ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ.க்களுக்கு மீண்டும் பணி: ஆட்சியர்களுக்கு அதிகாரம்

தமிழகத்தில் அதிகரித்து வரும் கிராம நிர்வாக அலுவலர் காலிப் பணியிடங்களை மாற்று வழிகளில் நிரப்புவதற்கான அதிகாரத்தை மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


தமிழகத்தில் அதிகரித்து வரும் கிராம நிர்வாக அலுவலர் காலிப் பணியிடங்களை மாற்று வழிகளில் நிரப்புவதற்கான அதிகாரத்தை மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை வருவாய் நிர்வாக இணை ஆணையர் எம்.லட்சுமி பிறப்பித்துள்ளார்.
தமிழக அரசின் முக்கிய திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது, பிரதான சான்றிதழ்களை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய பணிகளில் கிராம நிர்வாக அலுவலர்கள் (வி.ஏ.ஓ.) ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் பணியில் உள்ளனர். அதில், சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக இருந்து வருகின்றன.
என்ன காரணம்?: கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் குரூப் 4 பிரிவுக்குள் வருகின்றன. குரூப் 4 தேர்வு எழுதி கிராம நிர்வாக அலுவலராக தேர்ச்சி பெறுவோர் அடுத்த சில மாதங்களுக்குள்ளாக வேறு பணிகளுக்குச் சென்று விடுகின்றனர். இதனால், அந்தப் பணியிடங்கள் காலியாகி விடுகின்றன.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர்கள் கூறுகையில், மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை கிராமங்கள் வரை எடுத்துச் செல்லும் பணியை மேற்கொள்கிறோம். கடந்த சில ஆண்டுகளாக பணிச் சுமையும், அதனால் கூடுதல் மனஅழுத்தமும் ஏற்படுகிறது. 
இதனால், வாய்ப்புள்ளவர்கள் அடுத்தடுத்து டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளை எழுதி வேறு அரசுப் பணிகளுக்குச் சென்று விடுகின்றனர். இதுவே கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் காலியாக முக்கிய காரணம் என்று தெரிவித்தனர்.
மாற்று ஏற்பாடுகள்: ஆண்டுதோறும் 500-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் காலியாவதால் அரசுப் பணிகளில் பெரும் தொய்வு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையைக் களைய தமிழக அரசு மாற்று ஏற்பாடுகளை கையில் எடுத்துள்ளது. இதற்காக தமிழக அரசு ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவைச் செயல்படுத்தும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையரகம் அறிவுறுத்தியுள்ளது. 
இதுகுறித்து, வருவாய் நிர்வாக இணை ஆணையாளர் எம்.லட்சுமி பிறப்பித்துள்ள உத்தரவு விவரம்:-
மாவட்டங்களில் ஓய்வு பெற்ற ஆயிரம் கிராம நிர்வாக அலுவலர்களை ரூ.15 ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமித்துக் கொள்ள ஏற்கெனவே உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் புதிய கிராம நிர்வாக அலுவலர்கள் தேர்வு செய்யப்படும் வரையிலோ அல்லது கிராம உதவியாளர்கள் பதவி உயர்வு மூலமாக கிராம நிர்வாக அலுவலர்களாக நியமிக்கப்படும் வரையிலோ மாற்று ஏற்பாடாக ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை மாவட்ட ஆட்சியர்கள் நியமித்துக் கொள்ளலாம். ஓராண்டு அல்லது தேவைக்கேற்ற காலம் வரையில் இந்த நியமனத்தைத் தொடரலாம்.
எனவே, இந்த உத்தரவை மாவட்ட ஆட்சியர்கள் அனைவரும் பின்பற்றி, ரூ.15 ஆயிரம் தொகுப்பூதியத்தில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை காலிப் பணியிடங்களுக்கு நியமித்துக் கொள்ளலாம் என்று தனது உத்தரவில் இணை ஆணையர் லட்சுமி தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com