சிகாகோ உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் சொற்குவைத் திட்டம் தொடக்கம்: அமைச்சர் க.பாண்டியராஜன்

அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெறவுள்ள  உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் ஜூலை 5-ஆம் தேதி  நிகழ்ச்சியில் தமிழக அரசின் சொற்குவைத்
சிகாகோ உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் சொற்குவைத் திட்டம் தொடக்கம்: அமைச்சர் க.பாண்டியராஜன்


அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெறவுள்ள  உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் ஜூலை 5-ஆம் தேதி  நிகழ்ச்சியில் தமிழக அரசின் சொற்குவைத் திட்டம் தொடங்கி வைக்கப்படவுள்ளதாக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் க. பாண்டியராஜன் கூறினார். 
சென்னை தியாகராய நகரில்  கணிதம் பயிற்றுவிக்கும் தனியார் அமைப்பின் தொடக்க விழாவில் அமைச்சர் க.பாண்டியராஜன் பங்கேற்றார்.  இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது:  பத்தாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள சாம்பர்க் கருத்தரங்கு மையத்தில் வரும் ஜூலை  4-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை 4 நாள்கள் நடைபெறவுள்ளது. 
இதை அனைத்துலக தமிழ் ஆய்வு மன்றம், வட அமெரிக்க தமிழ் சங்கப் பேரவை மற்றும் சிகாகோ தமிழ்ச் சங்கம் ஆகியவை இணைந்து நடத்துகின்றன. இதில் பங்கேற்க இந்தியக் குடியரசுத் தலைவர்,  தமிழக முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 
தமிழில் உள்ள சொற்கள் அனைத்தையும் தொகுத்து நிரல்படுத்துதல், சொற்களின் இலக்கண வகைப்பாடுகளைப் பதிவு செய்தல், நிகரான சொற்களைப் பதிவு செய்தல், அடிக்கடி தேடப்படும் சொற்களுக்கு வண்ண அடையாளம் கொடுத்தல், புதிய சொற்களைப் பதிவு செய்தல் போன்ற வசதிகள் உருவாக்கப்பட்டு சொற்குவைத் திட்டம் என்ற பெயரில் இணையதளப் பொதுவெளியில் உலகெங்கும் உள்ள தமிழறிஞர்களும், தமிழ் ஆர்வலர்களும் பயன்படுத்தும் வகையில் வெளியிடப்படவுள்ளது.  உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் ஜூலை 5-ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழக அரசின் சார்பில் உருவாக்கப்பட்ட சொற்குவைத் திட்டம் தொடங்கி வைக்கப்படவுள்ளது. 
மருத்துவம்,  பொறியியல்,  தொழில்நுட்பம்,  விளையாட்டு என பலதுறை சார்ந்த சொற்களை தமிழில் அறிவதற்கும்,  தமிழ்ச் சொற்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் உலகத் தமிழர்கள் அனைவரும் இந்தத் திட்டத்துக்கு பங்களிப்புச் செய்ய வேண்டும்.  இதைக் கருத்தில் கொண்டே சிகாகோவில் நடைபெறவுள்ள மாநாட்டில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. 
மாநாட்டில்  உலக தமிழ்ச் சங்கத்தை வலுவூட்ட சில முயற்சிகள் மேற்கொள்ளப்படும். மேலும் சிவகங்கை மாவட்டம் கீழடியின் தொன்மை குறித்தும் எடுத்துரைக்கப்படும்.   ராஜராஜ சோழன் குறித்து ஒரு சில வரலாற்று உண்மை அடிப்படையில் சில புள்ளிகளை மட்டும் இணைத்து இயக்குநர் பா. ரஞ்சித் பேசியிருக்கிறார். 
ஒரு முக்கியமான கருத்தைக் கூறும்போது அது தொடர்பான சரியான ஆவணங்கள் இருக்கிறதா என்பதையும் சரிபார்க்க வேண்டும்.  அவர் கூறிய விஷயங்கள் ஆய்வுக்கு உள்படுத்தப்படும். பிரிவினையைத் தூண்டும் வகையில் இந்த விவாதத்தை தொடராமல் முழுமையான விவரங்களை, சாதனைகளை தெரிந்து கொள்ள வேண்டும்.  சாகித்ய அகாதெமி விருது பெற்ற முகமது யூசுஃப் தமிழில் விருதை கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததை வரவேற்கிறோம்.  
ஒரு கவிஞர் அல்லது படைப்பாளிக்கு எந்த மொழிக்காக விருது கொடுக்கப்படுகிறதோ, அதே மொழியில் விருதும் இருக்க வேண்டும் என்பதை தமிழக அரசின் சார்பில் முன்வைப்போம் என்றார் அமைச்சர் பாண்டியராஜன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com