சென்னை உள்பட 5 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் சென்னை உள்பட 5 மாவட்டங்களில் சனிக்கிழமை (ஜூன் 22) மழையோ அல்லது பலத்த மழையோ பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் சென்னை உள்பட 5 மாவட்டங்களில் சனிக்கிழமை (ஜூன் 22) மழையோ அல்லது பலத்த மழையோ பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்குப் பருவ மழையின் தாக்கம் மற்றும் வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்வதற்கான சூழல் உருவாகியிருப்பதாகத் தெரிவித்துள்ள வானிலை மைய அதிகாரிகள், மாநிலத்தின் பிற மாவட்டங்களைப் பொருத்தவரை வெப்ப நிலை படிப்படியாக குறையும் என்று கூறியுள்ளனர்.
கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக தமிழகத்தில் வெயில் உக்கிரமாக இருந்து வந்தது. இதன் காரணமாக நீராதாரங்கள் அனைத்தும் வறண்டு போயின. இந்த நிலையில், வங்கக் கடலில் உருவான வாயு புயல் மற்றும் காற்றழுத்த தாழ்வு நிலையால் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் என வெளியான அறிவிப்பு சற்று ஆறுதலை அளித்தாலும், தாழ்வு நிலை திசை மாறிப் போனதால் அந்த எதிர்பார்ப்பும் பொய்த்துப் போனது.
இந்தச் சூழலில்தான், தென்மேற்குப் பருவ மழை கேரளத்தில் தொடங்கியது. அதன் காரணமாக,  அந்த மாநிலத்தை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கோவை, தேனி, திருநெல்வேலி,  நீலகிரி மாவட்டங்களில் கணிசமான அளவு மழை பதிவாகி வருகிறது.
கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக மழையை காணாத சென்னை நகரை குளிர்விக்கும் வகையில், 30 மில்லி மீட்டர் மழை வியாழக்கிழமை பதிவானது. இது சென்னைவாசிகளை மிகுந்த மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில், அடுத்த சில நாள்களுக்கு சென்னையில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது: தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் திருநெல்வேலி, தேனி, நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. வெப்பச்சலனம் காரணமாக,  சென்னை உள்பட தமிழகத்தில் ஓரிரு இடங்களில்  மிதமான மழை பெய்யக் கூடும். அடுத்து வரும் நாள்களில் மாநிலத்தின் பிற இடங்களில் வெப்பநிலை படிப்படியாகக் குறைய வாய்ப்புள்ளது.
மழை அளவு: வெள்ளிக்கிழமை காலை 8.30 நிலவரப்படி, சென்னையில் 30 மி.மீ.,  பூந்தமல்லி, காஞ்சிபுரம் மாவட்டம் கொளப்பாக்கத்தில் தலா 20 மி.மீ., நீலகிரி மாவட்டம் தேவலா, வால்பாறை, கோயம்புத்தூரில் தலா 10 மி.மீ. பெய்துள்ளது.
வெயில் சதம்: தமிழகத்தில் சென்னை, மதுரை, நாகப்பட்டினம், கரூர், கடலூர், திருச்சி, திருப்பத்தூர், தஞ்சாவூர், வேலூர், திருத்தணி, தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் 100 டிகிரிக்கும் மேல் வெள்ளிக்கிழமை வெப்பநிலை பதிவானது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com