திருவையாறில் நிகழாண்டின் இறுதிக்குள் இசை அருங்காட்சியகம் : அமைச்சர் க.பாண்டியராஜன் தகவல்

திருவையாறில் இசைக் கல்லூரி வளாகத்தில் இசை அருங்காட்சியகம் இந்த ஆண்டு இறுதிக்குள் அமைக்கப்படும் என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் கூறினார்.
சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில்  உலக இசை தின விழாவை முன்னிட்டு இசை போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்குப் பரிசு வழங்குகிறார் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் க. பாண்டியராஜன் .
சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில்  உலக இசை தின விழாவை முன்னிட்டு இசை போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்குப் பரிசு வழங்குகிறார் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் க. பாண்டியராஜன் .


திருவையாறில் இசைக் கல்லூரி வளாகத்தில் இசை அருங்காட்சியகம் இந்த ஆண்டு இறுதிக்குள் அமைக்கப்படும் என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் கூறினார்.
தமிழக அரசின் கலைப் பண்பாட்டுத்துறை சார்பில் சென்னையில் இசை விழா' நிகழ்ச்சி எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  படைப்பாற்றல் மிக்க இசை நகரமாக சென்னை மாநகரை யுனெஸ்கோ அறிவித்ததை முன்னிட்டும்,  உலக இசை தினத்தையொட்டியும் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 
இதில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் க.பாண்டியராஜன் கலந்து கொண்டு தமிழிசைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கிப் பேசியது:  தமிழ் இசை, பஜனை இசை, கர்நாடக இசை, இந்துஸ்தானி இசை, மெல்லிசை, கிராமிய இசை மற்றும் மேற்கத்திய இசையை உள்ளடக்கிய கலைஞர்களை கொண்ட நகரமாக சென்னை விளங்குகிறது. மார்கழி மாதம் நடைபெறும் இசை விழாவில், இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து கலைஞர்கள் பங்கேற்பதால் சென்னை மாநகரம் பெருமை பெற்றுள்ளது. 
இதனைக் காண ஏராளமான இசை ரசிகர்கள் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னைக்கு வந்து இசை விழா நிகழ்ச்சிகளை ஆண்டுதோறும் கண்டுகளித்து வருகிறார்கள். 
படைப்பாக்கம் மற்றும் இசைக்கான பங்களிப்பு ஆகியவற்றிற்கான சிறப்புப் பட்டியலில் தற்போது உலக அளவில் சென்னையை யுனெஸ்கோ அமைப்பு தேர்வு செய்து அங்கீகரித்துள்ளது.  இந்த அமைப்பு அங்கீகரித்த இடங்கள்,  சின்னங்கள் ஆகியவை எதிர்காலத்தில் மிகப்பெரிய சுற்றுலாத் தலங்களாக உருவெடுப்பதோடு,  உலக மக்களின் கவனத்தையும் பெறுகின்றன. மேலும் அவற்றின் மேம்பாட்டுக்கு மத்திய- மாநில அரசுகளின் சார்பில் தேவையான நிதியையும் பெற முடியும். 
 தமிழகத்தில் இசையை வளர்க்க பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.  பிரான்ஸ் நாட்டுக்குச் சென்றிருந்தபோது அங்குள்ள அருங்காட்சியகத்தில் அதிகளவில் புராதன இசைக் கருவிகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதை பார்த்தேன். 
  உலகளவில் புராதன இசைக் கருவிகள் இந்த அருங்காட்சியகத்தில் உள்ளன. இதேபோன்று தமிழகத்தில் நிகழாண்டின் இறுதிக்குள்  திருவையாறில் உள்ள இசைக் கல்லூரி வளாகத்தில் இசை அருங்காட்சியகம்  அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. 
தமிழகத்தில் சுமார் 30 ஆயிரம் இசைக் குழுக்கள் உள்ளன. திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் மூலமாக இவர்கள் ஆண்டுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.10 கோடி முதல் ரூ.15 கோடி வரை வருமானம் ஈட்டுகின்றனர். இந்தக் கலைஞர்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும். 
மேலும் முதல் முறையாக இசைக்கென தொடங்கப்பட்ட தமிழக அரசின் இசை பல்கலைக்கழகத்தின் தரம் மேம்படுத்தப்படும் என்றார்.
 இந்த விழாவில் இசைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பிரமிளா குருமூர்த்தி,  பதிவாளர் சீதாலட்சுமி, தமிழ்நாடு இயல்,  இசை, நாடக மன்றத் தலைவர் தேவா, அருங்காட்சியக ஆணையர் கவிதா ராமு,  கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com