சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும்

தமிழகத்தில் சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும்

தமிழகத்தில் சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: இலங்கையில் நடைபெற்ற தாக்குதலின்போது அங்கிருந்து தப்பித்து, உயிர் பிழைப்பதற்காக தமிழகத்துக்கு வந்து அடைக்கலம் புகுந்த இலங்கைத் தமிழர்களை இந்திய அரசு பல வழிகளில் அடக்கி வருகிறது. தமிழகத்தில் சந்தேக வழக்குகளில் கைதாகின்ற இளைஞர்களை விசாரணைக்குப் பின்னர் விடுவிப்பது வழக்கம். ஆனால், இலங்கைத் தமிழ் இளைஞர்களை தீவிரவாதிகளாகச் சித்திரித்து, எந்தவித விசாரணையும் இன்றி, செங்கல்பட்டில் இருந்த சிறப்பு முகாமில் அடைத்து வைத்தனர். இப்போது அந்த முகாமை, திருச்சி மத்திய சிறைக்கு இடம் மாற்றி, அங்கே அடைத்து வைத்திருக்கின்றனர். 
எந்தவிதமான குற்றச்சாட்டுப் பதிவும் இல்லாமல், வழக்கு விசாரணையும் இல்லாமல், எப்போது விடுதலை என்பதும் தெரியாமல், இளமைக் காலம் முழுமையும் சிறைக்கு உள்ளேயே அடைபட்டுக் கிடந்த இளைஞர்கள், தங்களை விடுவிக்கக் கோரி பல போராட்டங்களை நடத்தி இருக்கின்றனர். கடந்த சில நாள்களாக, பாஸ்கரன், ரமேஷ், செல்வம் ஆகிய மூன்று தமிழர்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இவர்களுடைய நியாயமான கோரிக்கையைத் தமிழக அரசு ஏற்காமல், புறக்கணித்து வருகிறது. மத்திய அரசு, இவர்களை குற்றப் பரம்பரையினரைப் போல நடத்தி வருகிறது. இது மனித உரிமைகளுக்கு எதிரானது. 
ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா, கனடாவுக்குக் குடிபெயர்ந்த இலங்கைத் தமிழர்களை, அந்த நாடுகள் வரவேற்று உதவிகள் அளித்து, குடிஉரிமையும் வழங்கி இருக்கின்றன. ஆனால், அகதிகளுக்கான ஐ.நா. ஒப்பந்தத்தில் இன்றுவரை இந்தியா கையெழுத்து இடவில்லை.  இந்தியாவில் குடியுரிமை கோருகின்ற இலங்கைத் தமிழர்களுடைய விண்ணப்பங்களை, 16 வாரங்களுக்குள் பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்து இருக்கின்றது. 
எனவே, இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழர்களை, இந்திய அரசு இனியும் சந்தேகக் கண்ணோடு அணுகக் கூடாது. சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும். இந்த முகாம்களை முழுமையாக நீக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com