முழுமையான எலும்புக் கூடாக மாறிப் போயிருக்கும் சிங்காரச் சென்னை!

சென்னை.. நிலத்துக்கு மேலேயும் சரி, நிலத்துக்குக் கீழேயும் சரி ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இல்லாமல் முற்றிலும் வறண்டு எலும்புக் கூடாக மாறிப்போயிருக்கிறது.
முழுமையான எலும்புக் கூடாக மாறிப் போயிருக்கும் சிங்காரச் சென்னை!


சென்னை: சென்னை.. நிலத்துக்கு மேலேயும் சரி, நிலத்துக்குக் கீழேயும் சரி ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இல்லாமல் முற்றிலும் வறண்டு எலும்புக் கூடாக மாறிப்போயிருக்கிறது.

புழல் ஏரியில் இருந்து சென்னைக்குக் குடிநீர் அனுப்புவதற்காக பம்ப் செய்யும் பணி கடந்த 3 நாட்களுக்கு முன்பே நிறுத்தப்பட்டுவிட்டது.

பூண்டி ஏரியில் இருந்து மட்டுமே தற்போது தண்ணீரை பம்ப் செய்து எடுத்து வரும் பணி நடந்து வருகிறது. ஆனால் அங்கும் தற்போது 23 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே இருப்பதால் அதுவும் 2 - 3 நாட்களில் தீர்ந்து போகும் அபாய நிலை உள்ளது.

இது பற்றி அதிகாரிகள் கூறுகையில், இதே நிலை 2013 மற்றும் 2015ம் ஆண்டுகளிலும் ஏற்பட்டது. ஆனால், அந்த ஆண்டுகளில் இந்த சூழ்நிலை அக்டோபர் - நவம்பர் மாதங்களில் ஏற்பட்டது. வடகிழக்குப் பருவ மழை தொடங்க சில நாட்கள் இருந்த நிலையில் அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டதால் அப்போது அதனை சமாளித்துவிட்டோம். ஆனால் இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவில் ஜூன் மாதத்திலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த ஆண்டு வெறும் இரண்டாம்பட்சமாக கிடைக்கும் தண்ணீரை நம்பியே சென்னைவாசிகள் இருக்கிறார்கள். அதாவது வீராணம் ஏரியில் இருந்து ஒரு நாளைக்கு 180 மில்லியன் லிட்டர், கடல் நீர் சுத்திகரிப்பு ஆலைகள் மூலம் 200 மில்லியன் லிட்டர், நெய்வேலியில் இருந்து 90 மில்லியன் லிட்டர், திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் விவசாய நிலங்களில் இருந்து 110 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டு வந்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மேட்டூர் அணை நீர் மட்டம் வேகமாகக் குறைந்து வருகிறது. இந்த அணையில் தற்போது வெறும் 17 டிஎம்சி தண்ணீர் மட்டுமே உள்ளது. ஒரு வேளை, கர்நாடகாவும், காவிரியில் நமக்குரிய பங்கினை தர மறுத்தால், தற்போது நமக்கிருக்கும் ஒரே ஒரு நீர்நிலை ஆதாரம் வீராணம் மட்டுமே என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறுகிறார்கள்.

தமிழக முதல்வர் பழனிசாமி இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயிலில் தண்ணீர் கொண்டு வர ரூ.65 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு நாளைக்கு 10 மில்லியன் லிட்டர் வீதம் ரயிலில் தண்ணீர் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதற்கிடையே பருவ மழையின் முதல் மழை மண்ணில் விழுந்ததுமே தமிழகத்துக்கு கிருஷ்ணா கால்வாய் மூலம் தண்ணீர் அனுப்பிவைக்குமாறு ஆந்திராவிடம் கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை கேட்டபடி தண்ணீர் கிடைத்தால் ஜூலை 15ம் தேதி வாக்கில் கிருஷ்ணா தண்ணீர் மூலம் 2 - 4 டிஎம்சியாவது தமிழகத்துக்குக் கிடைக்கும். அதுவும் ஆந்திராவில் பெய்யும் தென் மேற்குப் பருவ மழையின் அளவைப் பொறுத்துத்தான்.

ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ணா கால்வாய் மூலம் 12 டிஎம்சி தண்ணீர் பெற வேண்டும் என்று ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டாலும், கடந்த 3 ஆண்டுகளாக ஆண்டுக்கு 2 - 2.5 டிஎம்சி தண்ணீர் மட்டுமே பெறப்படுகிறது.

எனவே, சென்னையில் தற்போதைக்கு தண்ணீர் இல்லை என்பதே நிதர்சனம். இது மக்களுக்கும் சரி ஆள்பவர்களுக்கும் சரி கொஞ்சம் கசப்பான உண்மையாகவே அமைந்துவிட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com