உலக பல்கலைக்கழக தரவரிசையில் பத்து இடங்கள் முன்னேறியது மும்பை ஐஐடி: சென்னை ஐஐடி-க்கு பின்னடைவு

பிரபல கியூ.எஸ். உலக பல்கலைக்கழகத் தரவரிசைப்  பட்டியலில் 22 இந்திய கல்வி நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன. கடந்த ஆண்டைப் போல முதல் 200 இடங்களில் மூன்று இந்திய கல்வி நிறுவனங்கள் இடம்பிடித்து அசத்தியுள்ளன.
உலக பல்கலைக்கழக தரவரிசையில் பத்து இடங்கள் முன்னேறியது மும்பை ஐஐடி: சென்னை ஐஐடி-க்கு பின்னடைவு


பிரபல கியூ.எஸ். உலக பல்கலைக்கழகத் தரவரிசைப்  பட்டியலில் 22 இந்திய கல்வி நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன. கடந்த ஆண்டைப் போல முதல் 200 இடங்களில் மூன்று இந்திய கல்வி நிறுவனங்கள் இடம்பிடித்து அசத்தியுள்ளன.
தரவரிசைப் பட்டியலில் மும்பை ஐஐடி 10 இடங்கள் முன்னேறியுள்ள நிலையில், சென்னை ஐஐடி 7 இடங்கள் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
உலக அளவில் வெளியிடப்படும் உயர்கல்வி நிறுவன தரவரிசைப் பட்டியலில், கியூ.எஸ். தரவரிசைப் பட்டியல் பிரபலமானது. 
கல்வி நிறுவனங்களின் ஆராய்ச்சித் திட்டங்கள், புதிய கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சி ஊக்குவிப்பு, ஆராய்ச்சி கட்டுரை வெளியீடு, அறிவுசார் சொத்துரிமை என்பன உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இந்த தரவரிசைப் பட்டியல் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படுகிறது. 
அந்த வகையில், 2020-ஆம் ஆண்டுக்கான கியூ.எஸ். தரவரிசைப் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது. 
இதில் கடந்த ஆண்டு 162-ஆம் இடத்தில் இருந்த மும்பை ஐஐடி, இம்முறை 10 இடங்கள் முன்னேறி 152-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
தில்லி ஐஐடி 182-ஆவது ரேங்குடன் இந்திய கல்வி நிறுவனங்களில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. கடந்த முறை 172-ஆவது இடத்தில் இருந்த தில்லி ஐஐடி, இம்முறை 10 இடங்கள் பின்னடைவைச் சந்தித்துள்ளது. 
கடந்த முறை இரண்டாம் இடத்தில் இருந்த பெங்களூரு இந்திய அறிவியல் கழகம் (ஐஐஎஸ்சி), இந்த முறை 184-ஆவது ரேங்குடன் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது.
சென்னை ஐஐடி-க்குப் பின்னடைவு: அதுபோல, கடந்த முறை 264-ஆவது ரேங்கில் இருந்த சென்னை ஐஐடி, இம்முறை 271-ஆவது ரேங்குடன் இந்திய கல்வி நிறுவனங்களில் 4-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
காரக்பூர் ஐஐடி (281), கான்பூர் ஐஐடி (291), ரூர்கி ஐஐடி (383), தில்லி பல்கலைக்கழகம் (474), குவாஹட்டி ஐஐடி (491) ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
அதே இடத்தில் நீடிக்கும் அண்ணா பல்கலைக்கழகம்: சென்னை அண்ணா பல்கலைக்கழகம், கடந்த ஆண்டைப் போலவே 701 முதல் 800 இடங்களுக்கு இடைப்பட்ட ரேங்க்கைப் பெற்றுள்ளது. 
வேலூர் விஐடி, மும்பை பல்கலைக்கழகம், கொல்கத்தா பல்கலைக்கழகம் ஆகியவை 801 முதல் ஆயிரத்துக்கு இடைப்பட்ட ரேங்க்கைப் பெற்றுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com