ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் உள்நோயாளிகளுடன் இருப்பவர்களின் பயன்பாட்டுக்காக வழங்கப்பட்டிருக்கும் கட்டில்.
ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் உள்நோயாளிகளுடன் இருப்பவர்களின் பயன்பாட்டுக்காக வழங்கப்பட்டிருக்கும் கட்டில்.

உள்நோயாளிகளுடன் இருப்பவர்களுக்கும் படுக்கை வசதி: முதல் முறையாக அரசு மருத்துவமனையில் அறிமுகம்

உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருபவர்களுக்குத் துணையாக மருத்துவமனையில் தங்கியிருப்பவர்களுக்கும் படுக்கை வசதிகளை


உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருபவர்களுக்குத் துணையாக மருத்துவமனையில் தங்கியிருப்பவர்களுக்கும் படுக்கை வசதிகளை ஏற்படுத்தித் தர ஓமந்தூரார் அரசு மருத்துவனை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, ரூ.5 லட்சம் செலவில் 50 கட்டில்கள் முதல்கட்டமாக வாங்கப்பட்டுள்ளன. மேலும் 150 கட்டில்களை வாங்குவதற்கான நடவடிக்கைகள் விரைவில் முன்னெடுக்கப்பட உள்ளதாக மருத்துவமனை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக, அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கே சில நேரங்களில் படுக்கை இல்லாமல் தரையில் கிடத்தப்பட்டு சிகிச்சை அளிக்கக் கூடிய நிலை உள்ளது. இந்தச் சூழலில், அதற்கு நேர்மாறாக ஓமந்தூரார் மருத்துவமனையில் நோயாளிகள் உடன் இருப்பவர்களுக்கும் பிரத்யேக கட்டில்கள் வழங்கப்பட்டிருப்பது மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

அந்தக் கட்டில்களில் சில நவீன வசதிகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, அதை இரவு நேரங்களில் படுக்கையாகப் பயன்படுத்தி உறங்கலாம் என்றும், பகலில் அதனை மடக்கி நாற்காலியாக உபயோகப்படுத்தலாம் என்றும் மருத்துவமனை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

ஓமந்தூரார் மருத்துவமனைக்கு நாளொன்றுக்கு 800-க்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாக வருகின்றனர். அதேபோன்று 300-க்கும் அதிகமான உள்நோயாளிகளுக்கு அங்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. புற்றுநோய், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள், இதயநோய், ரத்த நாள பிரச்னைகள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளே பெரும்பாலும் அங்கு உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒவ்வொரு உள்நோயாளிக்கும் உடனிருந்து கவனிக்க, அவரைச் சார்ந்த ஒருவர் மட்டுமே மருத்துவமனையில் தங்க அனுமதிக்கப்படுகின்றனர். அவ்வாறு துணையாக வரும் நபர்களின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு இந்த புதிய வசதி செய்து தரப்பட்டிருப்பதாக மருத்துவமனையின் நிர்வாக அதிகாரி டாக்டர் ஆனந்தகுமார் தெரிவித்தார்.

 இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: உள்நோயாளிகளுடன் இருப்பவர்கள் இரவு நேரங்களில் பெரும்பாலும் தரையிலும், நாற்காலிகளிலுமே உறங்க வேண்டிய நிலை உள்ளது. 

ஓமந்தூரார் அரசு மருத்துவமனையைப் பொருத்தவரை தரை முழுவதும் கிரானைட் கற்கள்  பதிக்கப்பட்டிருப்பதால் கீழே படுத்தால் அதிக குளிர் ஏற்படும். அந்த அசெளகரியங்களை எதிர்கொண்ட பலர், இதுகுறித்து எங்களிடம் சில கோரிக்கைகளை விடுத்தனர்.

அதை மாநில மருத்துவப் பணிகள் கழக மேலாண் இயக்குநர் டாக்டர் உமாநாத்தின் கவனத்துக்கு நாங்கள் கொண்டு சென்று அதற்கு ஒப்புதல் வாங்கினோம். இதையடுத்து, ரூ.15 லட்சம் செலவில் கட்டில்களை வாங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

முதல்கட்டமாக 50 கட்டில்கள் வாங்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதன் காரணமாக  தற்போது உள் நோயாளிகள் உடன் தங்கியிருப்பவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளனர் என்றார் அவர்.

இதனிடையே, இதுபோன்ற சேவைகள் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் விரிவுபடுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் சிலர் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:
அரசு மருத்துவமனைகளுக்கு வரும் மக்களுக்கு தனியார் மருத்துவமனைகளுக்கு நிகரான வசதிகளை ஏற்படுத்தித் தருவது அவசியம். அப்போதுதான் அரசு மருத்துவனைகள் மீதான நம்பகத்தன்மையும், நற்பெயரும் மேம்படும்.

அதேவேளையில், அந்த வசதிகளை சிதைக்காமல் பாதுகாக்க வேண்டிய முக்கியப் பொறுப்பு மக்களிடத்தில் உள்ளது. 

ஏனெனில், பொது மருத்துவமனைகளுக்கு வரும் சிலர், அந்த வளாகத்தின் சுகாதாரம் சீர்கெடும் வகையிலேயே செயல்படுகின்றனர்.  அங்குள்ள பொருள்களை சேதப்படுத்தாமல் பயன்படுத்துவதற்கோ முன்வருவதில்லை.
எனவே, அரசு செய்து தரும் வசதிகளை பொறுப்புணர்வோடு பயன்படுத்தி மருத்துவமனை சுத்தமாக, வைத்துக் கொள்வதில் நோயாளிகளுக்கும் அவருடன் இருப்பவர்களுக்கும் பங்குண்டு என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com