பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்கள் வெளியீடு

நடப்பு கல்வியாண்டில் (2019}20)  எந்தெந்த பொறியியல் கல்லூரிகளில் பி.இ. இடங்கள் குறைக்கப்பட்டுள்ளன என்ற முழுமையான விவரத்தை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்கள் வெளியீடு

நடப்பு கல்வியாண்டில் (2019}20)  எந்தெந்த பொறியியல் கல்லூரிகளில் பி.இ. இடங்கள் குறைக்கப்பட்டுள்ளன என்ற முழுமையான விவரத்தை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
மாணவர் சேர்க்கை குறைந்ததால் பொறியியல் கல்லூரிகள் தாங்களாக இடங்களைக் குறைத்த விவரங்கள், உள்கட்டமைப்பு வசதி குறைபாடு காரணமாக பல்கலைக்கழக நடவடிக்கை மூலம் இடங்கள் குறைத்த விவரங்கள் இரண்டையும் சேர்த்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
பொறியியல் கல்லூரிகளில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கைக்கு முன்பாக அண்ணா பல்கலைக்கழகக் குழு ஆய்வு நடத்தி, ஏஐசிடிஇ வழிகாட்டுதல்கள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்யும். 
அவ்வாறு வழிகாட்டுதலைப் முழுமையாகப் பின்பற்றாத கல்லூரிகள் மீது பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்கும்.
அதன்படி, 2019}20 கல்வியாண்டில் 92 பொறியியல் கல்லூரிகளில் ஆசிரியர்}மாணவர் விகிதாச்சாரம் (1:20), ஆய்வகம், ஆசிரியர் கல்வித் தகுதி, கணினிகள் எண்ணிக்கை போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் முறையாக இடம்பெறாதது கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றின் மீது பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்தது. 
இந்த 92 பொறியியல் கல்லூரிகளில் வழங்கப்படும் 125 பி.இ., பி.டெக். இளநிலை பொறியியல் படிப்புகளில் 2019}20  ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை பாதியாகக் குறைக்கப்பட்டதோடு, மேலும், 53 இளநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை 25 சதவீதமாக பல்கலைக்கழகம் குறைத்தது.
அத்துடன், இந்தக் கல்லூரிகளில் வழங்கப்பட்டு வந்த 122 எம்.இ., எம்.டெக். போன்ற முதுநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு முழுமையாகத் தடை விதித்தது.
இந்த நிலையில், 2019}20 கல்வியாண்டில் கலந்தாய்வு மூலம் பொறியியல் படிப்புகளில் சேர உள்ள மாணவர்கள் அவர்களுடைய பெற்றோர் நலன் கருதி பல்கலைக்கழகத்தின் இந்த நடவடிக்கைக்கு ஆளான கல்லூரிகளின் பெயர் உள்ளிட்ட விவரங்களை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆனால், பல்கலைக்கழகம் அதை வெளியிடவில்லை. அதற்கு மாறாக, தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் 2018}19}ஆம் கல்வியாண்டில் இடம் பெற்றிருந்த இடங்கள் மற்றும் இப்போது 2019}20 ஆம் கல்வியாண்டில் இடம்பெற்றுள்ள இடங்களின் விவரங்களை அண்ணா பல்கலைக்கழகம் இப்போது வெளியிட்டுள்ளது.
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 27 பொறியியல் கல்லூரிகளில் ஒன்று மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட பாடங்களில் 25 முதல் 50 சதவீதம் வரை மாணவர் சேர்க்கை இடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. 
இதற்கு அடுத்தப்படியாக கோவை மாவட்டத்தில் 17 பொறியியல் கல்லூரிகளில் பல்வேறு படிப்புகளில் இடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தில் 10 பொறியியல் கல்லூரிகளின் பல்வேறு படிப்புகளில் இடங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
அதேபோல்,  நாமக்கல் மாவட்டத்தில் 12 கல்லூரிகளிலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 கல்லூரிகளிலும், வேலூரில் 7 கல்லூரிகளிலும், விழுப்புரம் மாவட்டத்தில் 5 கல்லூரிகளிலும், ஈரோட்டில் 9 கல்லூரிகளிலும், கரூரில் 3 கல்லூரிகளிலும், சேலத்தில் 5 கல்லூரிகளிலும், திருப்பூரில் 3 கல்லூரிகளிலும், திருச்சியில் 11 கல்லூரிகளிலும், கடலூரில் 2 கல்லூரிகளிலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 4 கல்லூரிகளிலும், தஞ்சையில் 5 கல்லூரிகளிலும், கன்னியாகுமரியில் 7 கல்லூரிகளிலும், திருநெல்வேலியில் 6 கல்லூரிகளிலும், தூத்துக்குடியில் 3 கல்லூரிகளிலும் 25 முதல் 50 சதவீதம் வரை இடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. 
விழுப்புரத்தில் 5 கல்லூரிகளிலும், மதுரையில் 5 கல்லூரிகளிலும், திண்டுக்கல்லில் 7 கல்லூரிகளிலும், ராமநாதபுரத்தில் 2 பொறியியல் கல்லூரிகளிலும், சிவகாசியில் 3 கல்லூரிகளிலும், அரியலூர், கிருஷ்ணகிரி, நாகை, பெரம்பலூர், தேனி ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு கல்லூரியிலும் பல்வேறு படிப்புகளில்  25  முதல் 50 சதவீதம் வரை இடங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் கூறியது:
உள்கட்டமைப்பு வசதி குறைபாடு காரணமாக பல்கலைக்கழக நடவடிக்கைக்கு ஆளான கல்லூரிகளின் விவரங்கள் தனியாக வெளியிடப்படவில்லை என்றபோதும், இப்போது பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அனைத்துக் கல்லூரிகளின் விவரங்களில் இருந்து நடவடிக்கைக்கு ஆளான கல்லூரிகள் எவை என்று மாணவர்கள் அடையாளம் கண்டுகொள்ள முடியும்.
இந்தப் பட்டியலில் ஒன்றுக்கும் மேற்பட்ட படிப்புகளில் 25 முதல் 50 சதவீதம் வரை இடங்கள் குறைந்திருக்கும் கல்லூரிகள், உள்கட்டமைப்பு வசதிகள் போதிய அளவில் இல்லாமல் அண்ணா பல்கலைக்கழக நடவடிக்கைக்கு ஆளானவை என்பதை மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ள முடியும் என்றனர்.
மாணவர்கள் இந்த விவரத்தை அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில், இணைப்பு அந்தஸ்து (அஃபிலியேஷன்) என்ற பகுதிக்குள் சென்று, } இணைப்புக் கல்லூரிகள்} என்பதை கிளிக் செய்தால் மாவட்ட வாரியாக கல்லூரிகள், அவற்றிலுள்ள இடங்களின் விவரங்களைப் பார்த்துத் தெரிந்துகொள்ள முடியும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com