிரதாப், கதிரியக்கத் துறை முதுநிலை மருத்துவர் டாக்டர் சரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com