புதிய உச்சத்தில் ஏலக்காய் விலை: உயர் தரம் கிலோ ரூ.5,000, சராசரி கிலோ ரூ.3,245

போடி ஏலக்காய் மின்னணு ஏல வர்த்தகத்தில் ஏலக்காய் விலை இதுவரை இல்லாத அளவில் வியாழக்கிழமை, உயர் தரம் கிலோ ரூ.5,000-க்கும், சராசரி தரம் கிலோ ரூ.3244.85-க்கும் விற்பனையானது.
புதிய உச்சத்தில் ஏலக்காய் விலை: உயர் தரம் கிலோ ரூ.5,000, சராசரி கிலோ ரூ.3,245


போடி ஏலக்காய் மின்னணு ஏல வர்த்தகத்தில் ஏலக்காய் விலை இதுவரை இல்லாத அளவில் வியாழக்கிழமை, உயர் தரம் கிலோ ரூ.5,000-க்கும், சராசரி தரம் கிலோ ரூ.3244.85-க்கும் விற்பனையானது.
 கேரளம், இடுக்கி மாவட்டத்தில் 1.20 லட்சம் ஏக்கர் பரப்பளவில் ஏலக்காய் விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்கு கடந்த 6 மாதங்களுக்கும் மேல் கடும் வறட்சி நிலவி வருவதால், தற்போது ஏலத் தோட்டங்களில் ஈரப்பதமின்றி வெப்பத் தாக்கம் ஏற்பட்டு விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. 
வரத்து குறைவு: ஏலக்காய் தோட்டங்களில் விளைச்சல் இல்லாததால் சந்தைக்கு ஏலக்காய் வரத்து குறைவாக உள்ளது. இடுக்கி மாவட்டம் புத்தடி, தேனி மாவட்டம் போடி ஆகிய இடங்களில் நறுமணப் பொருள் வாரியத்தின் கட்டுப்பாட்டில் தனியார் ஏலக்காய் ஏல நிறுவனங்கள் மூலம் நடைபெறும் மின்னணு ஏலம் நடத்தப்படுகிறது. 
இங்கு வழக்கமாக நாளொன்றுக்கு சராசரியாக 80 ஆயிரம் கிலோ ஏலக்காய் விற்பனைக்கு பதிவு செய்யப்பட்டு ஏலம் நடைபெறும்.  இந்த நிலையில், கடந்த 2019- ஜனவரி மாதம் முதல் சந்தைக்கு ஏலக்காய் வரத்து படிப்படியாக குறையத் தொடங்கியது. தற்போது வரை தினமும்  சரசாரியாக 15 ஆயிரம்  கிலோ ஏலக்காய் மட்டுமே விற்பனைக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஏலக்காய் வரத்து குறைவால் சில தனியார் ஏல நிறுவனங்கள் சார்பில் அட்டவணைப்படி நடைபெற வேண்டிய வர்த்தகம் ரத்து செய்யப்பட்டது.
விலை உயர்வு: ஏலக்காய் வரத்து குறையத் தொடங்கியதை அடுத்து விற்பனை விலையும் சீராக உயர்ந்து வருகிறது. கடந்த 2019, ஜனவரி 1 -ஆம் தேதி ஏலக்காய் விலை சராசரி தரம் கிலோ ரூ.1,325.50 ஆகவும், உயர் தரம் கிலோ ரூ.1,609 ஆகவும் இருந்தது. 
இந்த விலை படிப்படியாக உயர்ந்து, போடியில் வியாழக்கிழமை (ஜூன் 20) கொச்சி, சௌத்இண்டியன் கிரீன் கார்டமம் நிறுவனம் சார்பில் நடைபெற்ற மின்னணு ஏல வர்த்தகத்தில் 13,951 கிலோ ஏலக்காய் விற்பனைக்கு பதிவு செய்யப்பட்டு, சராசரி தரம் கிலோ ரூ.3,244.85-க்கும், உயர் தரம் கிலோ ரூ.5,000-க்கும் விற்பனையானது. 
கடந்த 2018-ஆம் ஆண்டு இதே நாளில்( ஜூன் 20) நடைபெற்ற மின்னணு ஏல வர்த்தகத்தில் சராசரி தரம்  கிலோ ரூ.978-க்கும், உயர் தரம் கிலோ ரூ. 1,255-க்கும் விற்பனையானது குறிப்பிடத்தக்கது. இந்தஆண்டு 4 மடங்கு வரை விலை உயர்ந்து இது வரை இல்லாத அளவுக்கு ஏலக்காய் விலை உச்சத்தை எட்டியுள்ளது. 
ஏலக்காய் தோட்டங்களில் உற்பத்தி தொடங்கும் வரை ஏலக்காய் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது என்று வியாபாரிகள் கூறினர்.  
தென்மேற்கு பருமழை தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதால் ஏலக்காய் தோட்டங்களை சீரமைப்பதற்கும், மகசூல் பருவத்திற்கு கொண்டு வரவும் 3 மாதங்களுக்கும் மேல் ஆகும் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com