திருச்சி ரயில்வே மண்டலத்தில் மட்டும் தண்ணீர் கிடைப்பதன் சிதம்பர ரகசியம் இதுவே!

தமிழகம் முழுவதும்  கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவி வரும் நிலையில், கடந்த 15 ஆண்டுகாலமாக திருச்சி ரயில்வே மண்டலம் எடுத்த முன்னெச்சரிக்கை திட்டம் காரணமாக அங்கு நிலத்தடி நீர்மட்டம் நன்கு உயர்ந்துள்ளது.
திருச்சி ரயில்வே மண்டலத்தில் மட்டும் தண்ணீர் கிடைப்பதன் சிதம்பர ரகசியம் இதுவே!


திருச்சி: தமிழகம் முழுவதும்  கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவி வரும் நிலையில், கடந்த 15 ஆண்டுகாலமாக திருச்சி ரயில்வே மண்டலம் எடுத்த முன்னெச்சரிக்கை திட்டம் காரணமாக அங்கு நிலத்தடி நீர்மட்டம் நன்கு உயர்ந்துள்ளது.

நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் வகையில், திருச்சி ரயில்வே மண்டலத்துக்கு சொந்தமான பகுதிகளில் ஏற்படுத்தப்பட்ட திட்டமே இன்று தமிழகத்துக்கு முன்னோடியாக மாறியுள்ளது.

தமிழகத்தில் பெரும்பலான இடங்களில் 300 அடி முதல் 500 அடி ஆழம் வரை போர்வெல்கள் போடப்பட்டு தண்ணீரை எடுக்கும் நிலை உள்ளது. ஆனால், நிலத்தடி நீரை அதிகரிக்கும் வகையில் 5.6 மீட்டர் அகலம், 200 அடி ஆழம் கொண்ட மிகப்பெரிய கிணறுகளை அமைத்து அதில் மழை நீரை சேமிக்கும் முயற்சி திருச்சி ரயில்வே மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில் திருச்சி ரயில்வே சந்திப்பு நிலையத்தில் மட்டும் இதுபோன்ற 3 கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது.

ரயில் நிலையக் கட்டடம், ரயில் நிலைய மேற்கூரை, மண்டல ரயில்வே அலுவலகம், ரயில்வே திருமணக் கூடம், ரயில்வே அருங்காட்சியகம் என அனைத்துக் கட்டடங்களிலும் விழும் மழை நீர் இந்த மூன்று கிணறுகளில் சென்று விழுமாறு மழை நீர் சேகரிப்புத் திட்டம் அமைக்கப்பட்டது. அந்த கிணற்றில் பல லேயர்கள் அமைக்கப்பட்டு மழை நீர் சுத்திகரிக்கப்பட்டது. இதனால், ரயில்வேக்கு சொந்தமான இடங்களில் நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்து வந்தது.

ஒவ்வொரு நாளும் திருச்சி ரயில்வே மண்டலத்துக்கு மட்டும் 36 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ரயில்வேக்கு சொந்தமான நிலங்களில் எல்லாம் இதுபோன்ற கிணறுகள் அமைக்கப்பட்டதால், தற்போது வரை திருச்சி ரயில்வே மண்டலத்தில் தண்ணீர் பற்றாக்குறையே ஏற்படவில்லை.

தண்ணீர் பற்றாக்குறையால் தமிழகமே திண்டாடி வரும் நிலையில், திருச்சி ரயில்வே மண்டலம் மட்டும் போதுமான அளவுக்கு தண்ணீரை வைத்துக் கொண்டு பணியாற்றுகிறது என்றால், ஒட்டுமொத்த தமிழகத்துக்குமே இது முன்னுதாரணமாக மாறியுள்ளது என்பதை நாம் உணர வேண்டும்.

தண்ணீர் இல்லை என்று கூறி எத்தனையோ பேர் தங்கள் வீடுகளில் இருந்த கிணறுகளில் எல்லாம் மண்ணைக் கொட்டி மூடித் தொலைத்தோம். அன்று தொலைத்தது வெறும் கிணறு மட்டுமல்ல, நிலத்தடி நீரை உயர்த்தும் ஒரு வாய்ப்பையும்தான். அன்றே கிணறை மழை நீர் சேகரிப்பு மையமாக மாற்றியிருந்தால், இன்று அண்டை மாநிலங்களில் தண்ணீருக்கா கையேந்தும் நிலை ஏற்பட்டிருக்காது.

அன்றாடம் காய்ச்சிகள் என்று ஒரு வார்த்தை உள்ளது. அதுபோல, நீர்வளங்களை எல்லாம் அழித்துவிட்டு, அந்தந்த ஆண்டு மழை பெய்தால்தான் தண்ணீர் என்ற அன்றாடம் காய்ச்சிகள் நிலைக்கு தமிழக மக்களும் வந்துவிட்டோம். இனியும் தாமதித்தால் நாம்தான் ஏமாந்து போவோம். விழித்துக் கொள்ளுங்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com