
தமிழகத்தில் மதுரை மற்றும் திருச்சியில் கட்டப்பட்டுள்ள அம்மா ஓட்டுநர் பயிற்சி நிறுவனங்களை முதல்வர் பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், முதல்வல் பழனிசாமி தலைமைச் செயலகத்தில், போக்குவரத்துத் துறையின் கீழ் இயங்கும் மோட்டார் வாகன பராமரிப்புத் துறை சார்பில் மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் அமைந்துள்ள அரசு தானியங்கி பணிமனைகளில் அரசுத் துறை ஊர்தி ஓட்டுநர்களுக்கு புத்துணர்வு பயிற்சி அளித்திடும் வகையில் 1 கோடியே 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அம்மா ஓட்டுநர் பயிற்சி நிறுவனங்களை திறந்து வைத்தார்.
2016-17ஆம் ஆண்டு போக்குவரத்துத் துறை மானிய கோரிக்கையில், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசுத் துறை ஓட்டுநர்களுக்கு புத்துணர்வுப் பயிற்சி அளிக்கவும், புதிதாக பணியில் சேர்ந்தவர்களுக்கு தகுந்த பயிற்சி அளிக்கவும் மோட்டார் வாகன பராமரிப்புத் துறையின் கீழ் இயங்கும் திருச்சிராப்பள்ளி, மதுரை, சேலம் ஆகிய இடங்களில் உள்ள அரசு தானியங்கிப் பணிமனைகளில் அம்மா ஓட்டுநர் பயிற்சி நிறுவனம் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, சேலம் அரசு தானியங்கிப் பணிமனையில் 30.6.2018 அன்று அம்மா ஓட்டுநர் பயிற்சி நிறுவனம் திறந்து வைக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் அமைந்துள்ள அரசு தானியங்கி பணிமனைகளில் அரசுத் துறை ஊர்தி ஓட்டுநர்களுக்கு புத்துணர்வு பயிற்சி அளித்திடும் வகையில் 1 கோடியே 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அம்மா ஓட்டுநர் பயிற்சி நிறுவனங்களை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
இந்த அம்மா ஓட்டுநர் பயிற்சி நிறுவனங்கள், வாகனங்கள் குறித்தான உரிய செய்முறை விளக்க உபகரணங்கள், மேம்படுத்தப்பட்ட கட்டமைப்பு மற்றும் வகுப்பறை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.